இக்கட்டுரை
வெளியாகும் பொழுது யு.பி.எஸ்.ஆர் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது
முடிந்தும் இருக்கலாம். எது
எப்படியாயி னும் உங்களின் பிள்ளைகள் தேர்வு எழுதியது நிஜம். இதுகாரும் இவர்கள்
எப்படி தேர்வு எழுதுவார்களோ என்ற பயம். இனி, அடுத்து
தேர்வின் முடிவு எப்படி இருக்குமோ என்ற கலக்கம். இந்த இரண்டு நிலைகளையும்
எதிர்ப்பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? ‘செயல் புரிய மட்டுமே நமக்கு உரிமை உண்டு. அதன் பலன்களை எதிர்ப்பார்ப்பதற்கு
நமக்கு உரிமை இல்லை. பலன்களைத் தன்னந்தனியாக நாம் விட்டுவிட வேண்டும்.’ என்று சுவாமி விவேகானந்தா தன் கர்ம யோக நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
உங்களின் பிள்ளைகளின் உயர் வாழ்விற்காக நீங்கள் செயல்பட்டீர்களா என்பது முக்கியமே
தவிர வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. மகாபாரதத்தில் நடந்த ஒரு சம்பவத்தை
இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். போர் முடிந்த நேரமது. பகவான் கிருஷ்ணர்
பாண்டவர் குடும்பத்தையும், சோகத்தில் மூழ்கி இருக்கும்
கௌரவர்களையும் காணச் செல்கிறார். முதலில் தன் அத்தையான குந்திதேவியைச்
சந்திக்கிறார். குந்திதேவியோ கிருஷ்ணரைக் கண்டவுடன் கண்கலங்கி வணங்குகிறார். ‘ஏன் அழுகிறாய் அத்தை’ என்று கிருஷணர்
வினவுகிறார். அதற்கு, குந்திதேவி, ‘இல்லை இருஷ்ணா,போருக்கு முன் ஒவ்வொரு நாளும் உன்னை
நினைந்து உருகாத நாளில்லை. போர் நல்லபடியாக முடிந்து விட்டது. இனி உன்னை
நினைக்காமல் இருந்து விடுவோனோ என்ற பயம் வந்துவிட்டது.அதனால் தான் அழுகிறேன்’ என்றார்.
அதற்கு கிருஷ்ணர், ‘பயம் வேண்டாம் அத்தை. இனி
நடப்பவை எல்லாமே நலம் பயக்கும். உங்கள் அன்பு என்றுமே குறையாது. கலங்காதீர்கள்’ என்றார். பிறகு, கொஞ்ச நாள் கழித்து கிருஷ்ணர்
கௌரவர்களின் அம்மாவான காந்தாரியைச் சந்திக்கச் செல்கிறார். எப்படி அத்தை
இருக்கிறாய் என்றதுமே காந்தாரி கதறி அழுகிறாள். ‘கிருஷ்ணா, உன்னால் தான் என் மக்கள் எல்லாம் மாண்டு போனார்கள். நீர் செய்தது சரிதானா? இது நியாயமா? சொல்லு கிருஷ்ணா!’ என்றாள் காந்தாரி. கிருஷ்ணர் சொன்ன அந்த பதில் தான் இன்றையக் கட்டுரையின்
செய்தி. ‘அத்தை, நீங்கள்
சொல்வது தவறு. உங்கள் கணவர் பார்வை இழந்ததற்கா நீங்களும் உங்களுடையக் கண்களைக்
கட்டிக் கொண்டு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியாமல்
போனது? உங்களுடையக் கண்களைக் கட்டிக் கொண்டதால்
உங்களுடையப் பிள்ளைகளை நீங்கள் கவனிக்க முடிந்ததா?
அவர்கள் எங்கு
போனார்கள், யாரிடம் பழகினார்கள் என்பதை நீங்கள்
அறிந்தீர்களா? தீயவர்களிடம் பழகிய போது அதை நீங்கள்
தடுக்காமல் என்னைக் குறை கூறுகிறீர்களே? இது நியாயமா?’ அன்று பதில் கூறத் தடுமாறிய காந்தாரியை இன்றும் நம் சமூதாயத்தில் நிறையவே
பார்க்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தான் சுவாமி விவேகானந்தர், ‘செயல்புரிய மட்டுமே நமக்கு உரிமை உண்டு’ என்கிறார்.
சமீபத்தில் ஏர் ஏசியா நிறுவனர் டான் ஸ்ரீ தோனி பெர்னான்டஸ் அவர்கள் கூறிய
அழகான வார்த்தை இது. ‘Don’t live your life in them,but support them
where they want to go.’ என் பிள்ளைகளே எனக்கு முதன்மை என்று
எண்ணும் பெற்றோர்களே! உங்களின் வாழ்க்கையே அவர்கள் வாழ்க்கையில் திணித்து
விடாதீர்கள், மாறாக அவர்களைக் கொஞ்சம் தனித்து
விடுங்கள். உங்கள் வீட்டில் பட்டதாரிகள் பிறக்கவில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.
அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே கேள்வி. ‘காரியத்தைச்
செய்யுங்கள்,சக்தி தானாகவே வரும்’ என்கிறார் தத்துவ மேதை எமர்சன். உங்கள் பிள்ளைகள் உயர நீங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளையும்
அவர்கள் பார்த்து அசை போட்டுக் கொண்டிருக்கிறார் கள். உங்களின் பிம்பமே உங்களின்
பிள்ளைகள்.
சுவாமி விவேகானந்தா கூறிய ஒர் அழகான கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்த
விரும்புகிறேன். தாய் மான் ஒன்று தன் குட்டி மானை அழைத்துக் கொண்டு தண்ணீரில் தன்
பிம்பத்தைக் காட்டி, ‘பார்த்தாயா நான் எவ்வளவு கம்பீரமாக
இருக்கிறேன்.நான் மிகவும் தைரியசாளி’ என்று தன்
குட்டியிடம் கூறியது. கூறி முடிக்கும் தருவாயில் எங்கிருந்தோ காட்டு நாய்களின்
ஊலைகள் அதிகமாக கேட்டவுடன் தாய் மான் தன் குட்டியை அழைத்துக் கொண்டு ஓட்டம்
பிடித்தது. தூரமாக ஓடி நின்ற தாய்மானைப் பார்த்து குட்டி மான், ‘என்ன அம்மா,கம்பீரம் தைரியம் என்றெல்லாம் பேசி
விட்டு இப்படி பயந்து ஓடி வருகிறாயே?’ என்றது. அதற்கு
அந்த தாய்மான், ‘அது என்னவோ தெரிய வில்லை,காட்டு நாய்களின் சத்தம் கேட்டவுடன் எனக்கு ஒரே பயம் வந்து விடுகிறது.’என்றது. அந்த மானின் நிலையைப் போலத்தான் இன்றைய பெரும்பாலான
பெற்றோர்களும்.
உங்களைப் பார்த்து வளர்ந்ததை விட உங்களைப் பார்த்து பார்த்து
வளர்ந்தவர்கள் தான் உங்களின் பிள்ளைகள். உங்களின் செயல்கள் அவர்களின் விளைவுகள்.
முதல்வனாக இருக்க விடுவதும் முதல்வனோடு இருக்க விடுவதும் உங்களின் செயல்பாடுகளைப்
பொருத்தே இருக்கின்றது. ‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
அவையத்து முந்தி இருப்பச் செயல்’என்பது வள்ளுவர் வாக்காகும்.
அவையத்தில் பிந்தி இருப்பச் செயல் அல்ல. உலகில் வெற்றி பெற்றவர்கள் யாவரும் தத்தம்
பெற்றோர்களால் முதன்மையாக்கப்பட்டவர்கள் என்பதை உணர்வீகளா? உலக அறிவியல் மேதை தோமஸ் ஆல்வா எடிசன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டக் கண்டுபிடிப்புகளை
உருவாக்கியவர்.
ஆனால், தன் ஆசிரியரால் புறந்தள்ளப்பட்டு
பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவர். நீக்கப்பட்ட எடிசனை உலகம் போற்றும் அறிஞனாக
உருமாற்றியவர் சாட்சாத் அவர் அம்மாவே தான். பள்ளியில் பின் தள்ளப்பட்டாலும்
வீட்டில் முன் தள்ளப்பட்டப் பெருமை அவரின் அம்மாவையே சாரும். இதை விட வேறு என்ன
சான்று வேண்டும்?