அன்புசால்
மாணவ பிரம்மாக்களே! ரியோ ஒலிம்பிக் 2016 மலேசிய மக்களின் மனங்களிலே ஒரு கீறலை
ஏற்படுத்தியிருக்கிறது. சுருக்கென்று தைக்கும் அந்த வலி மறைவதற்குள் நறுக்கென்று
நாலு வார்த்தைகளை உரைக்கவிருக்கின்றேன். ரியோவை விட இனி ஒரு களம் அமையுமா என்பது
யாருக்கும் தெரியாது. இம்முறை அதிர்ஸ்ட தேவதை மூன்று முறை மலேசியாவின் கதவைத்
தட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது மலேசியாவிற்குத் தோல்வி அல்ல, வெற்றி மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கு. அவ்வளவு
தான். விதி ஒரு கதவை மூடி விட்டாலும்,
நம்பிக்கை ஒரு நாள் நிச்சயம் கதவைத் திறக்கும். அந்த நம்பிக்கை நட்சத்திரம் வேறு
யாருமல்ல, நீங்கள் தான்!
எங்கு பார்த்தாலும் லீ சோங்
வேயின் அலைகள் தான். மலேசியாவிற்கு முதல் தங்கம் கிடைத்து விட்டதைப் போலவே ஒர்
உணர்வு. ஆனால், நடந்தது வரலாற்றுப்
பதிவாகிவிட்டது. லீ சோங் வேயின் தோல்வியை நன்றாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்
மாணவர்களே! காரணம் அதற்கு வஞ்சம் தீர்க்கும் வீரராக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது? உங்கள் மனத்தினில் அந்த தனலை நன்றாக எரிய விடுங்கள்.
கொழுந்து விட்டு எரியும் அந்த தனல் ஒரு நாள் எழுச்சி வேள்வியாகட்டும். வல்லவனுக்கு
வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது பொய்யாகி விடுமா என்ன? ‘கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான
தீப்பொறிகள் சிதறுவது போல், எல்லையிற்றப்
பரம்பொருளிடமிருந்து நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள்’ என்று முண்டக உபநிடதத் தில் கூறியிருப்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்!
பாரதியார் ‘ஓடி விளையாடு’ என்று வளரும் பாப்பாவைப் பார்த்து தான் கூறினாறே தவிர வளர்ந்து விட்டப்
பெரியோரை அல்ல! அச்சம் தவிர்க் வேண்டிய தருணம் இது. ஆண்மைக் கொள்ளுங்கள். தீமையில்
விழாமல், உன்னுள் இருக்கும் பகையை
வெல்லுங்கள். அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ஸ் மொத்தம் 28 வென்று இந்த
ஒலிம்பிக்கோடு விடை பெறுகிறார். ஜமாக்காவின் உலக அதி மின்னல் ஓட்டக்காரர் உசேன்
போல்டு மொத்தம் 9 தங்கங்களோடு தன்னுடைய ஒலிம்பிக் பயணத்தை முடித்துக் கொண்டு
விட்டார். ஆனால், நம் நாட்டு பூப்பந்து வீரர் லீ சோங் வே 3 வெள்ளிப் பதக்கத்தோடு
உங்களுக்கெல்லாம் வழி விடுகிறார். அடுத்த லீ சோங் வேயாக ஏன் நீங்களாக இருக்கக் கூடாது.
இது விழித்தெழும் தருணம். மாணவ பிரம்மாக்களே! மலேசியாவுக்கு முதல் தங்கத்தை மனதிலே
உருவாக்க ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் ஆண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பது
உண்மையாயின், விளையாட்டுத் துறையைக்
கையிலெடுங்கள். மீண்டும் ஆண்டு காட்டுங்கள்! கடல் துளியில் எந்தத் துளி முதல் துளி
என்று யாரால் சொல்ல முடியும்?
விளையாட்டுத் துறையில் இந்தியர்கள்
வீறு கொண்ட காலத்தைப் பற்றி நான் கதைக்க வரவில்லை. டாக்டர் ஜெகதீசன்,இராஜாமணி,ஆறுமுகம், பறக்கும் பாவை சாந்தி போன்றோர் செய்தச் சாதனைகளை உங்கள்
மனங்களிலே விதைக்கவே நான் விழைகிறேன். ஒரு சாதாரண மனிதரை அசாதாரண மனிதராக மாற்றக் கூடிய
சக்தி சூழ்நிலக்கு உள்ளது. சாதிக்கின்றவர்கள் சூழ்நிலைக்காக காத்திருக்க மாட்டார்கள், மாறாக சூழ்நிலையைத் தானாகவே உருவாக்கிக் கொள்வார்கள்.
நீங்களும் அப்படித்தான். பள்ளி, மாவட்டம்,மாநிலம் மற்றும் தேசிய ரீதியிலான வாய்ப்புகள் கொட்டிக்
கிடக்கின்றன. வாய்ப்புகளை அள்ளுவதை விட்டுவிட்டு எட்டி நிற்கலாமா?
‘நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் சொல்வாரடி கிளியே- வாய்ச்சொல்லில் வீரரடி
கிளியே!’
என்று பாரதியார் சாட்டையடிக் கொடுத்ததை
மறந்து விடாதீர்கள்! மாணவர்களே, பழங்கதைகள் இனி நமக்கு
வேண்டாம். புதியதோர் உலகம் செய்யப் புறப்படுங்கள். ஒலிம்பிக்கில் ‘தமிழன்டா’ என்று மார்தட்டிச் சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். தமிழினத்தைத் தூக்கி
விட துடித்து எழுங்கள்! ஆக்கச் சிந்தனையோடு உறுதி கொள்ளுங்கள். மனம் உண்டானால் நிச்சயம்
மார்க்கம் உண்டு. ஒலிம்பிக்கில் சாதித்த அனைவரும் உங்களைப் போன்று ஆரம்பப் பள்ளியில்
படித்தவர்கள் தான். ஆசிரியரால் அடையாளம் காணப்பட்ட அவர்கள் பிறகு தனக்கென்று ஓர் அடையாளத்தை
உருவாக்கிக் கொண்டார்கள்.
உலகமே அதிசயத்த மாவீரன் நெப்போலியன்
ஓர் சாதாரண தளபதியிடம் தோற்றது பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்களா? அந்த தளபதி தன்னுடைய சிறு வயதில் பள்ளித் திடலிலே நெப்போலியனைப்
போன்று பொம்மைச் செய்து தோற்கடிப்பது போல் விளையாடுவாராம். அந்த சிறு வயதில் பதிந்த
அந்த பதிவு தான் பின்னாளில் நிஜமாகியது. பிரிட்டிக்ஷின் ஈடு இணையற்ற இராஜ தந்திரி வின்சன்
சர்ச்சில் தாம் படிக்கும் காலத்தில் பேனா மையை ஒரு தாளில் தெளித்து சுயமாகப் பேசிக்
கொண்டிருப்பாராம். என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு, ‘எதிரிகளின் மீது என் போர்க்கப்பல்கள் குண்டு வீசிக் கொண்டிருக்கின்ற’ என்று பதிலளிப்பாராம்.
ரியோ ஒலிம்பிக்கில் நடந்த இன்னொரு
சாதனையை நான் இங்கு பதிவு செய்கின்றேன். அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ஸை யாரும்
தோற்கடிக்க முடியாத பட்சத்தில் கொடிகட்டிப்
பறந்த அந்த வீரரை ஒரு சிறிய நாடான சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் என்ற இளைஞன்
தோற்கடித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இன்னும் பசுமையாக இருக்கிறது.
அதனால் தான் வைரமுத்து சொல்லுவார், ‘சாதிப்பதற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை’ என்று. ஒட்டுமொத்த மலேசியாவும் எழ வேண்டுமாயின் ஒலிம்பிக்கே
உங்கள் குறியாகட்டும். நான்கு ஆண்டிற்கு ஒரு முறை வந்து போகும் ஒலிம்பிக்கை உங்கள்
மனதிலே பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாக்கத்தால் நீங்கள் உயிர்த்தெழ
வேண்டும். தேர்வுக்காகக் காத்திருக்கும் மாணவ பிரம்மாக்களே! ஒலிம்பிக் எனும் தங்க மேடையில்
தங்க மகள் காத்திருக்கிறாள்...உங்களை ஆராதிப்பதற்கு!