நிமிர்ந்துப் பார் உன் நிலை
வேறு என்பார்கள். நிமிர்ந்தால் தான் ஆக்ஸிஜன் அதிகரிக்கும். நீ நிமிராத வரை இமயம்
உனக்கு உயரம் தான். குனிந்து விட்டால் தைரியம் போய்விடும். பார்ப்பவருக்கு எல்லாம்
கூப்பாடுப் போட வேண்டியிருக்கும். பிடி 3 மற்றும் எஸ்.பி.எம் தேர்வு
எழுதவிருக்கும் மாணவர்களே! தேர்வு மண்டபத்திற்குள் நிமிர்ந்து செல்லுங்கள். தேர்வு
தேவதை மாலையோடு உங்களுக்காகக் காத்திருக்கிறாள். குனிந்து விடாதீர்கள் பயம் உங்களை
மிதித்து விடும். ‘தோற்றதை விட சாதித்தவையே முக்கியம்’ என்று வீர முழக்கமிட்டான் மாவீரன் நெப்போலியன்.
அந்தச் சாதனைகளுக்கு முதல் அடித்தளம் எதையுமே நிமிர்ந்து எதிர்கொள்.
இந்த உலகத்தை உடல் ரீதியாக
நிமிர்ந்துப் பார்! மன ரீதியாக நிமிர்ந்துப் பார்! ஆன்ம ரீதியாக நிமிர்ந்துப்
பார்! நீ பாராட்டப்படுவாய். விரட்டப்பட்டவர்களைக் கொஞ்சம் நிமிர்ந்துப் பார்.
அவர்கள் எல்லோரும் குனிந்தவர்களாய் இருப்பார்கள். உங்களைக் கேலி பேசுகிறார்களா? இதோ இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். மாவீரன்
நெப்போலியன் ஒரு முறை நூல் நிலையத்தில் ஒரு புத்தகத்தை எடுப்பதற்காக எக்கிக்
கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய நண்பர்
நெப்போலியனைப் பார்த்து கொஞ்சம் கேலியாகப் பேசினார். அதற்கு நெப்போலியன், ‘நீ உடம்பு ரீதியாக என்னை விட உயரமானவனாக இருக்கலாம்.
ஆனால், அது உயரமானவன் என்று பொருள் படாது.
காரணம் நீ என்னை விட நீளமானவன். அவ்வளவுதான். உன்னை விட நான் மனதளவில் உயரமானவன்.
இது தான் எனக்கும் உனக்கும் உள்ள வித்தாயாசம்’.
நீங்கள் நிமிர்ந்தால் ஓர்
அதிர்வை ஏற்படுத்த முடியும். உலகத்தில் பறக்க விடப்படும் ஒவ்வொரு பட்டமும்
காற்றுக்கு எதிராக மேலேழுகிறதேயன்றி,
காற்றுடன் அல்ல! நீங்களும் பறக்க வேண்டும் என்றால் இந்த உலகத்திற்கு உரக்கச்
சொல்லி விடுங்கள், நான் நிமிர்ந்து விட்டேன் என்று.
வானத்தில் பறக்கும் பருந்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அது சொல்லும் செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்க ளா? வானத்தில் மழைத் தூரும் காலத்தில் பருந்தைப் பார்க்க
முடியாது. காரணம், அது ஓடி ஒளியவில்லை. மாறாக, மழைத்தூரும் மேகத்திற்கு மேலே சென்று பறந்து
கொண்டிருக்குமாம். வானத்தையும் மிஞ்சிய அந்தப் பருந்து எங்கே? நாம் எங்கே? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நிலவில் முதல் காலடிப் பதித்த நீல்
ஆம்ஸ்ட்ராங் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ‘இது எனது ஒரு காலடி அல்ல; மனித இனத்திற்கு ஒரு மைல்கல்.’ அவர் பதித்த
அந்தக் காலடிச் சுவடுகளைக் கொஞ்சம் எடுத்துப் பாருங்கள். உலகமே அவரை நிமிர்ந்து
தான் பார்த்தது. உலகப் பிரபஞ்ச அறிவு உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது. நீ
நிமிராதவரை உன்னுள் இருக்கின்ற ஓர் உலகம் இருண்டதாகவே இருக்கும். வெளிச்சம் வரும்
என்று காத்திராதே! வெளிச்சத்தை நீ தான் உருவாக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தா ஒரு முறை
காசியில் உள்ள துர்க்கா கோவிலுக்கு தனியாகச் சென்றிருந்தார். அக்கோவில் காட்டு
வழியில் இருப்பதால், ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்து
சென்றுக் கொண்டிருக்கையில் குரங்குக் கூட்டம் ஒன்று சுவாமிஜியைத் துரத்த
ஆரம்பித்தது. முதலில் பயந்து ஓடிய சுவாமிஜி ‘அங்கேயே நில்’ என்ற அசரீரி ஒலியைக் கேட்டு
துரத்தி வந்தக் குரங்குகளைப் பார்த்து நெஞ்சை நிமிர்ந்தி பார்க்கிறார். குரங்குகள்
எல்லாம் பின்வாங்குகின்றன. இந்தச் சம்பவம் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையே புரட்டிப்
போட்டது. மாணவர்களே! பெரியோர்களே! நம்மைத் துரத்துவது எதுவாக இருக்கட்டும்.
நிமிர்ந்து பார்த்துப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் போற்றப்படுவீர்கள். இல்லையேல், நீங்கள் வாழ்நாள் முழுவதும் துரத்தப்படுவீர்கள்.
துரத்தப்படுபவர்கள் வீரு கொண்டு நிமிரும் பொழுது தான்
புதிய சரித்திரங்கள் நிகழ்த்தப்படுகின்றன. கிரேக்க நாட்டின் கதைகள் பல. அவற்றுள்
ஒன்று தான் ‘டெமாஸ்தனிஸ்’ என்ற திக்குவாய் இளைஞனின் கதை. கூட்டத்தைக் கலைக்க
வேண்டுமா, கூப்பிடுங்கள் டெமாஸ்தனிஸை என்று
பெரும் கேலிக்கு ஆளாகியவன் தான் இந்த டெமாஸ்தனிஸ். ஆனால், இதற்கெல்லாம் அடங்கவில்லை. தான் நிச்சயம் ஒரு நாள் நாட்டிலேயே மிகச் சிறந்த
பேச்சாளனாக வருவேன் என்று திடமாக நம்பினான். ஒவ்வொரு நாளும் கடற்கரையில் நின்று
கொண்டு தன் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசும் பயிற்சியை மேற்கொண்டான்.
விளைவு, கூட்டத்தைக் கூட்ட வேண்டுமா
கூப்பிடுங்கள் டெமாஸ்தனிஸை என்று கூறும் அளவிற்கு நிலை உருவானது. எப்பொழுது இது
உருவானது? நிமிர்ந்து நின்று எதிர்த்த
பொழுதுதான்.
நிமிர்ந்து நில் நீயும்
தலைவனாகலாம் என்பதற்கு அண்ணல் காந்தியடிகளைப் போல் வேறெங்கும் நாம் காண இயலாது.
ஆசிய நாட்டு அரை நிர்வானப் பக்கிரி என்று
வெள்ளையர்களால் எள்ளி நகையாடப்பட்டவர். செருப்பால் அடித்துத் துரத்தப்பட்டவர்.
ஆனால், அவர் நிமிர்ந்தப் பிறகு நடந்தது
என்ன? ‘காந்தி’ என்றப் பெயரைக் கேட்டவுடன் இடி முழக்கம் போல் கலங்கிய வெள்ளைக்கார அதிகாரிகள் தாம் அதிகம். பாபுஜியின் நிமிர்ந்த
நடைக்கு வெள்ளைக்கார சாம்ராஜ்ஜியமே அதிர்ந்து போனது. பிரிட்டிஸ் அரசாங்கம்
சாய்ந்து போனது. காரணம் நீயும் தலைவனாகலாம். நிமிர்ந்துப் பார். இதைத் தான்
பெருமானார் வள்ளுவர் ‘எண்ணித் துணிக’ என்பார். ‘கொழுந்து
விட்டெரியும் நெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள்
சிதறுவது போல், எல்லையற்ற பரம்பொருளிடமிருந்து
இந்த ஆன்மாக்கள் தோன்றியிருக்கின்றன’
என்று முண்டக உபநிடதம் தெளிவாகத் தெரிவிக்கிறது. மனிதனின் ஆற்றல் எல்லையற்றது
என்று முழங்குவது இதனால்தான். மாணவச் செல்வங்களே! நீங்கள் எல்லையற்றப்
பரம்பொருளிடமிருந்து வந்தவர்கள் என்று நம்புங்கள்.
யாருக்கும் நீங்கள்
தாழ்ந்தவர்கள் அல்ல! நீ நிமிர்ந்தால் தால் தான் உலகம் உன்னை நிமிர்ந்து
பார்க்கும். ‘எழுந்திடு! விழித்திடு! குறிக்கோளை
அடையும் வரை நில்லாதே!’ என்று சுவாமி
விவேகானந்தர் வீர முழக்கமிடுவார். நீங்கள் முடங்காத வரை ஆசீர்வாதங்கள் உங்களைத்
தேடி வரும். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற
போழ்தினும், அச்சமில்லை! அச்சமில்லை!
அச்சமில்லை என்பதில்லையே!’ என்ற பாரதியாரின்
வைர வரிகளைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் நிமிர்ந்து நடப்பீர்கள்.