எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சிந்தித்துப் பாருங்கள் தீபாவளி வழிகாட்டும்!


                   தீபாவளி கரையோடிக் கொண்டிருக்கும் நேரமிது. எத்தனையோ தீபாவளி உங்களைக் கடந்து சென்றிருக்கும். சென்று விட்ட தீபாவளியை விட்டு விடுங்கள். இனி வந்திருக்கும் தீபாவளியைக் கொஞ்சம் கவனியுங்கள். தீபாவளியைப் பற்றி விளக்கும் கட்டுரை அல்ல இது. ஆனால், தீபாவளி நம்மை எப்படியெல்லாம் எழுச்சி பெறச் செய்யும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். காலஞ்சென்ற கவிஞர் சுப்பிரமணிய ராஜு எழுதிய புதுக்கவிதையைக் கொஞ்சம் கவனியுங்கள்.

வாயிலே அழுக்கென்று நீர் எடுத்து கொப்பளித்தேன்...
கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல்...
அழுக்கும் போகாமல்...
உற்றுப் பார்க்கிறேன்,நீரே அழுக்கு!

                   அக்கவிதையை நன்கு அசைப்போட்டுப் பாருங்கள். ஓர் உண்மை உங்களுக்கு விளங்கும். நாம் குடிக்கும் நீர் உயிர் வாழ்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை. அந்த நீர் அழுக்காகி விட்டபடியால், யாரையும் குறைச் சொல்லிப் பலனில்லை. ஆகையால், நீரை முதலில் நாம் சுத்தம் செய்ய வேண்டும். நான் இங்கு நீர் நீர் என்று சொல்வது நீரை மட்டும் அல்ல,மாறாக நம் சமூதாயத்திற்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஒற்றுமை எனும் நீர். தீபாவளிக்கும் நம் சமூதாயத்தின் ஒற்றுமைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. தீபாவளியில் பழைமை பேசுவதை விட, தீபாவளியில் புதுமை பேசினால் புண்ணியம் பல சேரும். தீபாவளி சிறப்பு இதழில் பக்கத்துக்குப் பக்கம் ஒற்றுமை எனும் சொல் வாழ்த்துச் செய்தியாக தெறிக்கக் காணும். அதை வெறித்துப் பார்த்த காலங்கள் தான் அதிகம்.

                   தீபாவளியை இவ்வாண்டு ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடு  வோம் எனும் சொற்றொடரைப் பார்த்து நகைத்திருக்கின்றேன். உண்மையில்  இது ஒற்றுமைத் திருநாள் தானா? முதலில் நமக்குப் புதுமையைக் காணும் மனோபாவம் வளர வேண்டும். பழமையைப் பேசிப்பேசி பாழாய்ப் போனது தான் மிச்சம்.  நமக்குள்ளே மறைமுகமாகப் பழங்கதைகள் கூறுவதிலோர் மகிமையில்லை என்று பாரதியார் மொழிந்திருப்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நரகாசுரன் என்பது பழங்கதை. ஆனால், இறைவனிடம் வரம் வாங்கியவர்கள் அனைவரும் இறைவனாலேயே வதம் செய்யப்பட்டார்கள் என்றச் செய்தி புதுமை தானே. காலத்திற்கு ஏற்றவாறு புதுமையைப் புகுத்துவதுதான் தீபாவளியின் சாலச்சிறந்த சிந்தனை மாற்றம். மறைவாய் நமக்குள்ளே பழங்கதைகள் கூறுவதிலோர் பயனில்லைஎன்பது பாரதியின் அமுத வாக்கு. இவ்வருடத் தீபாவளியை வெறும் பழங்கதையாகப் பார்க்காமல், உளம் மாறும் கதையாகப் பார்க்க முனைந்திடுங்கள். வளமான தமிழ்ச் சமூதாயத்திற்கு இதுவே ஆணிவோறாகும்.

                   ஒரு முறை சுவாமி பரமஹம்சர் அவர்கள் தன்னுடைய காளி கோயில் பூஜை மற்றும் தியானத்தை முடித்து விட்டு சீடர்களை நோக்கி வெளியே வந்தார். காளி கோயில் கடற்கரையை ஒட்டி இருப்பதால் சீடர்கள் அனைவரையும் கடற்கரைக்கு அழைத்து வந்தார் சுவாமி பரமஹம்சர். அங்கே நடக்கும் ஒரு காட்சியைக் காட்டி தன் சீடர்களைப் பார்க்கச் சொன்னார். கடற்கரை ஓரத்தில் சில நாய்கள் இறந்த ஒரு பிணத்தைத் தின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்து இன்னும் ஒரு சில நாய்கள் தூரமாக நின்று குரைத்துக் கொண்டிருந்தது. இக்காட்சியைப் பார்த்த பிறகு தன் சீடர்களுக்கு இவ்வாறு விளக்குகிறார்.'இக்காட்சியைப் போன்று தான் மானிடர்களின் வாழ்க்கையும். கிடைத்தது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கிடைக்காதது குரைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்குக் கிடைத்ததை நீங்கள் அனுபவித்து விடுங்கள். கிடைத்ததை அனுபவிக்காமல் தூர நின்று குரைக்கும் சில நாய்களைப் போன்று இருக்காதீர்கள்' என்கிறார் சுவாமி பரமஹம்சர் அவர்கள்.
                   இதைத்தான் மாற்றுச் சிந்தனை என்பார்கள். இவ்வருடத் தீபாவளிக்கு நமக்குக் கிடைத்த நிம்மதி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வளமான பொருளாதாரம், நல்ல உறவுகள் மற்றும் குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை முழுமையாக அனுபவிக்க வேண்டும். காரணம் இவையாவும் கிடைக்காமல் எத்தனையோ கோடி மக்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? இதைத் தான் கவிஞர் கண்ணதாசன், 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்று மிக அழகாகப் பாடியுள்ளார். ஒவ்வோர் வீட்டிலும் தீபத்தை ஏற்றும் பொழுது அது எவ்வளவுப் பெரிய உருமாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தால் கோடிப் புண்ணியம் நீங்கள் பெறுவீர்கள். வீட்டில் ஏற்றும் தீபம் வெறும் புற இருட்டை மட்டும் அது விரட்டவில்லை, மாறாக நம் அகத்தில் உள்ள இருட்டையும் அது விரட்டுகிறது என்பதை மறவாதீர்கள். இருளை விரட்டுவது என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் மனதைத் திறந்தீர்களா என்பதே கேள்வி. கதவைத்திற காற்று வரும், மனதைத் திற மாற்றம் வரும் என்பார்கள்.


                   நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் நரகாசுரன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்  என்பதே முக்கியம். எதிர்கால வியலை  அலசிப்பாருங்கள். அங்கு விடிவெள்ளித் தெரியும். நம் அடுத்தத் தலைமுறை வாழ ஒரு விதியை விதைக்க வேண்டும். நன்றே விதைத்தது என்றும் வீணாகாது. இளையத் தலைமுறையைத் தட்டி எழுப்பும் தருணம் தான் இந்தத் தீபத் திருநாள். உருமாற்றுச் சிந்தனையை ஒவ்வோர் வீட்டிலும் தீபத்தோடு சேர்த்துத்து ஏற்ற வேண்டும். அதில் தமிழினத்தின் ஒற்றுமையை மேலோங்கச் செய்திடல் வேண்டும். தமிழனுக்கு என்று ஓர் உயரிய அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். உலகம் மலேசியத் தமிழனைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். அதற்கு இத்தீபத் திருநாளை ஓர் அடித்தளமாய் அமைத்திடுவோம்.

                               'ஒரு இழப்பு மறுவகை லாபம்' என்பார் சீனத் தத்துவ ஞானி லௌ சு அவர்கள். நம் இனத்தின் மிகப் பெரிய இழப்பு ஒற்றுமையைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? இழந்ததை மீண்டும் பெறப் பிறந்திருப்பது தான் இந்தத் தீபத் திருநாள். மகாபாரதப் போரில் தடுமாறி நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழிகாட்டியதைப் போல், நம் தமிழினம் மீட்சிப் பெற ஒற்றுமை என்ற எண்ணெயை தீபத்தில் ஊற்றுவோம். பின் அங்கே எரிவது ஒற்றுமை ஒளியாக நிலைப்பெறட்டும். அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.