எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 11 பிப்ரவரி, 2017

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்!’


                   கல் தடுக்கி விழுந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் ஐயா கீழே விழுந்தாய் என்று கேட்டால், ‘கல் தடுக்கி விட்டது என்பார்கள். ஒரு கல் தானாகவே வந்து எப்படி தடுக்கும்? சிறுவர் முதல் பெரியவர் வரை இதே மனோநிலையைக் காணலாம். அதனால் தான் வள்ளுவப் பெருமகனார் தமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் தாமே முதல் பொறுப்பு என்று கற்களைப் போல் உறுதியாகக் கூறுகின்றார். ஆனால், அதை ஏற்கும் மனோபக்குவம் அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை. மாறாக, சிறு வயதிலேயே நாம் திருத்தினோமானால் நிச்சயம் ஒரு புதியத் தலைமுறையை உருவாக்க முடியும்.

                   ஒவ்வொரு மாணவருக்கும் தாம் வாழ்ந்த அந்த ஆறு ஆண்டுகளே அடித்தளமாய் இருக்கின்றது. பள்ளித் தொடர்பான எல்லாப் பிரச்சனைகளுக்கும் வள்ளுவர் எவ்வளவு அழகாக வழிகாட்டுகிறார் என்பனைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இப்படி நாம் சிந்திக்கத் தொடங்கி விட்டால் நிச்சயம் நம் எல்லாப் பள்ளிகளும் சிறந்தப் பள்ளிகளாக உருமாறிவிடும். அதற்கு நீங்கள் உடனடியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது தம்முடைய கருமமே’. தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அழகான ஆழமான கதை ஒன்று சொல்வார். ஓர் அம்மா தன் மகனுடன் மலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அந்தச் சிறுவன் ஒரு நாள் தன் அம்மாவுடன் கோபித்துக் கொண்டு, ‘உன்னைஎனக்குப் பிடிக்க வில்லை என்று கத்திக் கொண்டே வெளியே ஓடினான். வெளியே ஓடிய அந்தச் சிறுவன் நேரே அருகில் இருக்கும் சிறு மலை உச்சிக்குச் சென்று அழுது கொண்டே இருந்தான்.

                   அழுது கொண்டே, ‘உன்னை எனக்குப் பிடிக்க வில்லை என்று மலைகளைப் பார்த்து கத்தினான். திடீரென்று, ‘உன்னைப் பிடிக்க வில்லை என்று எதிரொலித்தது. அந்த ஒலியைக் கேட்டச் சிறுவன் சற்று பயந்து விட்டான். யாரோ தன்னைப் போல் அழுதுக் கொண்டு கத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். உடனே, நேராக தன் அம்மாவிடம் ஓடினான். நடந்தவற்றைக் கூறினான். அதனைப் புரிந்து கொண்ட அம்மா, ‘சரி, இப்பொழுது எனக்கு உன்னைப் பிடிக்கும் என்று உரக்கக் கத்திப் பார் என்று சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் உடனே ஓடி மலை உச்சியில் நின்று, ‘உன்னை எனக்குப் பிடிக்கும் உரக்கக் கத்தினான். இப்பொழுது மீண்டும் அதே குரல் எதிரொலித்தது. சிறுவனுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. என்னைப் போல் எல்லாரும் திருந்தி விட்டார்கள் என்று நிம்மதியோடு தன் அம்மாவிடம் சொல்ல ஓடினான். 
                           அதனைக் கேட்ட அம்மாவும் மகிழ்ச்சியடைந்தார். இக்கதை மீண்டும் மீண்டும் நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. எதிரொலியும் எதிராளியும் புறத்தில் காணப்பட்டாலும், அது அகத்திலிருந்தே முதலில் புறப்படுகிறது என்பதனை அறிக. அதனால் தான், பள்ளித் தொடர்பான எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அதனை நிதானமாக ஆராய வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

                   பழைய இந்தியக் கதை ஒன்று உண்டு. அன்னப் பறவை முன் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்தப் பாலை வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து விட்டு, பாலை மட்டும் பருகுமாம். இங்கு அன்னப் பறவை என்பது பறவையை மட்டும் குறிக்கவில்லை, மாறாக அறிவைக் குறிக்கிறது. இதை அறிந்து கொண்டால் தீதும் நன்றும் பிறன்தர வாரா என்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகள் நிறையக் கதைகளையும் சம்பவங்களையும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அவற்றையெல்லாம் உணர்ச்சிக்கு இடம் தராமல் அன்னப் பறவையைப் போல பிரிக்கப் பழகியிருந்தால் நீங்களும் சிறந்தப்  பெற்றோர்களாகலாம். பிள்ளைகள் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, அதனை ஆய்வுச் செய்வது அறிவுடையோர் செயல்.

                   டயஜீனஸ் என்கிற கிரேக்கத் தத்துவ ஞானி ஒருவர் இருந்தார். அவர் பகல் நேரத்தில் இடுப்பில் விளக்கைக் கட்டிக் கொண்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டே இருப்பாராம். வெளிச்சம் இருக்கின்ற போது விளக்கை எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்ட பொழுது, ‘நான் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறுவாராம். இது எப்படியென்றால், ஒரு பக்கம் தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த பெற்றோர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், மறுபக்கம் ஒவ்வொரு பெற்றோரும் மிகச் சிறந்த ஆசிரியர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தத் தேடலுக்கு காலமே பதில் கூறட்டும். ரு வகை இழப்பு, மறுவகை இலாபம் என்று சீனத் தத்துவ  ஞானி   லௌ சு உரைத்திருப்பதைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். தமிழ்ப்பள்ளியின் உயர்வுக்காக, வளர்ச்சிக்கா கொஞ்சம் இழந்தால் என்ன ஆகிவிடப் போகிறது?


                   இக்கட்டுரை வாசிக்கும் அன்பர்களே! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள முற்படுங்கள். நம் பிள்ளைகளுக்கும் இதனைக் கற்றுக் கொடுங்கள். மாற்றம் என்பது ஓர் அரிய வாய்ப்பு. உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்நோக்கினீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி அணுகினீர்கள் என்பதே முக்கியம். அந்த அணுகு முறையைத்தான் வள்ளுவப் பெருமான் தத்தம் கருமம் என்று ஏன் குறிப்பிடக் கூடாது. பரிசோதிக்கப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது என்று கிரேக்கத் தத்துவ ஞானி சோக்ராட்டீஸ் சொன்னதைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். நாம் பேசும் கேட்கும் வார்த்தைகளைப் பரிசோதித்துப் பாருங்கள். நிறைய நிஜங்கள் புரிய வரும். தமிழ்ப்பள்ளிகள் தழைத்தோங்க இப்பரிச்சோதனை அவசியமாகிறது. 

                            ஆளத்துடிக்கும் அடுத்தத் தலைமுறைக்கு வழி விடும் கடமை நமக்கு உள்ளது. அது ஏன் பிள்ளைகளாக இருக்கக் கூடாது. ஆகவே, நமக்கு ஏற்படும் பெருமைக்கும் சிறுமைக்கும் யாரையும் குறைக் கூறாமல் கருமத்தை ஆராய்வோமாயின் தமிழ்ப்பள்ளிகள் யாவும் அற்புதங்களாக உருமாறும். தமிழின் தொன்மையும், தமிழனின் பெருமையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தூரமில்லை. 

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

‘ஒரு வகுப்பறையின் நான்கு சுவற்றுக்குள் இருக்கிறது ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம்!’


                   ஒரு தாயின் கருவறையும், ஒரு கோயிலின் கருவறையும், ஒரு பள்ளியின் வகுப்பறையும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உயிர் கொடுக்கும் கருவறை ஒரு பக்கம். ஒவ்வோர் உயிரையும் உய்ப்பிக்கும் கோயில் மறுப்பக்கம். இவ்விரண்டிற்கும் இடையில் இருக்கும் வகுப்பறையானது ஒவ்வோர் உயிருக்கும் உயிர் கொடுத்து உய்ப்பிக்கிறது. இது நிஜம். அதனால் தான் திருவள்ளுவர், ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து என்று உரைக்கின்றார். ஒருவர் தான் கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையுது என்கிறார்.

                   ஒவ்வவொரு மாணவர்களின் எதிர்காலம் வகுப்பறையில் தான் எழுதப்படுகிறது, புதுப்பிக்கப்படுகிறது. அடிப்படை ஆறாண்டுகள் என்பது ஆறு ஜன்னல்களைப் போன்றது. ஒவ்வொன்றும் திறந்து கொண்டே இருக்கும். அனைவரும் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு மாணவனின் கனவுகளும், ஆசைகளும் அங்கு தான் புதுப்பிக்கப்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்திலேயே மாணவர்கள் பார்த்த அனுபவித்த முதல் மேடை அங்கு விரிக்கப்படுகிறது. வகுப்பறையின் முன் வந்து அவர்கள் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிற்காலத்தில் மிகப் பெரிய தலைவனின் உரையாக வெடிக்கிறது. அவர்கள் ஆறு ஆண்டுகள் வகுப்பறையில் வாழ்ந்த வாழ்க்கையே பிறகு இடைநிலைப்பள்ளியில் பிரதிபலிக்கிறது.

                   குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் கீதை உபதேசிக்கப்படுகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதிப்பதைப் போல், மாணவர்களுக்கு வகுப்பறையில் தான் பல உபதேசங்கள் போதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் இருந்து என்னச் செய்திகள் கொண்டு வருகிறார்கள் என்று கவனியுங்கள். அந்தச் செய்திகள் தான் அவர்களை உருவாக்குகிறது. செய்திகள் எதுவாக இருப்பினும் அதுவே அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர்கள் வெறும் ஆசிரியர்களாக இருப்பின், அவர்களை விட்டுவிடுங்கள். மாறாக, அவர்கள் ஒரு தாயாகவும் தந்தையாகவும் மாறியிருந்தால் அவர்கள் தான் கண்ணிற்குத் தெரிந்த கடவுள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

                   நமது இதிகாசத்தில் கற்பக மரம் என்று ஒன்று உள்ளது. அம்மரம் என்னக் கேட்டாலும் உடனே கொடுத்துவிடும். கற்பக மரமும் ஒரு வகுப்பறையும் ஒன்று. வகுப்பறையும் கேட்டதைக் கொடுக்கும் இடம். ஆறு ஆண்டுகள் இம்மரம் ஒரு விருட்சமாக மாணவர்களின் மனதிலே வளர்ந்திருப்பதை நம்மில் எத்தனைப் பேர் அறிந்திருப்போம்?
                                             
                   வகுப்பறையின் தோற்றத்தை வைத்தே அந்த மாணவனின் ஏற்றத்தைக் கணித்து விட முடியும். வகுப்பறையில் கரும்பலகைக் காலம் போய், வெண்பலகைக் காலமும் குறைந்து, இப்பொழுது திறன்பலகை காலம் உருவாகிவிட்டது. வகுப்பறையும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் அணுகு முறையில் உருமாற்றம் கண்டிருக்கிறது. காலத்திற்கு ஏற்ற இம்மாற்றங்கள் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவேயன்றி வேறொன்றும் இல்லை. இன்னும் நிறைய மாற்றங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அந்த நான்குச் சுவருக்குள் நடக்கும் அனைத்துமே ஒவ்வோர் மாணவனின் பிரதிபிம்பமே என்பதை அறிக.

                   வகுப்பறையைச் சொர்க்கச்சாலையாகவும் சிறைச்சாலையாகவும் உருமாற்றும் திறம் ஆசிரியர்கள் கைகளில் இருக்கிறது. ஒரு முறை முந்நாள் இங்கிலாந்து பிரதமரும் இராஜதந்திரியுமான வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய ஆரம்பப்பள்ளியில் பயிலும் பொழுது நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை வகுப்பறையில் தேர்வு எழுதும் பொழுது, வின்ஷ்டன் தேர்வு எழுதுதாமல் அந்த வெள்ளைத் தாளில் பேனா மையைத் தெளித்துக் கொண்டிருந்தாராம். ஆசிரியர் கேட்டதற்கு, ‘நான் எதிரியின் விமானப்படைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறேன் என்று கூறினாராம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரைத் தோற்கடித்தப் பெருமை இவரையேச் சாரும். அவருடைய எதிர்காலத்தை அந்த நான்குச் சுவருக்குள் எப்படி காட்டினார் பார்த்தீர்களா? இதேச் சூழல் ஒவ்வொரு வகுப்பறையிலும் நடந்த வண்ணமே இருக்கின்றன.

                   இதை உணரும் ஆசிரியர்கள் விழித்துக் கொள்கிறார்கள். விடியலுக்காக அவர்கள் காத்திருப்பதில்லை. எல்லா மாணவர்களையும் சமமாகவே நடத்துகிறார்கள். வகுப்பறையில் மாட்டியிருக்கும் சுவர்க்கடிகாரத்தைக் கொண்டு வெறும் கணிதப் பாடம் மட்டும் அவர்கள் நடத்த மாட்டார்கள். அதோடுச் சேர்த்து வாழ்க்கைப் பாடமும் நடத்துவார்கள். வகுப்பில் கடிகாரத்தைக் காட்டி,  அது ஏன் உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது என்று கேட்பார்கள். பல காரணத்தைக் கேட்டபிறகு, ‘ஓயாமல் உழைப்பதனால் அது உயரத்தில் இருக்கிறது என்பார்கள். இதைக் கேட்ட மாணவர்களுக்கு ஓர் விழிப்பு நிலை ஏற்படுகிறது. சிந்தனைத் திறனில் இஃது  உயர்நிலைக் கேள்வி.

                   மாணவர்களின் மிகப் பெரிய நம்பிக்கை ஆசிரியர்கள் தான். அந்த நான்கு சுவருக்குள் வீசப்படும் சொற்கள் மந்திரங்களாக உருப்பெருகின்றன. அந்த வார்த்தைகளையே அவர்கள் வேத வாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் மாணவர்களின் எதிர்காலம் வகுப்பறையில் நிச்சயிக்கப்படுகிறது. மாணவர்களின் கடைசி வாய்ப்பு ஆசிரியர்கள் மட்டும் தான். முதல் நிலை,இடை நிலை மற்றும் கடை நிலை என்று பிரிப்பது மாணவர்களை மட்டும் அல்ல, ஆசிரியர்களையும் சேர்த்துத் தான்.

                   ஆக, வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார்ந்த மாணவன் சோடைப்போனதுமில்லை, வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த மாணவன் ஜெயித்தாக வேண்டும் என்பதும் இல்லை. மனிதனின் அறிவிற்கு ஆதாரமாக இருப்பது அனுபவமே என்று சுவாமி விவேகானந்தர் உரைப்பார். வகுப்பறையில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் அந்த மாணவனுக்கு அடித்தளமாக அமைகின்றது. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் கூட இருக்கலாம். ஆறாண்டுகள் என்பது வெறும் தேர்வுக்கு மட்டும் அல்ல, மாணவர்கள் தேர்ந்தார்களா என்பதே முக்கியம்.


                   வாழ்க்கையில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் யாரென்று. நிச்சயம் அவர்கள் தான் படித்த அந்த ஆறாண்டுகளில் வந்த ஆசிரியர்களைப் பற்றி தான் சொல்வார்கள். அவ்வாறாயின், அந்த ஆறு ஆண்டுகள் என்பது மாணவர்களின் எவ்வளவுப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிகிறது அல்லவா? ஆதலால், வகுப்பறையை ஓர் அடுத்தளமாக்குவோம். சாதிக்கத் துடிக்கும் நம் அடுத்தத் தலை முறைக்கு வழி விட்டுத் தலை வணங்குவோம், வாரீர்.