ஒரு தாயின் கருவறையும், ஒரு கோயிலின் கருவறையும், ஒரு பள்ளியின் வகுப்பறையும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளவை என்றால் உங்களால் நம்ப
முடிகிறதா? உயிர் கொடுக்கும் கருவறை ஒரு
பக்கம். ஒவ்வோர் உயிரையும் உய்ப்பிக்கும் கோயில் மறுப்பக்கம். இவ்விரண்டிற்கும்
இடையில் இருக்கும் வகுப்பறையானது ஒவ்வோர் உயிருக்கும் உயிர் கொடுத்து
உய்ப்பிக்கிறது. இது நிஜம். அதனால் தான் திருவள்ளுவர், ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’ என்று உரைக்கின்றார். ஒருவர் தான் கற்ற கல்வி ஏழு
பிறப்பிலும் உதவும் தன்மையுடையுது என்கிறார்.
ஒவ்வவொரு மாணவர்களின்
எதிர்காலம் வகுப்பறையில் தான் எழுதப்படுகிறது, புதுப்பிக்கப்படுகிறது. அடிப்படை ஆறாண்டுகள் என்பது ஆறு ஜன்னல்களைப் போன்றது.
ஒவ்வொன்றும் திறந்து கொண்டே இருக்கும். அனைவரும் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு மாணவனின் கனவுகளும், ஆசைகளும் அங்கு
தான் புதுப்பிக்கப்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்திலேயே மாணவர்கள் பார்த்த அனுபவித்த முதல் மேடை அங்கு
விரிக்கப்படுகிறது. வகுப்பறையின் முன் வந்து அவர்கள் உரைக்கும் ஒவ்வொரு
வார்த்தையும் பிற்காலத்தில் மிகப் பெரிய தலைவனின் உரையாக வெடிக்கிறது. அவர்கள் ஆறு
ஆண்டுகள் வகுப்பறையில் வாழ்ந்த வாழ்க்கையே பிறகு இடைநிலைப்பள்ளியில்
பிரதிபலிக்கிறது.
குருக்ஷேத்திரப்
போர்க்களத்தில் தான் கீதை உபதேசிக்கப்படுகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு
போதிப்பதைப் போல், மாணவர்களுக்கு வகுப்பறையில் தான்
பல உபதேசங்கள் போதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில்
இருந்து என்னச் செய்திகள் கொண்டு வருகிறார்கள் என்று கவனியுங்கள். அந்தச்
செய்திகள் தான் அவர்களை உருவாக்குகிறது. செய்திகள் எதுவாக இருப்பினும் அதுவே
அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர்கள் வெறும்
ஆசிரியர்களாக இருப்பின், அவர்களை விட்டுவிடுங்கள்.
மாறாக, அவர்கள் ஒரு தாயாகவும்
தந்தையாகவும் மாறியிருந்தால் அவர்கள் தான் கண்ணிற்குத் தெரிந்த கடவுள் என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.
நமது இதிகாசத்தில் ‘கற்பக மரம்’
என்று ஒன்று உள்ளது. அம்மரம் என்னக் கேட்டாலும் உடனே கொடுத்துவிடும். கற்பக மரமும்
ஒரு வகுப்பறையும் ஒன்று. வகுப்பறையும் கேட்டதைக் கொடுக்கும் இடம். ஆறு ஆண்டுகள்
இம்மரம் ஒரு விருட்சமாக மாணவர்களின் மனதிலே வளர்ந்திருப்பதை நம்மில் எத்தனைப் பேர்
அறிந்திருப்போம்?
வகுப்பறையின் தோற்றத்தை வைத்தே
அந்த மாணவனின் ஏற்றத்தைக் கணித்து விட முடியும். வகுப்பறையில் கரும்பலகைக் காலம்
போய், வெண்பலகைக் காலமும் குறைந்து, இப்பொழுது திறன்பலகை காலம் உருவாகிவிட்டது.
வகுப்பறையும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் அணுகு முறையில் உருமாற்றம்
கண்டிருக்கிறது. காலத்திற்கு ஏற்ற இம்மாற்றங்கள் மாணவர்களின் தனித்திறமையை
வெளிக்கொணரவேயன்றி வேறொன்றும் இல்லை. இன்னும் நிறைய மாற்றங்கள் வந்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அந்த நான்குச் சுவருக்குள் நடக்கும் அனைத்துமே ஒவ்வோர் மாணவனின் பிரதிபிம்பமே
என்பதை அறிக.
வகுப்பறையைச்
சொர்க்கச்சாலையாகவும் சிறைச்சாலையாகவும் உருமாற்றும் திறம் ஆசிரியர்கள் கைகளில்
இருக்கிறது. ஒரு முறை முந்நாள் இங்கிலாந்து பிரதமரும் இராஜதந்திரியுமான வின்ஸ்டன்
சர்ச்சில் தன்னுடைய ஆரம்பப்பள்ளியில் பயிலும் பொழுது நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை
வகுப்பறையில் தேர்வு எழுதும் பொழுது,
வின்ஷ்டன் தேர்வு எழுதுதாமல் அந்த வெள்ளைத் தாளில் பேனா மையைத் தெளித்துக்
கொண்டிருந்தாராம். ஆசிரியர் கேட்டதற்கு, ‘நான் எதிரியின் விமானப்படைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினாராம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரைத்
தோற்கடித்தப் பெருமை இவரையேச் சாரும். அவருடைய எதிர்காலத்தை அந்த நான்குச்
சுவருக்குள் எப்படி காட்டினார் பார்த்தீர்களா? இதேச் சூழல் ஒவ்வொரு வகுப்பறையிலும் நடந்த வண்ணமே இருக்கின்றன.
இதை உணரும் ஆசிரியர்கள்
விழித்துக் கொள்கிறார்கள். விடியலுக்காக அவர்கள் காத்திருப்பதில்லை. எல்லா
மாணவர்களையும் சமமாகவே நடத்துகிறார்கள். வகுப்பறையில் மாட்டியிருக்கும் சுவர்க்கடிகாரத்தைக்
கொண்டு வெறும் கணிதப் பாடம் மட்டும் அவர்கள் நடத்த மாட்டார்கள். அதோடுச் சேர்த்து
வாழ்க்கைப் பாடமும் நடத்துவார்கள். வகுப்பில் கடிகாரத்தைக் காட்டி, ‘அது ஏன் உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது’ என்று கேட்பார்கள். பல காரணத்தைக் கேட்டபிறகு, ‘ஓயாமல் உழைப்பதனால் அது உயரத்தில் இருக்கிறது’ என்பார்கள். இதைக் கேட்ட மாணவர்களுக்கு ஓர் விழிப்பு
நிலை ஏற்படுகிறது. சிந்தனைத் திறனில் இஃது
உயர்நிலைக் கேள்வி.
மாணவர்களின் மிகப் பெரிய
நம்பிக்கை ஆசிரியர்கள் தான். அந்த நான்கு சுவருக்குள் வீசப்படும் சொற்கள்
மந்திரங்களாக உருப்பெருகின்றன. அந்த வார்த்தைகளையே அவர்கள் வேத வாக்காக எடுத்துக்
கொள்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் மாணவர்களின் எதிர்காலம் வகுப்பறையில்
நிச்சயிக்கப்படுகிறது. மாணவர்களின்
கடைசி வாய்ப்பு ஆசிரியர்கள் மட்டும் தான். முதல் நிலை,இடை நிலை மற்றும் கடை நிலை என்று பிரிப்பது மாணவர்களை மட்டும் அல்ல, ஆசிரியர்களையும் சேர்த்துத் தான்.
ஆக, வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார்ந்த மாணவன் சோடைப்போனதுமில்லை, வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த மாணவன்
ஜெயித்தாக வேண்டும் என்பதும் இல்லை. ‘மனிதனின்
அறிவிற்கு ஆதாரமாக இருப்பது அனுபவமே’
என்று சுவாமி விவேகானந்தர் உரைப்பார். வகுப்பறையில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும்
அந்த மாணவனுக்கு அடித்தளமாக அமைகின்றது. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது
கெட்டதாகவும் கூட இருக்கலாம். ஆறாண்டுகள் என்பது வெறும் தேர்வுக்கு மட்டும் அல்ல, மாணவர்கள் தேர்ந்தார்களா என்பதே முக்கியம்.
வாழ்க்கையில் யாரை
வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் யாரென்று.
நிச்சயம் அவர்கள் தான் படித்த அந்த ஆறாண்டுகளில் வந்த ஆசிரியர்களைப் பற்றி தான்
சொல்வார்கள். அவ்வாறாயின், அந்த ஆறு ஆண்டுகள்
என்பது மாணவர்களின் எவ்வளவுப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது
புரிகிறது அல்லவா? ஆதலால், வகுப்பறையை ஓர் அடுத்தளமாக்குவோம். சாதிக்கத் துடிக்கும் நம் அடுத்தத் தலை
முறைக்கு வழி விட்டுத் தலை வணங்குவோம்,
வாரீர்.