எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 30 நவம்பர், 2016

‘தமிழா மீண்டு வா! மீண்டும் வா!’......


                           ஒரு  பிறப்பு என்பது இறைவனின் கருணையின் வடிவம். அந்த பிறப்பிற்கு ஈடு இணையாக சொல்வதற்கு இந்த உலகத்தில் எதைக் காட்டுவது? ‘பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனைப் புரிந்து கொண்டால் அவனே……. இறைவன். அந்த பூஜ்ஜியத்தின் இரகசியத்தை யாரும் அறிந்தோறில்லை. அப்படி இருக்கையில், ஒரு பிறப்பு இழிவானது என்று கூறும் நம் இனத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது? பிறப்பில் ஒரே இனம், ஒரே இரத்தம் ஆனால் எப்படி பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டது? இக்கருத்தை ஏற்றுக் கொண்டு பல நூற்றாண்டுகளாக நம்பி வரும் தமிழர்களுக்கு ஒரு செய்தி.

                         எந்த நூற்றாண்டிற்கும் ஒவ்வாத இக்கருத்தினால் ஏற்பட்ட விபரீதமான விளைவு என்ன தெரியுமா? உலகத்தில் ஒன்று சேர முடியாத, ஒற்றுமை இல்லாத இனமாக பச்சைக் குத்தப்பட்டு விட்டோம். மேலும், இதன் தொடர்ச்சியான விளைவினைச் சொல்லி மாளாதுஅன்பே சிவமென்று கூறுகிறோம். அன்பு வெறும் சிவனுக்கு மட்டும்தானா? மனிதனுக்கு குறிப்பாக தமிழனுக்கு இல்லையா? அன்பு இல்லாத சமுதாயமா நாம்? அப்படி இருந்திருந்தால் தன் இனத்தையே வெட்டிச் சாய்க்கும் கலாச்சாரம் எப்படி உருவாகியிருக்கும்? தன் சொந்த இனத்தையே கொல்லும் ஓர் இனமா நாம்?

                        தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை என்பது திருமூலர் உரைத்த உலகம் அறிந்த உண்மை. மனிதனும் தெய்வமாகலாம் என்பதை யாரும் மறுக்க இயலாது. கடவுள் என்ற சொல்லைப் பிரித்தால் கட + உள் என்று தான் பிரியும். அதாவது, கடவுளின் தன்மையை உணர வெளியே தேடாமல், நம் உள்ளே கடந்து சென்று தேடி உணர்ந்தால் நிச்சயம் உணர முடியும் என்பது உலகம் கண்ட உண்மை. கடவுள் மனிதன் உருவில் வந்ததும் இக்கருத்தை விளக்குவதற்கே. சுருங்கக்கூறின், மனிதனாகப் பிறந்த அனைவரும் இறைவனை அடையவும் முடியும், இறைசக்தி யாகவே மாறிவிடவும் முடியும். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைதானா?

                                    மனிதன் என்று சொன்னால் உலகத்தில் பிறந்த எல்லாரையும் குறிக்குமே ஒழிய ஒரு தனிப்பட்ட மனிதனையோ இனத்தையோ குறிக்கவில்லை . எல்லா குருமார்களும், மகான்களும், சித்தர்களும், இறைத் தூதர்களும் மனிதனாகப் பிறந்து இறைசக்தியை அடைந்தது உண்மையென்றால், நான் சொல்வதும் உண்மைதான். நம்முடைய குலதெய்வங்களும் காவல் தெய்வங்களும் உருவான கதையைப் பார்ப்போமானால், அதன் மூலம் ஒரு தனி மனிதனில் இருந்து தான் உருவாகியிருக்கின்றது.

                                       அப்படியிருக்கையில் தமிழர்களில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது? எப்படி வந்தது என்று நான் ஆராய விரும்பவில்லை. ஆனால், தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் இந்த கொடிய நோயை இன்னுமா விட்டு வைக்க வேண்டும்? ‘மனிதருக்குள்ளே ஆயிரம் ஜாதி என்பது வஞ்சக வார்த்தைஎன்று நொந்துப்போய் சொன்ன பாரதியார் வார்த்தையைக் கொஞ்சம் உள்வாங்கிக் கொள்ளுங்கள். வஞ்சக வார்த்தைகளை இனியும் நீங்கள் நம்பாதீர்கள். நமது அடுத்தத் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழட்டும். தமிழனின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது. இனியும் நமக்குள்ளே மறைமுகமாகப் பழங்கதைகள் சொல்லிக் கொண்டு வாழ்ந்து என்னப் பயன்? ஒரு சமூகத்துக்குள்ளே இன்னொரு சமூகத்தை உருவாக்கிய இழி நிலையை வேறெங்கும் யான் பார்த்ததில்லை.

                                    எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைப் படைத்திருக்கிறான். ஆனால், அந்த உணவை அதன் கூடுகளில் கொண்டு போய் போடுவதில்லை. அதைப்போல, தமிழினம் மீள வேண்டுமாயின், மீண்டும் எழ வேண்டுமாயின் அந்தக் குறுகிய மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதிகள் என்பதெல்லாம் ஒரு வகையான மனோபாவம். இனப் பற்றுக்கு வழிவிடுங்கள். இனப் படுகொலைக்கு விதையை விதைக்காதீர்கள். ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா!என்றப் பாடலெல்லாம் அடங்கியப் பிறகு தான் விளங்குமோ? திருவள்ளுவர் மிக அழகான ஒரு குறளை வடித்திருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்என்ற குறள் தான் அது. மனிதப் பிறப்பிலே எந்த வேற்றுமையும் கிடையாது. அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு அவர்கள் குணங்கள் அமைகின்றன என்பதுதான் அதன் பொருள். இதை விட வேறென்ன விளக்கம் வேண்டும்?

                                  விரைவாக நம் இனத்திற்குள்ளே ஒரு சிந்தனைப் புரட்சி உருவெடுக்க வேண்டும். இத்தனைக் கால வரட்சியை அது ஈடுகட்ட வேண்டும். உலகில் உள்ளவை அனைத்தும் ஒரு நாள் மாறுதல் அடைந்தே தீரும். இது இயற்கையின் நியதி. தமிழினத்தின் அவலமும் அப்படித்தான். நெஞ்சில் உரமும் இன்றி,நேர்மைத் திறமும் இன்றி,வஞ்சனைச் சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி.என்று வீர முழக்கமிட்ட பாரதியை விடவா நான் சொல்லிவிடப் போகிறேன். அப்படியிருந்தும் மனம் கேளவில்லை. நட்டக்கல்லும் பேசுமோ நாதன் தான் உள்ளிருக்கையில்என்று சிவவாக்கியார் அருளியது உண்மையாயின் அந்த நாதன் நம் எல்லாரிடமும் தானே இருக்கிறார். உள்ளிருக்கும் நாதனுக்கு மனித வேற்றுமைக் கிடையாது. ஆக, மனமே நீ மாறிவிடு! மானமுள்ளத் தமிழனுக்கு மாற்றமே நிரந்தரம். நம் இனத்தின் எழுச்சிக்கு நாமே சாட்சி, நம் இனத்தின் வீழ்ச்சிக்கு நாமே சூழ்ச்சி! ஆண்ட இனம் என்பதேல்லாம் பழையக் கதை, அதைத் தாண்ட நினைப்பதே நாளைய விதை!

                             கீதையில் அர்ச்சுணன் தன் சொந்த உறவினர்களைப் பார்த்து(துரியோதனர்கள்) துக்கம் கொண்டு கலங்கி நின்ற வேலையில் தான் கிருஷ்ணரால் கீதோபதேசம் பிறந்தது. அதே போல், கலங்கி நின்றத் தமிழர்களுக்கு யார் துணை வருவார்? நிச்சயம் யாரும் வரப்போவது இல்லை! காரணம், ‘யாரும் இல்லை அங்கே...நீயே சாட்சியாக.மீண்டு வர, மீண்டும் வர வழிவிடுங்கள். விதைக்கப்பட்ட எண்ணங்களுக்கு உயிர்ப்புக் கொடுங்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேஎன்ற நன்னூலாரின் சிந்தனையை மனதிலே பொறித்துக் கொள்ளுங்கள். தமிழினம் மீட்சிப் பெற வெகு தூரமில்லை!


ஞாயிறு, 20 நவம்பர், 2016

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!’


           கீதையின் மிகப் பிரபலமான வரிகள் இவை. சரி, நமக்கு நடக்கும் எல்லாமே எப்படி நன்றாகவே நடந்தது என்று கூற முடியும்? உளவியல் ரீதியில் காரணமில்லாமல் காரியமில்லை என்பார்கள். எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையது. உலகத்தில் தனித்து என்றச் சொல்லுக்கே இடமில்லை. ஆங்கிலத்தில் இதனை, ‘everything connected to everything’ என்பார்கள். சூரியக் குடும்பத்தைப் பாருங்கள். 9 கிரகங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு கோடிக்கணக்கான வருடங்களாகச் சூரியனைச் சுற்றி வருகிறது. அது போலத்தான் நம் வாழ்க்கையும்.

                    உலகத்தில் எந்த இயக்கமும் நேர்கோட்டில் இயங்கவில்லை;மாறாக எல்லாமே வட்ட வடிவில் தான் சுழல்கிறது. அதனால் தான் வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது இயற்கையின் நியதி. நம் வாழ்க்கையில் பல விடயங்கள் நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. குழப்பங்களும் விரக்தியும் நம்மை விரட்டுகின்றன. பிரச்சனைகள் பெரிதாகி வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. இந்திலை மாற வேண்டும் என்றால் அனைத்தையும் தொடர்புப் படுத்திப் பாருங்கள். நிறைய உண்மைகள் விளங்க ஆரம்பிக்கும். இயற்கை நமக்கு மிகப்பெரிய ஆசான்.

                             கடலில் ஓர் இடத்தில் அலை எழுந்தால் அது மற்றோர் இடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது. ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ அல்லது பிராணிக்கோ துன்பம் வருகிறது. அதனால் தான் மனிதனுக்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வருகின்றது. இவ்வாறு மாறிமாறி வருவதனால் தான் கட உபநிடதத்தில் மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வு அடையாதீர்கள். எழுந்திருங்கள்.விழித்திருங்கள். குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்.என்கிறது. எகிப்திய நாட்டின் பழம்பெரும் சிந்தனையாளர் எப்பிக்தேலஸ்(55-135பி.சி) ‘Its not what happens to you, but how you react to it that matters’ மிகத் தெளிவாக உரைத்திருக்கின்றார். இதனையே நவீன காலத்தில், ‘every actions has an equal and opposite reactions’ என்று அறிவயல் மேதை ஐசக் நியுட்டன் விளித்திருக்கிறார்.

                             மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின்னர், திருதராஷ்டிரன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து, ‘கண்ணா, என் மகன்கள் 100 பேரையும் இப்போரில் இழந்து விட்டுத் தவிக்கிறேன். இதற்கு காரணம் என்ன?’ கிருஷ்ணர் கூறுகிறார், ‘50 பிறவிகளுக்கு முன்னர் ஒரு முறை நீங்கள் வேடனாய் பிறப்பெடுத்திருந்தீர். அப்போது நீங்கள் ஓர் ஆண் பறவையை வேட்டையாட முயன்றீர்கள். ஆனால், அது உங்கள் அம்பிடம் இருந்து தப்பி விட்டது. அதனால், ஏற்பட்டக் கோபத்தில் நீங்கள் கூட்டிலிருந்த அதன் குஞ்சுகளை எல்லாம் கொன்று விட்டீர்கள். அந்த ஆண் பறவை ஒன்றும் செய்ய இயலாமல் வேதனையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தத் பறவையை,அதன் நூறு குஞ்சுகளைக் கொன்றதன் மூலம் துன்புறுத்திவிட்டீர்கள். இன்று நீங்கள் துன்பம் அடைவதற்கு அதுவே காரணம்.

                             50 பிறவிகளுக்குப் பிறகும் நாம் செய்த கர்மம் நம்மைத் தொடர்கிறது என்பது இதன் வழி தெளிவாகிறது. ஆக, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற வாசகம் உண்மையாகிறது. நமக்கு நடக்கும் ஒவ்வொரு கர்மாவும் ஏற்கனவே முடிவுச்செய்யப்பட்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் பாருங்களேன். காரணம், விதி ஒரு கதவை மூடும் பொழுது நம்பக்கை இன்னொரு கதவைத் திறக்கிறது என்பார்கள். இயற்கையின் நியதி (cosmic law) என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதை அறுவடை செய்வீர்கள்என்பது தான் அது. இங்கு விதைத்தது என்பது உங்களுடைய எண்ணங்களே! எண்ணமே உலகை ஆள்கின்றன. எண்ணத்தை மாற்றினால் நிச்சயமாக வாழ்க்கை மாறும். வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த எண்ணங்களின் பதிவு. நேற்றையப் பதிவு இன்றைய வாழ்வு; இன்றையப் பதிவு நாளைய வாழ்வு.

                             இராமாயண இதிகாசம் முழுவதும் நம் வாழ்வின் பிரதி பிம்பங்களே! எடுத்தாண்டு பாருங்கள், ஆயிரம் தெளிவுகள் பிறக்கும். இராமனின் தந்தை தசரத மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி கௌசல்ய தேவிக்குப் பிறந்தவர் தான் ராமர். இரண்டாம் மனைவி கைகேயிக்குப் பிறந்தவர்தான் பரதன். இராமாயணத்தைப் புரட்டிப் போட்டது கைகேயியேச் சாறும். அழகும்,அறிவும் படைத்தக் கைகேயி தசரதனின் மேலான அன்பு மனைவியாவாள். ஆனால், சகுனியின் வார்த்தையைக் கேட்டு எப்படி மதியிழந்தாள்? இராமனிடம் மிகவும் பிரியம் கொண்டவள். இராமன் கண்டிப்பாக 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும். பரதன் நாட்டையாள வேண்டும் என்று எப்படி துரோக எண்ணம் உருவாகியது? தசரதன் இராமனை விட்டுப் பிரியத்தான் வேண்டும் என்பது வெறும் சதியா அல்லது விதியா? துயரம் தாளாத தசரதன் அதனால் மாண்டுப் போனான்.


                             தீதும் நன்றும் பிறன்தர வாரா என்ற கணியன் பூங்குன்றனார் உரைத்த அமுத மொழி இங்கு உண்மையாகிறது. ஆம், தசரதன் தன் சிறு வயதில் தவறுதலாக ரிஷி குமாரனைக் கொன்று, அவனுடைய வயோதிகப் பெற்றோர்களுக்கு எத்தகைய பெரும் துன்பத்தை ஏற்படுத்தினானோ, அது மீண்டும் நடந்திருக்கிறது. அவ்வளவுதான். ஒரு வகை இழப்பு மறுவகை இலாபம் என்று சீனத் தத்துவ ஞானி லௌ சு அவர்கள் அழகாக மொழிந்திருக்கிறார். இராமன் வனவாசம் செல்லா விட்டால் இராமாயணம் பிறந்திருக்காது. ஆக, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது மீண்டும் உண்மையாகிறது. நடந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு,ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். இயற்கை உங்களுக்கு வழிகாட்டும்.