எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 7 நவம்பர், 2016

இளைஞர்களே! முன்முனைப்பு உங்கள் மூச்சாகட்டும்.

இளைஞர்களே! முன்முனைப்பு உங்கள் மூச்சாகட்டும்.
                  
                             முன்முனைப்பு என்றச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் proactiveஎன்று பொருள்படும். ஒருவர் வாழ்வில் உயர தன்முனைப்பு எவ்வளவு முக்கியமோ, அது போல் முன்முனைப்பும் முக்கியம். முன்னேறத் துடிக்கும் இளைஞர்களே! முன்முனைப்பு உங்களுக்கு மிக அவசியம். வாழ்வில் வெற்றி பெற இந்த முன்முனைப்புச் சிந்தனை எவ்வாறு உறுதுணையாய் இருக்கிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடிப்படையில் தமிழ்ச் சமூகம் அறிவைவிட உணர்ச்சிக்கே முக்கியத்துவம் தரும் சமூகம். இளைஞர்களே!  நீங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் குமுகாயம் கூறு போடப்பட்டுவிட்டது என்பதை நம் பெருமானார் தன் அருள் குறளிலே எடுத்து இயம்பியிருப்பதை மீண்டும் அலசிப்பாருங்கள்.

                             21-ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்குறியது. மறந்து விடாதீர்கள். உணர்ச்சியைத் தூர வீசிவிட்டு, அறிவைக் கையிலெடுங்கள். ஆக்கம் உங்களுக்குத் துணை புரியும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கை என்பது உங்களுக்குள்ளே தேடிக் கொண்டிருப்பது அல்ல; மாறாக உங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்வது என்று அறிஞர் பெர்னாட்ஷா உரைத்திருப்பதை நினைத்துப் பாருங்கள். அவ்வுருவாக்கத்திற்கு முன்முனைப்புச் சிந்தனை மிக அவசியமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உரைக்கிறேன். உள்வாங்கிக் கொள்ளுங்கள். பெயர் அறிமுகம் இல்லாத ஒர் இளைஞர் தன் இயக்கத்திற்காக பணம் வசூலிக்க ஒரு பணக்காரரைச் சந்திக்கச் செல்கிறார். தான் வந்த நோக்கத்தை அந்தப் பணக்காரரிடம் விளக்குகிறார். விளக்கிய மறு நிமிடமே அந்தப் பணக்காரர் கோபாவேசத்தில் அந்த இளைஞரை கோபத்தால் விரட்டி அடிக்கிறார்.

                              அதனோடு நின்று விடாமல், அந்தப் பணக்காரர் தான் அணிந்திருந்த ஒரு செருப்பைக் கழற்றி அந்த இளைஞரைப் பார்த்து வீசி எறிந்தார். இதுவே தான் ஒரு சராசரி இளைஞராக இருந்திருந்தால் நிச்சயம் பெரும் சண்டையில் தான் முடிந்திருக்கும். நடந்ததோ வேறு. தன் மேல் விழுந்த அந்தச் செருப்பை உடனே எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார் அந்த அசாதாரண இளைஞர். மறுநாள் அந்த இளைஞர் கடைத்தெருவில் நின்று கொண்டு, இது சாதாரண செருப்பல்ல, நம் ஊரிலே பிரபலப் பணக்காரர் பயன்படுத்தியச் செருப்பு. என்று ஏலம் விட ஆரம்பித்தார். கடைசியில் அந்தச் செருப்பு பல ஆயிரம் வெள்ளிக்கு ஏலம் போனது. இப்பொழுது சொல்லுங்கள் இளைஞர்களே! நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இளைஞரின் செயல் முன்முனைப்புக்கு ஓரு சிறந்த உதாரணம். ஆதலால், முன்முனைப்புக் காட்டுங்கள் நீங்கள் வாழ்க்கையில் முந்திச் செல்வீர்கள்.

                   ‘ஒரு பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளும் இரகசியம் அதை நாம் அணுகும் முறையிலேயே அடங்கியிருக்கிறது’ என்று மனோவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். அந்த அணுகு முறையே முன்முனைப்பு ஆகும். நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப் அவர்களின் துணைவியார் டத்தின் ரோஸ்மா அவர்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். ‘Sementara saya ada pengaruh, saya mahu tinggalkan satu legasi untuk anak bangsa.’ எவ்வளவுப்  பெரிய  முன் முனைப்பான சொற்கள் அவை. சமூக வளைத்தளங்களில் அதிகமாக அவமானப்படுத்தப்படும் பெண் டத்தின் ரோஸ்மா அவர்களின் தைரியமான வார்த்தைகளை உங்கள் நெஞ்சங்களில் பொறித்துக் கொள்ளுங்கள்.

                   ஒரு சிறந்த தலைவனுக்கு அணிகலனாய் இருப்பது முன்முனைப்புச் சிந்தனை. இளைஞர்களே! நாளையத் தலைவர்கள் நீங்கள் தான். துவண்டு விடாதீர்கள். உங்களுக்குப் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கலாம். அது முக்கியமல்ல. மாறாக, நீங்கள் எப்படி அதனை எதிர் கொண்டீர்கள் அல்லது அணுகுனீர்கள் என்பதே முக்கியம். அணுகு முறையை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் முன்முனைப்பாகச் செயல்பட வேண்டும். அண்ணல் மகாத்மா காந்தியிடம் ஒரு முறை நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். திரு.காந்தி அவர்களே! இந்த உலகுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?’ என்றார் அந்த நிருபர். அதற்கு அண்ணல் அவர்கள், என்ன... செய்தியா...நான் தான் செய்தி என்று நிதானமாகக் கூறினார். தன்னையே ஒரு செய்தியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு காந்தியை விட யாருக்கு தைரியமிருக்கிறது?

                   முன்முனைப்பிற்கு ஓர் உன்னத உதாரணம் அண்ணல் அவர்கள். தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான ஜொஹனஸ் பெர்க்கில் இரயிலில் ஏறும் பொழுது ஒரு வெள்ளையன் காந்தியை காலால் எட்டி உதைத்த அந்தச் சம்பவம் தான் காந்தியின் வாழ்க்கையைப் புறட்டிப் போட்டது. அன்று அண்ணல் பயன்படுத்திய அந்த முன்முனைப்பு சிந்தனை தான் மஹாத்மா என்ற அடை மொழியைத் தந்தது. தன்முனைப்பிற்கு ஆயிரம் பேரை வழிமொழியலாம். ஆனால், முன்முனைப்பிற்கு அண்ணல் காந்தி ஒருவரே ஆணிவேர். வார்த்தைகள் தான் நம்மை வழி நடத்தும். அண்ணல் வார்த்தைகளைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் காந்தியைப் போன்று நீங்களும் தலைவனாகலாம். மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினாமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வு அடையாதீர்கள். எழுந்திருங்கள். விழித்திருங்கள். குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்! என்று கட உபநிடதம் உங்களைப் பார்த்து எரிமலையாய் குமுறுகிறது. தயாராக நீங்கள் இருந்தால் முன்முனைப்புக் காட்ட முன் வாருங்கள். செயல் புரியவே உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதன் பலன்களைப் பெறுவதற்கு உரிமை இல்லை என்று கீதை எச்சரிக்கிறது.


                   காரணம், நீங்கள் இளைஞர்கள். மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. மாற வேண்டிய கட்டாயச் சூழலிலே நீங்கள் இருக்கிறீர்கள். இளையர்களாக இருக்கும் பொழுதே முன்முனைப்புக் காட்டாவிடில், முதுமைக் காலத்தில் பல இடங்களில், சூழல்களில் நீங்கள் அடிமைகளாக இருக்க நேரிடும். ஆதலால், இளைஞர்களே! ஓடிக்கொண்டே இருப்பது தான் நதி, உலவிக் கொண்டே இருப்பது தான் காற்று, செயல் பட்டுக்கொண்டே இருப்பவன் தான் இளைஞன். இளமை உன் கால்களில் இருக்கும் போதே எது நிசம் என்பதை எட்டிவிடு. எழுதியபடி தான் நடக்கும் என்றால் விதி வசம் என்பதை விட்டுவிடு! என்ற வைரமுத்துவின் வைர வரிகளை மறந்து விடாதீர்கள். எனவே, முன்முனைப்புக் காட்ட வாருங்கள். நீங்கள் வாழ்க்கையில் முந்திச் செல்வீர்கள்.