2016-ஆம் ஆண்டின்
யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வெளியானத் தருணம் இது. நாடெங்கிலும் ஒரே பேச்சு
ஏன் 8A-க்கள் குறைந்தன? இவ்வாண்டு நாடு முழுவதும் 161 மாணவர்கள் எல்லாப்
பாடங்களிலும் A-க்கள் பெற்று பெற்றுள்ளனர். பெருமை
தான். ஆனால், அதோடு சேர்த்து 7A,6A,5A,4A,3A, 2A,1A-க்கள் மற்றும் முழுத்தேர்ச்சிப்
பெற்ற மாணவர்களின் பெருமைகளைக் கூறாமல் இருப்பது எவ்வளவுப் பெரிய மாயை. அதனை உதரித்தள்ளவே
இச்சிறிய சிந்தனைக் கட்டுரை.
‘எங்கே நீ மாபெரும் முடிவைக் காண்கிறாயோ அங்கே ஒரு
மாபெரும் ஆரம்பமும் உண்டாகப் போகிறது என்று உறுதியாக நம்பு!’ என்று மகான் அரவிந்தர் கூறியிருக்கிறார். இந்த
முடிவு நிச்சயம் நம் பிள்ளைகளின் எதிர்கால உருமாற்றத்திற்கு மாபெரும் ஆரம்பம்
என்பதை நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருக்கிறோம்? 2016-ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் ஆரம்பப்பள்ளி அடைவு நிலை மதிப்பீட்டுச்
சோதனையை மொத்தம் 452,721 மாணவர்கள் எழுதினர். அதில், 4892 மாணவர்கள் அனைத்துப் படங்களிலும் ஏ பெற்றனர்.
நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளிலுள்ள 14,674 மாணவர்கள் இந்த வருடம் யூ.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனைக்கு அமர்ந்தனர்.
இவர்களில் 161 மாணவர்கள் மட்டுமே எல்லாப் பாடங்களிலும் ஏ பெற்றனர். 161
மாணவர்களோடு சேர்த்து 7A,6A,5A
மாணவர்கள் மட்டுமே கொண்டாடப்பட விருக்கின்றனர், பாராட்டப்பட விருக்கின்றனர்.
‘Education is not the learning of
facts,but training the mind to think’ என்று 21-ஆம் நூற்றண்டின் முதன்மை மனிதர்,அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உரைத்ததைக் கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள். இக்கூற்றிற்கு ஏற்ப இவ்வருடத் தேர்வு 21-ஆம் நூற்றாண்டின்
கல்வியை முன்னிறுத்தி தேர்வு முறை அமைந்திருந்தது. 80 விழுக்காடு கேள்விகள்
மாணவர்களின் உயர்நிலை சிந்தனை ஆற்றலைக் கொண்டிருந்தது. இவ்வருட மாணவர்கள் தாம்
கே.எஸ்.எஸ்.ஆர் எனும் புதியப் பாடத்திட்டத்தின் முதல் குழுவினர். எல்லா
மொழிப்பாடத்திலும் 20 விழுக்காடு புறவய வினாக்களும், 80 விழுக்காடு அகவய வினாக்களும் கொடுக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?
படித்துப் புரிந்து
கொண்டு மட்டும் எழுதாமல், சிக்கல்
தீர்க்கும் திறனையும், படைப்பாற்றல் திறனையும்
மேம்படுத்தும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன. ஒரு மகிழ்ச்சியான விடயம்
என்னவென்றால், இவ்வருடம் பெரும்பாலானப் பள்ளிகள்
தத்தம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டியுள்ளது. இது நிச்சயம்
கொண்டாடப்பட வேண்டிய விடயம். புதுமுக வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களின்
விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
தேர்வின்
முடிவுகளைப் பற்றி நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்கள் இவ்வாறு
தம்முடைய டுவிட்டர் தளத்தில் இப்படி எழுதுகிறார், ‘Jika keputusan kurang memuaskan, usaha lebih
lagi.’ இந்த
வரிகளை ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரும்
கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நமது முயற்சிகளின்
வலிமையைத்தான் நாம் விரும்பும் முடிவுகளின் பலனாக நாம் கருத வேண்டும்.’ என்று மனோதத்துவ மேதை ஜேம்ஸ் ஆலன் மொழிந்திருப்பதை
ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முயற்சியை அதிகரிப்பதன் மூலம் தேர்ச்சி விகிதத்தையும்
அதிகரிக்க முடியும். ‘கீழே விழுவது தவறல்ல; மீண்டும் எழாததுதான் தவறு’ என்பார்கள். 8A-க்கள் கிடைக்கவில்லை என்று
புலம்புவதை விட, முயற்சியின் வலிமையை அதிகரிப்பது
எவ்வளவோ மேல்.
சுவாமி விவேகானந்தர்
தன்னுடைய ‘இராஜ யோக’ உரையில் அர்த்தமுள்ள கதை ஒன்று சொல்வார். ஒரு தாய் மான் தன்னுடைய குட்டி மானை
அழைத்துக் கொண்டு குளத்தைக் காட்டி, ‘இதோ
பார், நான் எவ்வளவு அழகாகவும், கம்பீரமாகவும், தைரியமாகவும் இருக்கிறேன். என் கொம்பின் அழகைப்பார்.’ என்று தன் குட்டி மானிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தது. அப்பொழுது, தூரத்தில் காட்டு நாய்களின் ஊலையைக் கேட்டவுடன் அந்த
மான் திக்குத் தெரியாமல் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. குட்டி மானும் கூடவே ஓடியது.
வெகு தூரம் சென்றவுடன் குட்டி தன் தாய் மானைப் பார்த்து, ‘ஏன் அம்மா இப்படி பயந்து ஓடி வந்தாய்?’ அதற்கு அந்த தாய் மான், ‘ஏனோ
தெரியவில்லை, காட்டு நாய்களின் ஊலையைக்
கேட்டாலே ஏதோ ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது.’ இதே நிலை தான் நம் அனைவருக்கும். அடுத்து என்ன ஆகுமோ என்ற அந்த பயமே நம்மை
நிலைத்தடுமாற வைத்து விடும்.
மேன்மை அடைய ஒரே வழி, விடாமல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பதுதான். நிச்சயம் இந்நிலை மாறும். அடுத்தாண்டு
8A-க்கள் மற்றும் முழுத்தேர்ச்சி நிச்சயம்
அதிகரிக்கும். ‘இன்னும் கடினமாக முயற்சி செய்’ என்பதே நம் வேதமாகட்டும். மலேசியக் கல்வி மேம்பாட்டு பெரும்
திட்டத்தை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். பிடி3 தேர்வைப் போன்று யு.பி.எஸ்.ஆர் தேர்வும்
பள்ளிசார் மதிப்பீடு நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை உணருங்கள். சமன்நிலையும் இயைபும்
பெற , தனி மனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும்
ஒரு தொடர் முயற்சியே மலேசியக் கல்வி மேம்பாட்டு பெரும் திட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.
வெற்றிகள் நிலையல்ல,தோல்விகள் முடிவல்ல. இரண்டையும் கடந்து
முன்னேறும் முயற்சியே முக்கியம்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகை யினானே’ என்ற நன்னூலாரின் சிந்தனைக்கு ஏற்ப சீறிப்பாய தயாராகுங்கள். 2017-ஆம் ஆண்டு நிச்சயம்
ஒரு புதிய விடிவெள்ளியைக் கொடுக்கும் என்று ஆழமாக நம்புங்கள். புகழோடுத் தோன்றத் தமிழ்ப்பள்ளிகள்
துளிர்த்து எழட்டும்!