எனது வலைப்பதிவு பட்டியல்
செவ்வாய், 9 மே, 2017
‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்!’
‘எழுச்சியும்
முன்னேற்றமும் ஒவ்வொரு
உயிர்க்கும்
பிறப்பிலே கிடைத்த உரிமை’
-
இரிக் வேதம்
பிறப்பிலே கிடைத்த அந்த உரிமையை
யார் தன் சிறு வயதிலே உணர்கிறார்களோ அவர்களே தன்னை அறிந்தவர்கள். தன்னை அறியும்
அறிவு ஒவ்வொரு உயிர்க்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை. அந்த உரிமை உங்களைப் போன்ற
மாணவர்களுக்குத் தான் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய நம்பிக்கை எதுவோ
அதுவே நீங்கள். உன்னை அறிந்தால் என்பது உன்னிடமுள்ளத் திறமை அல்லது ஆளுமையைக்
குறிக்கும். அவ்வளவுதான். அந்த த் திறமை வெளிப்படும் போது நீ ஆளப்பிறந்தவன் என்று
உலகம் உன்னை அங்கீகரிக்கிறது. ‘குழைந்தைகளின் கேள்விகளில்
நமக்கு அறிவு பிறக்கிறது. அறிவின் தேடுதல் அவர்களிடம் தான் இருக்கிறது’ என்று 20-ஆம் நூற்றாண்டின் அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் உரைத்திருப்பதை
உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.
‘சாதிப்பதற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை’ என்று
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
சாதித்தவர்கள் அனைவருமே தத்தம் சிறு வயதில் மிளிர்ந்தவர்களே! இந்தியாவின் முதல்
இலக்கிய நோபல் பரிசை வென்ற ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறீர்களா? தாகூருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்தியாவிற்கும்
பாக்கிஸ்தானுக்கும் தேசிய கீதம் எழுதிக் கொடுத்தப் பெருமை தான் அது. காலத்தால்
அழியாத அப்பெருமையை உருவாக்கிய தாகூரைப் பற்றி தன் சிறு வயதில் அவருடைய பாட்டி
இப்படி எழுதுகிறார். ‘என் பேரப்பிள்ளைகள் எல்லோரும் சிறப்பாக
வளர்ந்து வருகிறார்கள். ஆனால், தாகூரை நினைத்தால் எனக்குப்
பயமாக இருக்கிறது. எதிலுமே நிலையில்லாமல் இருக்கிறானே?’
தாகூர் குடும்பத்தில் எல்லோரும் சிறந்த கல்விமான்களாக உருவாயினர். ஆனால், தாகூர் மட்டும் தான் உலகம் போற்றும் மாந்தராக சரித்திரத்திலே இன்றுவரை
வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம், தாகூர் தன் சிறுவயதிலே
தன்னை அறிந்தார், தரணி ஆண்டார்.
‘உலகத்தை வெல்வதை விட, சுயத்தை(தன்னை) வெல்வதே சிறந்த வெற்றி’ என்றார்
புத்தர். தன்னை வென்ற இன்னொருவரைப் பற்றி எடுத்துரைக்கின்றேன். சிந்தித்துப்
பாருங்கள். மகாகவி பாரதியார் தான் அவர். பாரதியின் அப்பாவின் பெயர்
திரு.சின்னச்சாமி. அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைத்திருந்தார். எதிர்காலத்தில்
தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவு. ஆனால், பாரதியின் கனவு வேறாக இருந்தது. பாடம் செய்யாமல் பல முறை ஆசிரியரிடம்
தண்டனைப் பெற்றுள்ளார். பரீட்சையில் தோல்வி கண்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டச்
செய்தி உங்களுக்குத் தெரியுமா? சிறுவயதிலேயே கவிதையின் மேல்
மோகங்கொண்ட சுப்பிரமணியன் மகாகவி பாரதியாக உருமாறியது எப்படி? தன் சொந்த அப்பாவால் புறக்கணிக்கப்பட்ட பாரதி,
தமிழ் உலகை ஆண்ட வரலாற்றைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இது போன்ற பாரதிகள் இன்னும் எத்தனை பேர்
பள்ளியில் இருக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. வீட்டில் புறக்கணிக்கப்
பட்டாலும், பள்ளியை நாடி வரும் இவர்களுக்கு ஆறு ஆண்டுகள்
வெறுமனே இருந்து விடக்கூடாது. ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவதொரு தனித்திறமை நிச்சயமாக
இருக்கிறது. அந்தத் திறமையை வெளிக்கொணர்வதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின்
முதன்மை கடமை. உலகம் கண்டெடுத்த மாபெரும் அறிஞர்களான தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இருவருமே பள்ளியிலிருந்துப் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான்.
இவர்கள் மீண்டது எப்படி? நிச்சயமாக அவர்களின் பெற்றோர்கள்
தான் காரணம். அதேப்போல, வீட்டில் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ
மனிதர்கள் மீண்டு வந்தது பள்ளியினால் தான்.
ஒரு வேப்ப மரத்தை
அதன் படியே வளரவிட்டால் அது ஓரு பெரிய மரமாக வளர்ந்து தன்னைச்
சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படுகிறது. ஆனால், அதே வேப்ப
மரத்தை ஒரு ஜாடியில் வைத்து வளர விட்டால், அதன் வளர்ச்சி
குன்றிவிடும். அதேப்போல் தான் ஒவ்வொரு மாணவரின் திறமையும். அவர்களை இயற்கையோடு
வளரவிட்டால் தன்னில் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். மாறாக, அடைத்து வைத்தால், அதட்டி வைத்தால், அவர்களை ஆட்டிப்படைத்தால் அந்த வேப்பமரம் போல் வளர்ச்சி குன்றிவிடும்.
திருமந்திரத்தில் திருமூலர், ‘எழுதாத
புத்தகத்தின் எழுத்து’ என்று விவரித்திருப்பார். புத்தகம்
எழுதப்படவில்லை. எப்படி எழுத்து வரும்? அது தான் ஞான நிலை.
அதே ஞான நிலைதான் நம் பிள்ளைகளின் தனித்திறமை. இறைவன் அதனை மறைத்து வைத்ததற்குக்
காரணமும் அதுதான்.
தாமஸ் ஆல்வா எடிசனின்
வாழ்வைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். வகுப்பறையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, பள்ளியை விட்டே விரட்டி யடிக்கப்பட்டவர் தான் இந்த எடிசன்.
தன் அம்மாவின் அரவணைப்பிலும் வழிகாட்டலிலும் தன்னை அறிந்தார் மாமேதை எடிசன். ‘அவரவர் வினைவழி அவரவர் வந்தார், அவரவர் வினைவழி
அவரவர் அனுபவம்’ என்று புத்தப்பெருமான்
எடுத்துரைத்திருப்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அவருடைய அனுபவம் இன்று நமக்கு
பாதையாகிறது. கல்வியில் ஆர்வமில்லாமல் மந்தமாகத் திரிந்துக் கொண்டிருக்கும்
மாணவர்களை எடிசனுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். தாகூருக்கும்,
பாரதிக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள். சிறு வயதில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு
வாய்ப்பக் கூடுமாயின் அவர்களாலும் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அந்த ஒரு அரிய
வாய்ப்பை பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும்
தான் வழங்க வேண்டும். தங்கத்தைத் தோண்டித்தான் எடுக்க வேண்டும். முத்தை
மூழ்கித்தான் எடுக்க வேண்டும். நம் பிள்ளைகளின் திறமையை தேடித்தான் எடுக்க
வேண்டும்.
‘மனிதனின்
ஆன்மாவின் வெளிப்பாடே அவனிடம் உள்ள ஆற்றல்தான்’ என வினவுவார்
சுவாமி விவேகானந்தர். அந்த ஆற்றலை சிறு வயதிலே கண்டெடுப்பது என்பது வைரத்தைத்
தீட்டுவது போன்றது. தோண்டி எடுத்த வைரம் வைரமாக இருக்காது. அதை வெட்ட வேண்டும், அறுக்க வேண்டும், உடைக்க வேண்டும், கலக்க வேண்டும், பிறகு தீட்ட வேண்டும். இவ்வளவும்
செய்தால் தான் வைரம் பிறக்கும். நம் பிள்ளைகளும் அப்படித்தான். இருக்கின்ற ஆற்றலை
வெளிக்கொணர நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டும். ‘பண்ணியப்
பயிரில் புண்ணியம் தெரியும்’ என்பார் ஔவை பிராட்டியார். நம்
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முயற்சி செய்து தான் பாருங்களேன்.
‘வாருங்கள்!சுவாமி விவேகானந்தர் அழைக்கிறார்!’
சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மாணவ பிரம்மாக்களே! நீங்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தைகளில் சுவாமி விவேகானந்தரையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவர் காட்டும் பாதைக்குத் திரும்பிவிடுங்கள். உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். ‘எழுமின் விழிமின்’ என்ற அவரின் முதல் வார்த்தையை உங்கள் மூச்சாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பள்ளி வாழ்க்கையில் அவர் ஓர் அடையாளமாக இருக்கட்டும். உங்கள் பன்னிரெண்டு ஆண்டு கால பள்ளி வாழ்க்கையில் ஒரு தடையத்தை ஏற்படுத்த வேண்டுமா? இனி வரும் விடயத்தைக் கடைப்பிடியுங்கள். உங்கள் தடைகளெல்லாம் தகர்ந்து போகும்.
“All power is within you; you can do anything and everything.
Believe in that; don’t believe that you are weak,
stand up and express the divinity with in you.”
சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரைத்த இவ்வரிகளை உங்களின் வாழ்க்கைப் பயணமாக்கிப் பாருங்கள். உங்களை யாரும் வெல்ல முடியாது. காரணம், ‘எல்லா சக்திகளும் உன்னுள் அடங்கியிருக்கின்றன,உன்னால் எதையும் அல்லது எல்லாவற்றையும் சாதிக்க முடியும். உன்னை ஒருபோதும் பலவீனன் என்று நினையாதே. எழுந்து உன்னுள் இருக்கின்ற ஆன்ம ஞானத்தை வெளிப்படுத்து’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த வார்த்தைகளை வேறு எங்கும் நீங்கள் கேட்க முடியாது. இந்த வரிகளை உங்கள் ஆழ்மனதில் பொன்னெழுத்துக்களால் பொரித்துக் கொள்ளுங்கள். ‘மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாமே’ என்பது அகத்திய முனிவரின் வைர வரிகள். மாணவர்களின் மனதினைச் செம்மைப்படுத்தி இரும்புக் கோட்டையாக உருவாக்குவதே விவேகானந்தரின் உயரிய இலட்சியமாகும்.
ஒரு முறை சுவாமி விவேகானந்தர் பாடச் சாலையைக் கடந்து செல்லும் பொழுது ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு சிறுவன் மட்டும் விளையாடாமல் தனியாக கீதையைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த சுவாமி விவேகானந்தர், அந்தச் சிறுவனிடம், ‘கீதைப்படிப்பதை வைத்து விட்டு முதலில் திடலில் சென்று விளையாடு. விளையாண்டப் பிறகு உடல் சுறுசுறுப்பாகும். பலம் பெறும். பிறகு நீ படித்துக் கொள்ளலாம்’ என்றார். இப்படிச் சொல்வதற்கு சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு யாருக்குத் தைரியம் வரும்? உடலினை உறுதியாக வைத்திருப்பதற்கு சுவாமி விவேகானந்தர் மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார். புதிய ஆத்திச் சூடியில் பாரதியும் ‘உடலினை உறுதிச் செய்’ என்ற வேத வாக்கும் அவ்வாரே உரைக்கின்றது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலரின் வாக்கும் உடல் உறுதிக்கு பெரும் பங்கு கொடுத்திருப்பது சிந்திக்கத் தக்கது.
சுவாமி விவேகானந்தர் இந்த உலகத்திற்கு 3 மிக முக்கியச் செய்தியை வழங்கியிருக்கின்றார். முதலாவது, ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். இரண்டாவது, இறைவனும் நீயும் வேறல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் ஆன்மாவாக உரைந்து கிடக்கிறான். மூன்றாவதாக, மனிதனின் ஆன்மாவின் வெளிப்பாடே அவனிடம் உள்ள ஆற்றல் தான். இந்தச் சமூதாயத்தை மீட்சியுறச் செய்ய இதை விட வேறென்னச் செய்தி வேண்டும்? மாணவ பிரம்மாக்களே! அச்செய்திகளை உங்களின் வாழ்க்கையாக்கி உலகை வெல்லுங்கள். இறைவன் உன்னைப் படைத்திருக்கிறான் என்பதை விட, இறைவன் உன்னுள் உரைந்துகிடக்கிறான் என்பதே உண்மை. அதனால்தான் சுவாமி அவர்கள் உங்களை தெய்வீகமானவர்கள் என்று உரைக்கின்றார்.
மாணவர்களாகிய நீங்கள் யாரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். எடுத்தக் காரியத்தை விடுத்து, அடுத்தக் காரியத்திற்குச் செல்லாதீர்கள். அதனால் கருதியக் காரியம் கைவிட்டுப் போகும் என்பார் சுவாமி அவர்கள். சுவாமி அவர்கள் தன் வீட்டிலிருந்து பட்டிணத்திற்குச் செல்ல ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றைக் கடக்க பரிசில் ஏறிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் சுவாமி அவர்கள் பரிசிலில் ஏறி அக்கரைக்குச் செல்லும் பொழுது, அவ்வூர் சாமியார் ஒருவர் தண்ணிலே மிதந்து கொண்டு வந்து கரை ஏறுவார். இதை ஒவ்வொரு முறையும் சுவாமி அவர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அந்த சாமியார் சுவாமியைப் பார்த்து, ‘பார்த்தீர்களா, எந்தக் காசும் கொடுக்காமல் தண்ணீரில் மிதந்து வந்து செல்கிறேன்.இந்தச் சக்தியைப் பெறுவதற்கு நான் காட்டில் 20 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறேன். நீங்களும் சாமி தான். இப்படி காசு கொடுத்து வரலாமா?’
இதைக் கேட்ட சுவாமி அவர்கள் அந்தச் சாமியாரை ஓங்கி ஒரு அரை அரைந்தார். பிறகு சுவாமி அவர்கள், ‘5 சென் கொடுத்தால் அக்கரைக்குச் சென்று விடலாம். அதை விடுத்து, இதற்காக 20 ஆண்டுகளை வீணடித்து விட்டீர்களே.உன் குடும்பத்தைப் பார்க்காமல் கடமை தவறலாமா?’ அந்த அரை சாமியாருக்கு மட்டும் அல்ல, நமக்கும் தான். உணருங்கள் மாணவர்களே! ‘மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள்.விழித்திருங்கள். குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்!’ என்று கட உபநிடதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதையேத் தான் சுவாமி விவேகானந்தர், “எழுந்திடு,விழித்திடு குறிக்கோளை அடையும் வரை நில்லாதே!” என்று உலகத்திற்கு எடுத்து இயம்புகின்றார்.
‘நான் விரும்பும் நூறு இளைஞர்களைக் கொடுங்கள்; இந்த நாட்டினையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்று வீர முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர். அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா? உறங்கியது போதும் விழித்தெழுங்கள் மாணவச் செல்வங்களே! அடங்கத் தெரிந்தவனுக்குத் தான் ஆளவும் தெரியும். கீழ்ப்படியும் எண்ணம் உடையவனே தலைவனாகவும் முடியும். உங்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் இலட்சியத்தை எண்ணித் துணிந்தப் பின் உங்களை உலகமே வாளெடுத்து எதிர்த்து நின்றபோதிலும், கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள். சாதிக்கத் துடிக்கும் மாணவர்களே! உங்கள் சாதனையின் வேகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இதோ சுவாமி விவேகானந்தர் அவர்களே முழக்கமிடுகிறார்,‘நீருக்குள் அமுங்கியிருப்பவன் வெளியே வர எப்படித் துடிக்கிறானோ, அத்தகைய வேகம் நமக்கு வேண்டும்!’
‘மன உளைச்சலை, மன விளைச்சலாக்குங்கள்!’
இருபது ஆண்டுகளுக்கு முன்பு
ஆசிரியர் தொழிலில் இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை நிச்சயமாக வேறு. அன்று உள்ள ஆசிரியர்கள் படித்துக்
கொடுக்கும் வேலையை மட்டும் செய்தார்கள். ஆனால், இன்று உள்ள
ஆசிரியர்கள் முடித்துக் கொடுக்கும் வேலையை அதிகமாகச் செய்கிறார்கள். அன்று
படித்துக் கொடுப்பதைத் தவிர்த்து ஒரு சில வேலைகள் தான் இருந்தன. ஆனால், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட வேலைகளை முடித்தாக வேண்டும் என்பது தான்
உண்மை. தொழிற்சாலையில் ஒருவருக்கு ஒரு வேலை தான். ஆசிரியருக்கோ பல்வேறு வேலைகள்.
இருந்தபோதிலும், ஓர் உண்மையை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மாற்றங்களை
நாம் தவிர்க்க முடியாது. ஆனால், நமக்கு ஏற்படும் தாக்கங்களை
நிச்சயமாக நாம் தவிர்க்க முடியும். மன உளைச்சல் என்பது நோய் அல்ல, மாறாக அஃது ஒரு வகையான மனோநிலை. ‘தீதும் நன்றும்
பிறன்தர வாரா’ என்று சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் மிக
அழகாகச் சொல்லுவார். மலேசியப் பள்ளிகளின் வரலாற்றில் ஓர் ஆசிரியர் வேலை பழுவினால்
தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. காரணம், பெரும்பாலான
ஆசிரியர்கள் மன உளைச்சலாக இருக்கிறார்கள் என்பதை விட, அதை மன
விளைச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. விளைச்சல் மனோபாவம் உயர்வைத்
தரும். மஹாபாரதத்தில் குருக்ஷேத்திரப்
போர் தொடங்குவதற்கு முன்பு அர்ஜுனன் பின்வாங்கியதைக் கொஞ்சம் சிந்தித்துப் பருங்கள்.
அர்ஜுனன் அடைந்த மன உளைச்சலை விடவா நாம் அடைந்து விட்டோம்?
கிருஷ்ணர் எப்படி அர்ஜுனனுக்கு
வழி காட்டினாரோ, அதேப் போல ஒவ்வொரு
ஆசிரியருக்கும் நிச்சயம் வழிகாட்ட யாராவது
இருப்பார்கள். நம்பங்கள்.இது உண்மை. மன உளைச்சல் எப்படி வேண்டுமானாலும் வரலாம், ஆனால், எடுத்தக் கடமையில் உறுதியாக இருந்தீர்களா
என்பதே கேள்வி. அப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒரு
குருவிடம் ஒருவன் தன் உள்ளங் கையில் சிறு பட்டாம் பூச்சியை மூடி வைத்துக் கொண்டு, ‘குருவே,இப்பட்டாம் பூச்சி
உயிராக உள்ளதா அல்லது இறந்து விட்டதா’ என்று வினவினான். அதற்கு குரு மிக அழகாக
பதிலளித்தார். அந்தப் பதிலை ஒவ்வொரு ஆசிரியரும் தன் மனதிலே பொறித்துக் கொள்ள
வேண்டும். ‘ஐயா,அந்தப் பட்டாம் பூச்சி
உயிராக இருப்பதும் இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது’ என்றார் குரு. சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியர்களே. இனி உங்கள் மனதிலே
விளைச்சல் அதிகமாகும். ‘மனம் செம்மையானால் மந்திரம்
செம்மையாமே’ என்பது திருமூலர் வாக்கு. மனதைச்
செம்மைப்படுத்துங்கள். அதுவே உங்கள் மந்திரமாகும்.
‘கற்றல் என்பது பிரார்த்தனை,கற்பித்தல் என்பது வழிபடு’ என்பது என்னுடைய ஆழமானச் சிந்தனை. பிரார்த்தனையும் வழிபாடும் சரியாக
இருந்தால் எப்படி மன உளைச்சல் வரும்? ஒரு பறவை தான் பறப்பதை
நம்பி வாழ்கிறது. ஒரு சிறுத்தை தன் வேகத்தை வாழ்கிறது. ஒரு மீன் கூட தன் நீச்சலை
நம்பி வாழ்கிறது. அதேப்போல், ஒரு ஆசிரியர் எதை நம்பி வாழ்கிறார்கள்
என்ற கேட்டால் என்ன பதிலாக இருக்கும்? ஆசிரியர்கள் கூறும்
அந்த பதில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அதனால் தான் தத்துவ மேதை சாக்ராட்டீஸ், ‘பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்று பகன்றுள்ளார். நீங்கள் எண்ணும் எண்ணங்களையும், சொல்லும் சொற்களையும் பரிசோதித்துப் பாருங்கள். மன உளைச்சல் மன
விளைச்சலாகும்.
ஒரு மருத்துவமனையில் இரு நோயாளிகளைச்
சேர்த்தனர். இருவரும் ஒரே அறையில் இருவேறு கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அவருடைய கட்டில் சன்னலின் அருகில்
இருந்தது. இரண்டாவது நோயாளி கொஞ்சம் தூரத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார்.
தூரத்தில் இருந்த நோயாளி வெளியில் என்ன நடக்கிறது என்று சன்னல் ஓரத்தில் இருக்கும்
நோயாளியிடம் கேட்டு தெரிந்து கொள்வார். சன்னல் ஓர நோயாளியோ தனக்குத் தெரிந்த
எல்லாவற்றையும் கூறுவார். வெளியில் அழகான பூங்கா இருப்பதாகவும், நிறையக் குடும்பங்கள் அங்கு தன் பிள்ளைகளுடன்
விளையாடுவதாகவும்,பெரிய ஏரி உள்ளதாகவும்,அழகிய மரங்களும் பூச்செடிகளும் உள்ளதாகவும் வர்ணித்துக் கூறுவார். இது சில
வாரங்கள் வரை தொடர்ந்தது.
திடீரென்று ஒரு நாள் சன்னல்
ஓரத்தில் இருந்த நோயாளி இறந்து விட்டார். மிகவும் கவலை அடைந்த இன்னொரு நோயாளி தன்
கட்டிலை சன்னல் ஓரமாக மாற்றச் சொன்னார். சன்னலைத் திறந்து பார்க்கும் பொழுது
அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு இறந்த நோயாளிச் சொன்ன எந்த காட்சியும்
இல்லை. ஒரு கட்டிடம் முழுவதுமாக மறைத்திருந்தது. இறந்த நோயாளி என்னிடம் வெளியேத்
தெரியும் காட்சிகளை கூறினார் என்று மருத்துவத் தாதியிடம் கேட்ட பொழுது, ‘அவருக்குக் கண் பார்வை இல்லை’ என்று கூறினார். அதிர்ந்த அந்த நோயாளி அவருக்காக கண்ணீர் சிந்தினார். நாமும்
ஒரு நிமிடம் அவருக்காக மௌனமாக இருப்போம்.
கண்ணில்லாதவர் நமக்கு வழிகாட்டுகின்றார். தன் மன உளைச்சலை எவ்வளவு அழகாக
மன விளைச்சலாக்குகின்றார் பாருங்கள். தொழிலை இரசிக்கத் தொடங்குங்கள். ஒரு
பள்ளியின் ஆச்சர்யமும் ஆசீர்வாதமும் எது தெரியுமா? பிள்ளைகள் தான். பிள்ளைகளை
முன்னிருத்திச் செயல்படுங்கள். பெரு நிம்மதி கிடைக்கும். சுயநலம் மேலிட்டால், வீண்
மன உளைச்சல்தான். சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியப் பெரு மக்களே! இயங்குதல்
வாழ்க்கை, முடங்குதல் மரணம் என்பார்கள். முடங்கிக் கிடந்தால்
சிலந்திக் கூட சிறை பிடிக்கும் என்பார்கள். நீங்கள் இருக்கும் பள்ளிகளில் முடங்கி
விடாதீர்கள். இருக்கும் வேலைகளில் மூழ்கி விடாதீர்கள். இங்கு நீந்துபவனுக்குத்
தான் வாழ்க்கையே தவிர, தத்தளிப்பவனுக்கு அல்ல. நம்மைப்
படைத்த கடவுள் ஒருவன் என்பது உண்மையாயின், படைக்கப்பட்ட
நாமும் ஒரே மதிப்பீட்டுக்கு உரியவரே என்பதை மறந்து விடாதீர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

