எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 9 மே, 2017

‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்!’

எழுச்சியும் முன்னேற்றமும் ஒவ்வொரு
உயிர்க்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை
-      இரிக் வேதம்

                பிறப்பிலே கிடைத்த அந்த உரிமையை யார் தன் சிறு வயதிலே உணர்கிறார்களோ அவர்களே தன்னை அறிந்தவர்கள். தன்னை அறியும் அறிவு ஒவ்வொரு உயிர்க்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை. அந்த உரிமை உங்களைப் போன்ற மாணவர்களுக்குத் தான் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய நம்பிக்கை எதுவோ அதுவே நீங்கள். உன்னை அறிந்தால் என்பது உன்னிடமுள்ளத் திறமை அல்லது ஆளுமையைக் குறிக்கும். அவ்வளவுதான். அந்த த் திறமை வெளிப்படும் போது நீ ஆளப்பிறந்தவன் என்று உலகம் உன்னை அங்கீகரிக்கிறது. குழைந்தைகளின் கேள்விகளில் நமக்கு அறிவு பிறக்கிறது. அறிவின் தேடுதல் அவர்களிடம் தான் இருக்கிறது என்று 20-ஆம் நூற்றாண்டின் அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் உரைத்திருப்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.

                   சாதிப்பதற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்று கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். சாதித்தவர்கள் அனைவருமே தத்தம் சிறு வயதில் மிளிர்ந்தவர்களே! இந்தியாவின் முதல் இலக்கிய நோபல் பரிசை வென்ற ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறீர்களா? தாகூருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் தேசிய கீதம் எழுதிக் கொடுத்தப் பெருமை தான் அது. காலத்தால் அழியாத அப்பெருமையை உருவாக்கிய தாகூரைப் பற்றி தன் சிறு வயதில் அவருடைய பாட்டி இப்படி எழுதுகிறார். என் பேரப்பிள்ளைகள் எல்லோரும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்கள். ஆனால், தாகூரை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. எதிலுமே நிலையில்லாமல் இருக்கிறானே?’ தாகூர் குடும்பத்தில் எல்லோரும் சிறந்த கல்விமான்களாக உருவாயினர். ஆனால், தாகூர் மட்டும் தான் உலகம் போற்றும் மாந்தராக சரித்திரத்திலே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம், தாகூர் தன் சிறுவயதிலே தன்னை அறிந்தார், தரணி ஆண்டார்.

                    உலகத்தை வெல்வதை விட, சுயத்தை(தன்னை) வெல்வதே சிறந்த வெற்றி என்றார் புத்தர். தன்னை வென்ற இன்னொருவரைப் பற்றி எடுத்துரைக்கின்றேன். சிந்தித்துப் பாருங்கள். மகாகவி பாரதியார் தான் அவர். பாரதியின் அப்பாவின் பெயர் திரு.சின்னச்சாமி. அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைத்திருந்தார். எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவு. ஆனால், பாரதியின் கனவு வேறாக இருந்தது. பாடம் செய்யாமல் பல முறை ஆசிரியரிடம் தண்டனைப் பெற்றுள்ளார். பரீட்சையில் தோல்வி கண்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டச் செய்தி உங்களுக்குத் தெரியுமா? சிறுவயதிலேயே கவிதையின் மேல் மோகங்கொண்ட சுப்பிரமணியன் மகாகவி பாரதியாக உருமாறியது எப்படி? தன் சொந்த அப்பாவால் புறக்கணிக்கப்பட்ட பாரதி, தமிழ் உலகை ஆண்ட வரலாற்றைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

                      இது போன்ற பாரதிகள் இன்னும் எத்தனை பேர் பள்ளியில் இருக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. வீட்டில் புறக்கணிக்கப் பட்டாலும், பள்ளியை நாடி வரும் இவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வெறுமனே இருந்து விடக்கூடாது. ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவதொரு தனித்திறமை நிச்சயமாக இருக்கிறது. அந்தத் திறமையை வெளிக்கொணர்வதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மை கடமை. உலகம் கண்டெடுத்த மாபெரும் அறிஞர்களான தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இருவருமே பள்ளியிலிருந்துப் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான். இவர்கள் மீண்டது எப்படி? நிச்சயமாக அவர்களின் பெற்றோர்கள் தான் காரணம். அதேப்போல, வீட்டில் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் மீண்டு வந்தது பள்ளியினால் தான்.

                        ஒரு வேப்ப மரத்தை அதன் படியே வளரவிட்டால் அது ஓரு பெரிய மரமாக வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படுகிறது. ஆனால், அதே வேப்ப மரத்தை ஒரு ஜாடியில் வைத்து வளர விட்டால், அதன் வளர்ச்சி குன்றிவிடும். அதேப்போல் தான் ஒவ்வொரு மாணவரின் திறமையும். அவர்களை இயற்கையோடு வளரவிட்டால் தன்னில் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். மாறாக, அடைத்து வைத்தால், அதட்டி வைத்தால், அவர்களை ஆட்டிப்படைத்தால் அந்த வேப்பமரம் போல் வளர்ச்சி குன்றிவிடும். திருமந்திரத்தில் திருமூலர், எழுதாத புத்தகத்தின் எழுத்து என்று விவரித்திருப்பார். புத்தகம் எழுதப்படவில்லை. எப்படி எழுத்து வரும்? அது தான் ஞான நிலை. அதே ஞான நிலைதான் நம் பிள்ளைகளின் தனித்திறமை. இறைவன் அதனை மறைத்து வைத்ததற்குக் காரணமும் அதுதான்.

                         தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். வகுப்பறையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, பள்ளியை விட்டே விரட்டி யடிக்கப்பட்டவர் தான் இந்த எடிசன். தன் அம்மாவின் அரவணைப்பிலும் வழிகாட்டலிலும் தன்னை அறிந்தார் மாமேதை எடிசன். அவரவர் வினைவழி அவரவர் வந்தார், அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்று புத்தப்பெருமான் எடுத்துரைத்திருப்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அவருடைய அனுபவம் இன்று நமக்கு பாதையாகிறது. கல்வியில் ஆர்வமில்லாமல் மந்தமாகத் திரிந்துக் கொண்டிருக்கும் மாணவர்களை எடிசனுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். தாகூருக்கும், பாரதிக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள். சிறு வயதில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பக் கூடுமாயின் அவர்களாலும் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அந்த ஒரு அரிய வாய்ப்பை பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் தான் வழங்க வேண்டும். தங்கத்தைத் தோண்டித்தான் எடுக்க வேண்டும். முத்தை மூழ்கித்தான் எடுக்க வேண்டும். நம் பிள்ளைகளின் திறமையை தேடித்தான் எடுக்க வேண்டும்.


                   ‘மனிதனின் ஆன்மாவின் வெளிப்பாடே அவனிடம் உள்ள ஆற்றல்தான் என வினவுவார் சுவாமி விவேகானந்தர். அந்த ஆற்றலை சிறு வயதிலே கண்டெடுப்பது என்பது வைரத்தைத் தீட்டுவது போன்றது. தோண்டி எடுத்த வைரம் வைரமாக இருக்காது. அதை வெட்ட வேண்டும், அறுக்க வேண்டும், உடைக்க வேண்டும், கலக்க வேண்டும், பிறகு தீட்ட வேண்டும். இவ்வளவும் செய்தால் தான் வைரம் பிறக்கும். நம் பிள்ளைகளும் அப்படித்தான். இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொணர நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டும். பண்ணியப் பயிரில் புண்ணியம் தெரியும் என்பார் ஔவை பிராட்டியார். நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முயற்சி செய்து தான் பாருங்களேன்.