எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 9 மே, 2017

‘மன உளைச்சலை, மன விளைச்சலாக்குங்கள்!’


                   இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் தொழிலில் இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை நிச்சயமாக வேறு. அன்று உள்ள ஆசிரியர்கள் படித்துக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்தார்கள். ஆனால், இன்று உள்ள ஆசிரியர்கள் முடித்துக் கொடுக்கும் வேலையை அதிகமாகச் செய்கிறார்கள். அன்று படித்துக் கொடுப்பதைத் தவிர்த்து ஒரு சில வேலைகள் தான் இருந்தன. ஆனால், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட வேலைகளை முடித்தாக வேண்டும் என்பது தான் உண்மை. தொழிற்சாலையில் ஒருவருக்கு ஒரு வேலை தான். ஆசிரியருக்கோ பல்வேறு வேலைகள்.

                   இருந்தபோதிலும், ஓர் உண்மையை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மாற்றங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், நமக்கு ஏற்படும் தாக்கங்களை நிச்சயமாக நாம் தவிர்க்க முடியும். மன உளைச்சல் என்பது நோய் அல்ல, மாறாக அஃது ஒரு வகையான மனோநிலை. தீதும் நன்றும் பிறன்தர வாரா என்று சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் மிக அழகாகச் சொல்லுவார். மலேசியப் பள்ளிகளின் வரலாற்றில் ஓர் ஆசிரியர் வேலை பழுவினால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. காரணம், பெரும்பாலான ஆசிரியர்கள் மன உளைச்சலாக இருக்கிறார்கள் என்பதை விட, அதை மன விளைச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. விளைச்சல் மனோபாவம் உயர்வைத் தரும்.  மஹாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பு அர்ஜுனன் பின்வாங்கியதைக் கொஞ்சம் சிந்தித்துப் பருங்கள். அர்ஜுனன் அடைந்த மன உளைச்சலை விடவா நாம் அடைந்து விட்டோம்?

                   கிருஷ்ணர் எப்படி அர்ஜுனனுக்கு வழி காட்டினாரோ, அதேப் போல ஒவ்வொரு ஆசிரியருக்கும் நிச்சயம் வழிகாட்ட  யாராவது இருப்பார்கள். நம்பங்கள்.இது உண்மை. மன உளைச்சல் எப்படி வேண்டுமானாலும் வரலாம், ஆனால், எடுத்தக் கடமையில் உறுதியாக இருந்தீர்களா என்பதே கேள்வி. அப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒரு குருவிடம் ஒருவன் தன் உள்ளங் கையில் சிறு பட்டாம் பூச்சியை மூடி வைத்துக் கொண்டு, குருவே,இப்பட்டாம் பூச்சி உயிராக உள்ளதா அல்லது இறந்து விட்டதா  என்று வினவினான். அதற்கு குரு மிக அழகாக பதிலளித்தார். அந்தப் பதிலை ஒவ்வொரு ஆசிரியரும் தன் மனதிலே பொறித்துக் கொள்ள வேண்டும். ஐயா,அந்தப் பட்டாம் பூச்சி உயிராக இருப்பதும் இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது என்றார் குரு. சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியர்களே. இனி உங்கள் மனதிலே விளைச்சல் அதிகமாகும். மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாமே என்பது திருமூலர் வாக்கு. மனதைச் செம்மைப்படுத்துங்கள். அதுவே உங்கள் மந்திரமாகும்.

                     கற்றல் என்பது பிரார்த்தனை,கற்பித்தல் என்பது வழிபடு என்பது என்னுடைய ஆழமானச் சிந்தனை. பிரார்த்தனையும் வழிபாடும் சரியாக இருந்தால் எப்படி மன உளைச்சல் வரும்? ஒரு பறவை தான் பறப்பதை நம்பி வாழ்கிறது. ஒரு சிறுத்தை தன் வேகத்தை வாழ்கிறது. ஒரு மீன் கூட தன் நீச்சலை நம்பி வாழ்கிறது. அதேப்போல், ஒரு ஆசிரியர் எதை நம்பி வாழ்கிறார்கள் என்ற கேட்டால் என்ன பதிலாக இருக்கும்? ஆசிரியர்கள் கூறும் அந்த பதில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அதனால் தான் தத்துவ மேதை சாக்ராட்டீஸ், பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது என்று பகன்றுள்ளார். நீங்கள் எண்ணும் எண்ணங்களையும், சொல்லும் சொற்களையும் பரிசோதித்துப் பாருங்கள். மன உளைச்சல் மன விளைச்சலாகும்.
                    ஒரு மருத்துவமனையில் இரு நோயாளிகளைச் சேர்த்தனர். இருவரும் ஒரே அறையில் இருவேறு கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அவருடைய கட்டில் சன்னலின் அருகில் இருந்தது. இரண்டாவது நோயாளி கொஞ்சம் தூரத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். தூரத்தில் இருந்த நோயாளி வெளியில் என்ன நடக்கிறது என்று சன்னல் ஓரத்தில் இருக்கும் நோயாளியிடம் கேட்டு தெரிந்து கொள்வார். சன்னல் ஓர நோயாளியோ தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறுவார். வெளியில் அழகான பூங்கா இருப்பதாகவும், நிறையக் குடும்பங்கள் அங்கு தன் பிள்ளைகளுடன் விளையாடுவதாகவும்,பெரிய ஏரி உள்ளதாகவும்,அழகிய மரங்களும் பூச்செடிகளும் உள்ளதாகவும் வர்ணித்துக் கூறுவார். இது சில வாரங்கள் வரை தொடர்ந்தது.

                   திடீரென்று ஒரு நாள் சன்னல் ஓரத்தில் இருந்த நோயாளி இறந்து விட்டார். மிகவும் கவலை அடைந்த இன்னொரு நோயாளி தன் கட்டிலை சன்னல் ஓரமாக மாற்றச் சொன்னார். சன்னலைத் திறந்து பார்க்கும் பொழுது அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு இறந்த நோயாளிச் சொன்ன எந்த காட்சியும் இல்லை. ஒரு கட்டிடம் முழுவதுமாக மறைத்திருந்தது. இறந்த நோயாளி என்னிடம் வெளியேத் தெரியும் காட்சிகளை கூறினார் என்று மருத்துவத் தாதியிடம் கேட்ட பொழுது, அவருக்குக் கண் பார்வை இல்லை என்று கூறினார். அதிர்ந்த அந்த நோயாளி அவருக்காக கண்ணீர் சிந்தினார். நாமும் ஒரு நிமிடம் அவருக்காக மௌனமாக இருப்போம்.


                   கண்ணில்லாதவர் நமக்கு வழிகாட்டுகின்றார். தன் மன உளைச்சலை எவ்வளவு அழகாக மன விளைச்சலாக்குகின்றார் பாருங்கள். தொழிலை இரசிக்கத் தொடங்குங்கள். ஒரு பள்ளியின் ஆச்சர்யமும் ஆசீர்வாதமும் எது தெரியுமா? பிள்ளைகள் தான். பிள்ளைகளை முன்னிருத்திச் செயல்படுங்கள். பெரு நிம்மதி கிடைக்கும். சுயநலம் மேலிட்டால், வீண் மன உளைச்சல்தான். சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியப் பெரு மக்களே! இயங்குதல் வாழ்க்கை, முடங்குதல் மரணம் என்பார்கள். முடங்கிக் கிடந்தால் சிலந்திக் கூட சிறை பிடிக்கும் என்பார்கள். நீங்கள் இருக்கும் பள்ளிகளில் முடங்கி விடாதீர்கள். இருக்கும் வேலைகளில் மூழ்கி விடாதீர்கள். இங்கு நீந்துபவனுக்குத் தான் வாழ்க்கையே தவிர, தத்தளிப்பவனுக்கு அல்ல. நம்மைப் படைத்த கடவுள் ஒருவன் என்பது உண்மையாயின், படைக்கப்பட்ட நாமும் ஒரே மதிப்பீட்டுக்கு உரியவரே என்பதை மறந்து விடாதீர்கள்.