எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ் ஆசிரியம் தழைக்க வேண்டும்...

தமிழ் ஆசிரியம் தழைக்க வேண்டும்...

தமிழ் ஆசிரியம் உருவாக்கத்திற்கு 4 கூறுகள் மிக முக்கியமானவை.
அவை பின்வருமாறு....

ஆசிரியர்ண்டா அர்ப்பணிப்பு  இருக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா ஈடுபாடு இருக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா அலைகளை உருவாக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா அடையாளத்தை ஏற்படுத்த
வேண்டும்

                                       இந்த 4 கூறுகளைக் கொண்ட தேடல் தான் இந்த கட்டுரையின் நோக்கம். எல்லா ஆசிரியர்களும் ஒன்றுதானே....ஏன் அவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான் ' என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக் கொப்ப, நாம் செய்கின்ற தொழிலில் நிச்சயமாக வேறுபாடு உள்ளது என்று திருவள்ளுவர் கூறுவதை கவனிக்கத்தக்கது.  அந்த வேறுபாட்டைத் தான் தொழில்திறன் என்கிறார்கள்.

                நிச்சயமாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் இத்தொழில் திறன் மாறுபடுகிறது. அந்த மாறுபாட்டிற்கேற்பத்தான் ஆசிரியர்களின் கற்றல் & கற்பித்தல் சூழ்நிலையும் அமைகிறது. இப்பொழுது கேள்வி என்னவெனில் தமிழாசிரியர்கள் தமிழ்ப்பள்ளியை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்களா அல்லது தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறதா? ஒவ்வொரு தமிழாசிரியர்களும் இக்கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.  எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்கிற பாடலுக்கு ஏற்ப எல்லா ஆசிரியர்களும் கற்பித்தலில் சிறந்தவர்கள் தான், ஆனால் அடையாளம் கண்டு வெளிக் கொணர்வது பள்ளியின் தலைமைத்துவமே.

                  மாநில மற்றும் தேசிய அளவில் உயிர்த்தெழும் பள்ளிகளின் பண்புகளை ஆராய்வோனால் இரண்டு நிலைகளை நாம் கண்டறிய முடியும். ஒன்று நேர்மறை அலைகள் மற்றொன்று எதிர்மறை அலைகள். இதில் எது அதிகமாக மேலோங்குகிறதோ அதன் அடிப்படையிலேயே பள்ளியின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் காணப்படுகிறது. ஆதலால், தமிழாசிரியம் நிறைந்த ஓர் ஆசிரியர் இருப்பாராயின் உலகத் தர வரிசையில் தமிழ்ப்பள்ளிகள் தவழ முடியும். அதற்குத் தேவை அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அடையாளம் மற்றும் அலைகள்.

                     அர்ப்பணிப்புக்கு அன்னை தெரேசாவையும், ஈடுபாட்டிற்கு அண்ணல் காந்தியையும், அடையாளத்திற்கு சுவாமி விவேகானந்தாவையும் மற்றும் அலைகளுக்கு புரட்சிக் கவிஞர் பாரதியாரையும் காண்பது மிகச் சிறப்பு. இப்பண்புகள் ஒருங்கே கிடைக்கப் பெறும் தமிழாசிரியர் யாராக இருப்பினும் அவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது நமது கடமையாகும். திரிந்து கிடக்கும் இவர்களை முதலில் ஒன்றுதிரட்ட வேண்டும். நோக்கத்தைத் தெளிவு படுத்தி திட்டங்களைத் தீட்ட வேண்டும். இஃது சாத்தியம் என்றால் தமிழ்ப்பள்ளிகள் மிளிர்வது நிச்சயம்.

                  தமிழாசிரியம் பிறப்பதற்கு ஒவ்வொரு தமிழாசியரும் சிந்தனை மாற்றத்திற்கு வந்திடல் வேண்டும். அதற்கு நல் எண்ணங்களை வித்திடல் வேண்டும். தமிழ்ப்பள்ளிக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வாருங்கள். தமிழ்ப்பள்ளியின் மூலம் நேர்மறை அலைகளை உருவாக்குங்கள். அதற்குத் தேவை அர்ப்பணிப்பும், முழு ஈடுபாடும் கொண்ட தமிழாசிரியர்கள். தேவையானால் இலட்சியத்திற்கான பாதையை மாற்றுங்கள் ஆனால் இலட்சியத்தை மாற்றாதீர்கள். தேசிய கல்வித் திட்டம் உருமாறிக் கொண்டிருக்கும் காலமிது. நாம் மாறித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், காலத்தின் கட்டாயத்தால் நாம் மாற்றப்படுவோம்.  மாற்றம் ஒன்றே நிரந்தரம். நாம் வேலையில் சேர்ந்த அன்றே நம்முடைய பணி ஓய்வு திகதியும் உறுதிச் செய்யப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். இஃது ஒரு தற்காலிக வேடமே தவிர நிரந்தரத்  தடம் அல்ல.

                   ஒரு சிறிய பானையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அந்த பானையில் நிறையப் பஞ்சை வைத்தால் என்னவாகும்? அந்த நீரை எல்லாம் உரிஞ்சிவிடும். அந்த நீரைப் போன்று தான் மாணவர்களும். ஆசிரியர்கள் பஞ்சாக இருந்தால் மாணவர்களின் திறமை மேலோங்க அல்லது வெளிக்கொணர வாய்ப்பில்லை. மீண்டும் அந்த பானையில் சுரை விதைகளைக் கொட்டினால் என்னவாகும்? பானையில் உள்ளத் தண்ணீரை மூழ்கடித்து விடும். மாணவர்களின் திறமை மறைக்கப்பட்டு விடும். ஆசிரியர்களே இங்கு பெரிதாகக் காணப்படுவர். மாணவர்களின் மனங்களிலும் அது பதிந்து விடும். அடுத்து, அந்த பானையில் களிமண்ணைக் கலந்தால் தண்ணீர் கலங்கிவிடும். மாணவர்களும் அப்படித்தான். களிமண்ணைப் போன்று குளம்பிய  மாணவர்கள் எப்படி முன்னேற முடியும்? இறுதியாக, தண்ணீரில் சீனியைக் கலந்தால், அது தண்ணீரோடு கலந்து குடிப்பவர்க்கும் இனிக்கும். அது போலத்தான் ஆசிரியர்களும். நம்மால் அனைவரின் வாழ்க்கையும் இனிக்க வேண்டுமே தவிர இம்சையாகிவிடக்கூடாது. ஆசிரியர் தொழில் தழைக்க வேண்டுமாயின் தமிழ் ஆசிரியர்கள் உழைக்கத்தயாராக இருக்க வேண்டும். 
   
                    கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு ஞானி பகலிலே விளக்கைக்  கையில் வைத்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருப்பாராம். என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டால், ‘மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்என்பாராம். அதேப் போலத்தான் நம் தமிழ்த்தாயும். கைகளில் விளக்கை வைத்துக் கொண்டு நல்லாசிரியரைத் தேடிக் கொண்டிருக்கிறார். நாட்டில் இருக்கும் 9000 தமிழாசிரியர்களில் அர்ப்பணிப்பு, அடையாளம், ஈடுபாடு மற்றும் அலைகளை ஏற்படுத்தும் தமிழாசிரியர்களை தமிழ்த்தாய் தேடிக் கொண்டிருக்கிறாள். என்னையும் சேர்த்து தான். நான்கு வேதங்களைப் போல இந்த நான்கு கூறுகளும் தக்க அணிகலன்களாக அணிந்து கொண்டால், நிச்சயம் தமிழ்ப்ள்ளிகள் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை. திருமந்திரத்தில் 2885-ஆவது பாடலில் எழுதாத புத்தகத்தின் எழுத்து என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆன்மிகத்தில் இது வேறு ஒரு பொருளைக் குறித்தாலும், தமிழாசிரியம் தழைக்க வேண்டின் எழுதாத புத்தகத்தின் எழுத்து போல் மறைபொருளாக ஆசிரியர்கள் இயங்கத்தான் வேண்டியிருக்கிறது.


                     மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளைத் தொட்டு விட்ட நிலையில் மலேசிய மண்ணிற்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உன்னதத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தமிழாசிரியர்களின் எழுச்சியே நம் சமூதாயத்தின் உண்மையான உயர்ச்சி என்பதை அறிக. மலேசிய தமிழாசிரியம் உலகமெங்கும் முழங்க வேண்டும். தமிழ்நாடு நம்மைத் திரும்பிப்பார்க்கும் வண்ணம் உயர்ந்திடுவோம். தமிழாசிரியர்களின் தரம் உயர ஒவ்வொரு தமிழாசிரியரும் அர்ப்பணிக்க வேண்டும், முழு ஈடுபாடு இருக்க வேண்டும், அதீத அலைகளை உருவாக்க வேண்டும் மற்றும் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். இதுவே, தரணியில் தமிழாசிரியம் தழைக்க அடித்தளமாகும்.

சனி, 18 மார்ச், 2017

‘இணைப்பாடத்தின் மேன்மை ஒவ்வொரு மாணவர்க்கும் பெருமை’



           உலகத்தில் பிரிக்க முடியாதது என்பது நிறைய உள்ளன. கல்வியைப் பொருத்த மட்டும் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் பாடமும் விளையாட்டுத் துறையும் (இணைப்பாடம்) ஆகும். தேசிய கல்வி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாணவன் 7 வயதிலிருந்து 18 வயது வரை தன்னுடைய ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யும் பொழுது ஒரு முழுமைப்பெற்ற மாணவனாக உருவாக்கம் பெற்றிருக்க வேண்டும். தன்னுடையப் பிள்ளை கல்வியிலும் இணைப்பாடத்திலும் சரிசமமாக வளர வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் கல்வியை வைத்து மட்டும் நாம் ஒரு மாணவனை அளவிட முடியாது. மாறாக, வகுப்பறையை விட்டு பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில மற்றும் தேசிய அளவிலும் என்ன சாதித்தார்கள் என்று அளவிட வேண்டும்.

                 செய்தி என்னவென்றால், ஒவ்வொரு மாணவரும் தாம் எஸ்.டி.பி.எம் வரை விளையாட்டு மட்டும் இணைப்பாடத்தில் கலந்து கொண்டு பெற்ற அனைத்து சான்றிதழுக்கும் மொத்தமாக 10 புள்ளிகள் கொடுக்கப்படும். அந்த 10 புள்ளிகள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் கல்விக் கடனுதவி கிடைப்பதற்கும், பல்கலைக்கழகத்தில் சில தனிச் சிறப்புகள் கிடைப்பதற்கும் இணைப்பாடம் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றது. நாட்டின் நீர் மூழ்கி வீராங்கனை பண்டலேலா ரினோங் லண்டன் ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கல பதக்கம் அவருக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் சிறந்த இடத்தை அளித்திருக்கிறது. அவருக்கு அஸ்ரேலியா பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு இடம் கிடைத்ததை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெருமைக்கும் இணைப்பாடத்தின் மேன்மையாகும்.

                    உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த பெருமை கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக பள்ளியில் நடைபெரும் அனைத்து இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் பிள்ளைகளை அனுப்பி ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுங்கள்.
ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருத்தல் ஆகாது-பாப்பா
மாலை முழுதும் விளையாட்டு-
என்று வழக்கப்படுத்திக் கொள்ளு-பாப்பா

என்பது பாரதியாரின் பொன்னால் பொரிக்கப்பட்ட வைர வரிகளாகும். அப்பொழுதே பாரதியார் விளையாட்டின் மேன்மையை நமக்கெல்லாம் நன்கு உணர்த்தியிருக்கின்றார். நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருனம் இது. இக்கருத்தினையே சுவாமி விவேகானந்தரும் தம்முடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றின் மூலம் நமக்கெல்லாம் தெளிவு படுத்துகின்றார். ஒரு முறை பள்ளித்திடலில் சில மாணவர்கள் காற்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

                   ஒரு மாணவன் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு கீதையை வாசித்துக் கொண்டிருந்தான். உடனடியாக விவேகானந்தர் அந்தச் சிறுவனிடம் சென்று கீதையை வாசிப்பதை வைத்து விட்டு காற்பந்து விளையாடச் என்றார். பிறகு, இச்செயலைப் பற்றி அவரிடம் வினவிய போது, அவர் கூறிய பதில் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. காற்பந்து விளையாடும் பொழுது நம் உடம்பின் நரம்புகள்,தசைகள்,இரத்த நாளங்கள் யாவும் சுறுசுறுப்பு பெற்று புது தெம்பு பெறுகிறது.மூலையும் சுறுசுறுப்பு பெறுவதால் நாம் படிப்பது விரைவில் மனமும் மூலையும் ஏற்றுக் கொள்கிறது.எவ்வளவு பெரிய அறிவியல் நமக்கெல்லாம் உண்மையை அவர் உணர்த்தியிருக்கின்றார். ஆக, விளையாட்டின் மேன்மையை உணர்ந்து நம் பிள்ளைகளுக்கு விளையாட்டுத்துறையில் முன்னேற ஒரு வாய்ப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.

                   கடலில் எந்தத் துளி முதல் துளி என்று யாராலும் கூற முடியுமா? அதுபோல் தான் உங்கள் பிள்ளைகளிடம் எத்தகையத் திறமை இருக்கிறது என்று நீங்கள் கணிக்க முடியாது. மலேசியாவின் விளையாட்டுத்துறை நம் தமிழ் இளைஞர்களுக்காக காத்துக்கிடக்கிறது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதே சாலச்சிறந்தது.  மலேசியாவின் முன்னாள் பறக்கும் பாவை என்று பெயர் எடுத்த ஜி.சாந்தியின் 23 ஆண்டு கால 100 மீட்டர் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது. நாட்டின் புதிய மின்னல் ஓட்ட வீரர் சாய்டாதுல் உஸ்நியா சுல்கிப்லி சரித்திரம் படைத்ததை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 23 ஆண்டு காலமாக இன்னொரு ஜி.சாந்தியை உருவாக்குவதில் ஏன் இவ்வளவுத் தடைகள்?

                   காரணங்கள் எதுவாக இருப்பினும் ஆக்கமே இப்பொழுது நமக்கு அவசியமாகிறது. நெல் வயல்களில் நிறைய வயல்கால்கள் காணப்படும். அந்த வயல்கால்களில் நிறையத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்ணீர் வெளியாகாமல் இருப்பதற்காக மடை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். மடையைத் திறந்தால் தான் தண்ணீர் நெல்வயல்களுக்கு பாய்ச்சப்படும். மடையைத் திறப்பதற்கு விவசாயி கடமைப்பட்டுள்ளான். நெல் வயல்களுக்குத் தண்ணீர் தயாராக இருப்பது போல், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்திறமை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதைத் திறந்து விட அல்லது வெளிக் கொணர ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும்.


                   இணைப்பாடத்தின் வாயிலாக அத்திறமையை மிக விரைவில் கண்டு கொள்ள இயலும். சமீபத்தில் இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வென்ற டத்தோ லீ சோங் வேய்யை நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப் துன் ரசாக் அவர்கள் வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாட்டிற்குப் பெருமைச் சேர்த்த டத்தோ லீ சோங் வேய்யைப் போன்று நம் மாணவர்களும் அந்நிலையை அடைய முடியும். ஆதலால், விளையாட்டுத்துறைக்கு அடிப்படையாய் இருப்பது இணைப்பாடம் என்பது எள்ளலவும் சந்தேகம் கிடையாது. இனி முன்னோக்கிச் சென்று இணைப்பாடத்தில் மீட்சி நிலையை உருவாக்க ஆசிரியர்களோடு பெற்றோர்களும் இணைந்து செயலாற்ற உறுதிப்பூன வேண்டும்.

செவ்வாய், 14 மார்ச், 2017

‘என் கடன் பணி செய்து கிடப்பது!’


                    நால்வர் அருளிய ஐந்தாம் திருமுறையில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தான் தன் கடன் பணி செய்து கிடப்பது. அதன் முழுப்பாடல் பின்வருமாறு,
நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே

                    7-ஆம் நூற்றாண்டிலே உதிக்கப்பட்ட இச்சிந்தனை 21-ஆம் நூற்றாண்டிலும் எப்படி மிளிர்கிறது என்பதை ஆராய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம். அதிலும், ஆசிரியர் பணியில் எந்தளவுக்கு இப்பாடல் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

                   ஒரு நல்லத் தமிழாசிரியரின் கடமை பணி செய்து கிடப்பதுவேயன்றி வேறொன்றும் இல்லை. பணி என்றச் சொல்லுக்குச் சேவை என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு ஆசிரியரும் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உணர்ந்து கொண்டால் தமிழ்ப்பள்ளிகள் நிச்சயம் மிளிரும். ஒரு கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தால், பல சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் தத்தம் வேலைகளைச் செய்யும். ஒன்றோடொன்று மோதிக் கொள்வது கிடையாது. இப்படி ஓயாமல் உழைப்பதால் தான் அஃது உயரத்தில் இருக்கிறது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதைப் போல் ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரு முறை மணி காட்டும். சிந்தித்துப் பாருங்கள்.

                   ஆக, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் சக்கரத்தைப் போல சுழன்று கொண்டே இருந்தால் எல்லாத் தமிழ்ப்பள்ளிகளும் நிச்சயம் உயரத்தில் இருக்கும். ஒரு பள்ளிக்கூடத்தின் பலமே அங்கு இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களின் பலம் மற்றும் அவர்களின் ஒருமித்தக் கருத்தே ஆகும். பள்ளியில் எந்த ஆசிரியர்களும் தனித்து இயங்க முடியாது. அப்படி இயங்கினால் நிச்சயம் அப்பள்ளித் தோற்றுப் போகும். நீங்கள் எறும்பு ஊர்ந்துச் செல்வதைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். எந்த எறும்பும் நின்று பேசி விளையாண்டதை வரலாறு பார்த்ததில்லை. இதைத் தான், தன் கடன் பணி செய்து கிடப்பது என்கிறேன். எறும்பின் வெற்றி பேசாதது அல்ல, மாறாக அதன் கூட்டு முயற்சியே. 

                       நம் பள்ளிகளின் வெற்றியும் அதுவே. கூட்டு முயற்சிக்கு அடிப்படையாக இருப்பது பணி செய்து கிடப்பது. இதுவே, ஒவ்வொரு நல்லாசிரியரின் உயர்ந்த பண்பும் கூட. நாட்டில் எந்தப் பள்ளியாவது ஒளிர்கிறது என்றால் அந்தப் பள்ளியை ஒரு குடைக்கு ஒப்பீடுச் செய்யலாம். காரணம், ஒவ்வொரு குடைக்குள்ளும் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கான விடை அங்கு தான் இருக்கிறது.  ஒரு விரிக்கும் பொழுது, நிறையக் கம்பிகள் ஒன்று சேர்ந்து ஒரே அளவாகப் பிரியும். ஒரு கம்பி உடைந்தாலும் குடை அதன் தன்மையை இழந்து விடும். குடையில் உள்ள ஒவ்வொரு கம்பியும் அதன் பணியைச் செவ்வனே செய்கின்றன.

                   அந்தக் குடையைப் போன்று தான் ஒரு பள்ளியும். ஓர் ஆசிரியர் சோடைப் போனாலும் பள்ளியின் வளர்ச்சி உடைந்த குடை போன்றாகிவிடும். சிந்தித்துப் பார்த்தால் சீர் பெற முடியும். கொஞ்சம் சூரியக் குடும்பத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். தன் கடன் பணி செய்து கிடப்பது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 9 கிரகங்களும் தன்னுடையச் சுற்றுப் பாதையிலிருந்து விலகியதாக எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியர்களைப் பற்றிய அதிருப்தியும், ஆசிரியர்கள் மத்தியில் பெற்றோர்களைப் பற்றிய அதிருப்தியும் வரக் காரணம் என்ன? இரு சாராரும் குறைகளைப் பற்றி ஆராயும் வேகத்தை விட, நிறைகளைப் பற்றி ஆராயும் சோகமே அதிகம். அதனால் தான் மீண்டும் மீண்டும் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உரக்கச் சொல்லுகின்றேன்.

                   இராமாயண காவியத்தில் இராமர் நினைத்திருந்தால் சீதையைத் தனியா ளாக காப்பாற்றியிருக்க முடியும். ஏன் ராமர் அவ்வளவுப் பெரியப் படையைத் திரட்ட வேண்டும்? ஆஞ்சநேயர் ஒருவர் போதுமே சீதையை மீட்பதற்கு. இங்கு தான் வாழ்க்கை எனும் பாடம் போதிக்கப்படுகிறது. காரணம் வேறு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இராமர் படையில் திரண்ட அத்துணை ஜீவராசிகளையும் கவனியுங்கள். ஒவ்வொன்றும் தத்தம் கடமையைச் செய்ததே அந்த வாழ்க்கைப் பாடம். ஒன்று திரண்டால் தான் வெற்றியும் புகழும் வரும். அதனால் அனைவரும் நன்மையடைவர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயலாற்றுவது பள்ளிக்கு மட்டும் அல்ல, தமிழ் சமூதாயத்திற்கே பெரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் யார் இராமர் என்பது முக்கியமல்ல, மாறாக இராவனனாக இல்லாமல் இருந்தால் போதும்.

                    தூக்கணாங்குருவி தன் கடன் பணி செய்து கிடப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. கூடு கட்டும் பொழுது, தான் கட்டியக் கூடு கீழே விழுந்து விட்டால் மீண்டும் புதியக் கூடு கட்டுமே ஒழிய விழுந்தக் கூட்டை எடுக்காது. எத்தனை முறை கீழே விழுந்தாலும் மீண்டும் எடுக்காது. தூக்கணாங்குருவியிடம் இருக்கின்ற அந்த விடா முயற்சி மற்றும் மீண்டும் இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தும் முறைமையை கண்டு நாம் கற்றுக் கொள்ளும் மிகச் சிறந்த பாடம். ஆசிரியர்கள் மத்தியில் ஆயிரம் சிந்தனைகள் இருக்கலாம். ஆனால், அத்துணைக்கும் அஸ்திவாரமாய் இருப்பது மனத் தடைகள். தடைகள் உடைபடும் பொழுது தான் பலப் பள்ளிகள் வெளிச்சத்திற்கு வருகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தான் இருக்கின்ற பள்ளியிலே தூக்கணாங்குருவி போல உருமாற வேண்டும். பணி செய்வதை ஒரு பிணியாக நினைக்கக் கூடாது. இனி காலங்கள் நம் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம் என்று நினைத்து பணி செய்வதில் ஓர் அணியாகத் திரள வேண்டும்.
ஒன்றே செய்தல் வேண்டும்...
ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும்...
நன்றும் இன்றே செய்தல் வேண்டும்...
இன்றும் இன்னே செய்யவும் வேண்டும்

என்ற கபிலரகவல் கூறுவது போல் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உறுதி கொள்வோம்.

புதன், 8 மார்ச், 2017

‘உங்கள் பிள்ளைகளின் இலட்சிய வார்த்தைகளை அலட்சியம் செய்து விடாதீர்கள்!’

                                   ‘உன்னுள் ஓர் ஆசை எழுந்ததானால் அதை அடையும் திறமை உன்னுள் இருப்பதனால் தான் அது எழுந்தது என்ற வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். மனோவியலில் மிக உயர்ந்த தத்துவம் இது. உங்கள் பிள்ளைகள் ஆசை ஆசையாய் சொன்ன வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறதா? அது விளையாட்டாய் உச்சரித்த வார்த்தைகள் அல்ல, இலட்சியத் துளிர்விட்ட வார்த்தைகள் அவை. உங்கள் பிள்ளைகள் இலட்சியத்தைப் பற்றி சும்மா பேசினால் விட்டுவிடுங்கள். ஆனால், அதனையே சும்மா சும்மா பேசினால் விட்டுவிடாதீர்கள். அது அவர்களின் எதிர்காலத்தின் அடையாளம்.

                                      மிக உயர்ந்த நவரத்தினமான வைரத்தைத் தோண்டித்தான் எடுக்க வேண்டும். அதைப் போல, உங்கள் பிள்ளைகளின் தனித்திறமையை அவர்களின் எண்ணங்களின் ஆழத்திற்குச் சென்று தேடித்தான் எடுக்க வேண்டும். எண்ணங்கள் தான் வார்த்தைகளாக மாறுகின்றன. அப்படி எழும்புகின்ற எண்ணங்களை முடக்கி விடாதீர்கள். கொஞ்சம் ஆய்வுச் செய்து பாருங்கள். ஆயிரம் நம்பிக்கைகள் பிறக்கும். அண்ணல் காந்தி அவர்கள் தான் சிறு வயதாக இருந்தபோது அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்தப் பிறகு உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார். தன் சிறு வயதில் எடுத்த அந்த உறுதி மொழியே  அண்ணல் அவர்களை மஹாத்மாவாக மாற்றியது. தன் பெற்றோர்களிடம், ‘இனி நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்று சொன்ன அந்தச் சூழல் உங்கள் பிள்ளைகளுக்கும் அமையாதா  என்ன? இனி தேட வேண்டிந்து உங்கள் கடமை.

                           ஒரு குழந்தைப் பிறக்கும் போதே 9 வகையான அறிவுத்திறனுடன் பிறக்கிறது என்று பேராசிரியர் ஆர்வட் கார்டனர் உரைத்திருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அந்த 9 வகையான அறிவுத் திறனில் ஒன்றுகூடவா உங்கள் பிள்ளைகளிடம் இல்லாமல் போயிற்று. ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை மணி காட்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவர்கள் நல்லவர்களாவதும் தீயவர்களாவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளை அசைப்போட்டுப் பாருங்கள். உண்மை விளங்க வெகு தூரமில்லை. குழந்தை மனோவியலில் குழந்தைகளின் வளர்ச்சியி  னை 5 வகையாகப் பிரித்துள்ளனர். முதலாவது, கற்பக் காலம். இது முழுக்க முழுக்க இறைநிலை தொடர்புடையது. இரண்டாவது, குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரையிலாகும். இந்நிலையில், குழந்தைகள் தன்னந்தனியாக மேலே பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு விளையாடுவார்கள். உண்மையில் அவர்கள் தேவதைகளுடன் தொடர்புக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து, மூன்றாவது நிலை. இது 6 மாதம் முதல் 3 வயது வரையாலானது. இந்நிலையில் குழந்தைகள் குருவாக மாறியிருப்பர்கள். நமக்குத் தெரியாதப் பல விடயங்களை அவர்கள் நமக்குச் சொல்லித் தருவார்கள். 
                                  இதை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். தொடர்ந்து, நான்காவது நிலையாகும். இந்நிலை 3 வயது முதல் 7 வயது வரையாகும். இந்நிலையைச் சக்தி நிலை என்பார்கள். அதிகமாக துறு துறுவென இருப்பார்கள். அவர்களின் நிலையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இறுதியாக, 7 வயதிற்குப் பிறகு இன்று வரை அவர்களுடைய வாழ்க்கைப் பதிவுகள் என்பார்கள். நம்முடைய வாழ்கையும் தான். 7 வயது வரை என்ன பதிவுச் செய்தோமா அது தான் நம்மைத் தொடர்ந்து வரும். மனிதனுடைய வாழ்க்கை நேற்றையப் பதிவுகள்.

                   இப்பொழுது மீண்டும் நினைவுப்படுத்திப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் எதுவென்று. வானில் 100 கோடி நட்சத்திரம் இருந்தாலும், சூரியன் வழிவிட்டால் தான் நட்சத்திரம் மின்ன முடியும். அதுபோலவே, உங்களுடையக் குழந்தைகள் மின்ன வேண்டும் என்றால் நீங்கள் வழிவிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். மாவீரன் நெப்போலியனைத் தோற்கடித்தக் காரணம் ஆயிரம் இருக்கலாம். ஆனால், டுக் ஆப் வெள்ளிங்டன் என்ற அந்த தளபதி தன் சிறு வயதிலே நெப்போலியனைப் பல முறை தோற்கடித்த தைச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், டுக் ஆப் வெள்ளிங்டன் தான் சிறுவனாக இருந்த போது, இராணுவ பொம்மைகளை வைத்து போர்க்கல விளையாட்டு விளையாடுவாராம். அதில், நெப்போலியனைத் தோற்கடிப்பது போல் உருவகப்படுத்தி மகிழ்வாராம். இறுதியாக, வோட்டர்லு எனும் இடத்தில் நெப்போலியன் தோற்றுப் போனதை உலகமே நம்ப மறுத்தது.

                      பிள்ளைகள் தான் நம்முடைய உண்மையான சொத்துக்கள். அவர்களைக் கவனிக்க ஆரம்பியுங்கள். பின்னாளில் அவர்கள் உங்களைக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடலில் சுற்றித்திரியும் ஆமை கரையில் வந்து தான் முட்டையிடுகின்றன. முட்டையிட்டப்பிறகு, கடலிலிருந்து கொண்டே தான் இட்ட முட்டையை நினைத்து உருகுமாம். அந்த நினைவின் வெப்பமும், மணலின் வெப்பமும் சேர்ந்து அம்முட்டைகள் வெடித்து ஆமைக்குஞ்சுகளாக வெளி வருகின்றன. ஆமையின் எண்ணங்களின் வலிமையே இப்படி இருக்கும் பொழுது, மனிதர்களின் எண்ணங்கள் இன்னும் எப்படி இருக்கும்?


                   உலகில் சாதித்த அத்தனைப் பேரும் தன் சிறுவயதில் கண்டுபிடிக்கப்பட்டவர்களே! அவர்களின் திறமையைப் பட்டயம் தீட்டியது நிச்சயம் அவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் தான்.  இனியாவது கவனித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளை எழுதி வைத்து வாருங்கள். பூத்துக் குலுங்கும் பூக்களைப் போல, உங்களின் பிள்ளைகளும் பூத்துக் குலுங்குவது நிச்சயம். குழந்தைகளின் கேள்விகளில் நமக்கு அறிவு பிறக்கிறது. அறிவின் தேடுதல் அவர்களிடம் தான் இருக்கிறது என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அடிக்கடி உரைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

                                  நமது அணு சக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கு சிறுவர் என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களோடு பேசுகையில் அவரும் சிறுவராகிவிடுவார். ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தால் அது இலட்சியம்என்று ஐயா கலாம் சொல்லியிருப்பதை யோசித்துப் பாருங்கள். இனியாவது உங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.