எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ் ஆசிரியம் தழைக்க வேண்டும்...

தமிழ் ஆசிரியம் தழைக்க வேண்டும்...

தமிழ் ஆசிரியம் உருவாக்கத்திற்கு 4 கூறுகள் மிக முக்கியமானவை.
அவை பின்வருமாறு....

ஆசிரியர்ண்டா அர்ப்பணிப்பு  இருக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா ஈடுபாடு இருக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா அலைகளை உருவாக்க
வேண்டும்......
ஆசிரியர்ண்டா அடையாளத்தை ஏற்படுத்த
வேண்டும்

                                       இந்த 4 கூறுகளைக் கொண்ட தேடல் தான் இந்த கட்டுரையின் நோக்கம். எல்லா ஆசிரியர்களும் ஒன்றுதானே....ஏன் அவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான் ' என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக் கொப்ப, நாம் செய்கின்ற தொழிலில் நிச்சயமாக வேறுபாடு உள்ளது என்று திருவள்ளுவர் கூறுவதை கவனிக்கத்தக்கது.  அந்த வேறுபாட்டைத் தான் தொழில்திறன் என்கிறார்கள்.

                நிச்சயமாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் இத்தொழில் திறன் மாறுபடுகிறது. அந்த மாறுபாட்டிற்கேற்பத்தான் ஆசிரியர்களின் கற்றல் & கற்பித்தல் சூழ்நிலையும் அமைகிறது. இப்பொழுது கேள்வி என்னவெனில் தமிழாசிரியர்கள் தமிழ்ப்பள்ளியை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்களா அல்லது தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறதா? ஒவ்வொரு தமிழாசிரியர்களும் இக்கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.  எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்கிற பாடலுக்கு ஏற்ப எல்லா ஆசிரியர்களும் கற்பித்தலில் சிறந்தவர்கள் தான், ஆனால் அடையாளம் கண்டு வெளிக் கொணர்வது பள்ளியின் தலைமைத்துவமே.

                  மாநில மற்றும் தேசிய அளவில் உயிர்த்தெழும் பள்ளிகளின் பண்புகளை ஆராய்வோனால் இரண்டு நிலைகளை நாம் கண்டறிய முடியும். ஒன்று நேர்மறை அலைகள் மற்றொன்று எதிர்மறை அலைகள். இதில் எது அதிகமாக மேலோங்குகிறதோ அதன் அடிப்படையிலேயே பள்ளியின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் காணப்படுகிறது. ஆதலால், தமிழாசிரியம் நிறைந்த ஓர் ஆசிரியர் இருப்பாராயின் உலகத் தர வரிசையில் தமிழ்ப்பள்ளிகள் தவழ முடியும். அதற்குத் தேவை அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அடையாளம் மற்றும் அலைகள்.

                     அர்ப்பணிப்புக்கு அன்னை தெரேசாவையும், ஈடுபாட்டிற்கு அண்ணல் காந்தியையும், அடையாளத்திற்கு சுவாமி விவேகானந்தாவையும் மற்றும் அலைகளுக்கு புரட்சிக் கவிஞர் பாரதியாரையும் காண்பது மிகச் சிறப்பு. இப்பண்புகள் ஒருங்கே கிடைக்கப் பெறும் தமிழாசிரியர் யாராக இருப்பினும் அவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது நமது கடமையாகும். திரிந்து கிடக்கும் இவர்களை முதலில் ஒன்றுதிரட்ட வேண்டும். நோக்கத்தைத் தெளிவு படுத்தி திட்டங்களைத் தீட்ட வேண்டும். இஃது சாத்தியம் என்றால் தமிழ்ப்பள்ளிகள் மிளிர்வது நிச்சயம்.

                  தமிழாசிரியம் பிறப்பதற்கு ஒவ்வொரு தமிழாசியரும் சிந்தனை மாற்றத்திற்கு வந்திடல் வேண்டும். அதற்கு நல் எண்ணங்களை வித்திடல் வேண்டும். தமிழ்ப்பள்ளிக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வாருங்கள். தமிழ்ப்பள்ளியின் மூலம் நேர்மறை அலைகளை உருவாக்குங்கள். அதற்குத் தேவை அர்ப்பணிப்பும், முழு ஈடுபாடும் கொண்ட தமிழாசிரியர்கள். தேவையானால் இலட்சியத்திற்கான பாதையை மாற்றுங்கள் ஆனால் இலட்சியத்தை மாற்றாதீர்கள். தேசிய கல்வித் திட்டம் உருமாறிக் கொண்டிருக்கும் காலமிது. நாம் மாறித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், காலத்தின் கட்டாயத்தால் நாம் மாற்றப்படுவோம்.  மாற்றம் ஒன்றே நிரந்தரம். நாம் வேலையில் சேர்ந்த அன்றே நம்முடைய பணி ஓய்வு திகதியும் உறுதிச் செய்யப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். இஃது ஒரு தற்காலிக வேடமே தவிர நிரந்தரத்  தடம் அல்ல.

                   ஒரு சிறிய பானையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அந்த பானையில் நிறையப் பஞ்சை வைத்தால் என்னவாகும்? அந்த நீரை எல்லாம் உரிஞ்சிவிடும். அந்த நீரைப் போன்று தான் மாணவர்களும். ஆசிரியர்கள் பஞ்சாக இருந்தால் மாணவர்களின் திறமை மேலோங்க அல்லது வெளிக்கொணர வாய்ப்பில்லை. மீண்டும் அந்த பானையில் சுரை விதைகளைக் கொட்டினால் என்னவாகும்? பானையில் உள்ளத் தண்ணீரை மூழ்கடித்து விடும். மாணவர்களின் திறமை மறைக்கப்பட்டு விடும். ஆசிரியர்களே இங்கு பெரிதாகக் காணப்படுவர். மாணவர்களின் மனங்களிலும் அது பதிந்து விடும். அடுத்து, அந்த பானையில் களிமண்ணைக் கலந்தால் தண்ணீர் கலங்கிவிடும். மாணவர்களும் அப்படித்தான். களிமண்ணைப் போன்று குளம்பிய  மாணவர்கள் எப்படி முன்னேற முடியும்? இறுதியாக, தண்ணீரில் சீனியைக் கலந்தால், அது தண்ணீரோடு கலந்து குடிப்பவர்க்கும் இனிக்கும். அது போலத்தான் ஆசிரியர்களும். நம்மால் அனைவரின் வாழ்க்கையும் இனிக்க வேண்டுமே தவிர இம்சையாகிவிடக்கூடாது. ஆசிரியர் தொழில் தழைக்க வேண்டுமாயின் தமிழ் ஆசிரியர்கள் உழைக்கத்தயாராக இருக்க வேண்டும். 
   
                    கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு ஞானி பகலிலே விளக்கைக்  கையில் வைத்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருப்பாராம். என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டால், ‘மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்என்பாராம். அதேப் போலத்தான் நம் தமிழ்த்தாயும். கைகளில் விளக்கை வைத்துக் கொண்டு நல்லாசிரியரைத் தேடிக் கொண்டிருக்கிறார். நாட்டில் இருக்கும் 9000 தமிழாசிரியர்களில் அர்ப்பணிப்பு, அடையாளம், ஈடுபாடு மற்றும் அலைகளை ஏற்படுத்தும் தமிழாசிரியர்களை தமிழ்த்தாய் தேடிக் கொண்டிருக்கிறாள். என்னையும் சேர்த்து தான். நான்கு வேதங்களைப் போல இந்த நான்கு கூறுகளும் தக்க அணிகலன்களாக அணிந்து கொண்டால், நிச்சயம் தமிழ்ப்ள்ளிகள் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை. திருமந்திரத்தில் 2885-ஆவது பாடலில் எழுதாத புத்தகத்தின் எழுத்து என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆன்மிகத்தில் இது வேறு ஒரு பொருளைக் குறித்தாலும், தமிழாசிரியம் தழைக்க வேண்டின் எழுதாத புத்தகத்தின் எழுத்து போல் மறைபொருளாக ஆசிரியர்கள் இயங்கத்தான் வேண்டியிருக்கிறது.


                     மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளைத் தொட்டு விட்ட நிலையில் மலேசிய மண்ணிற்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உன்னதத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தமிழாசிரியர்களின் எழுச்சியே நம் சமூதாயத்தின் உண்மையான உயர்ச்சி என்பதை அறிக. மலேசிய தமிழாசிரியம் உலகமெங்கும் முழங்க வேண்டும். தமிழ்நாடு நம்மைத் திரும்பிப்பார்க்கும் வண்ணம் உயர்ந்திடுவோம். தமிழாசிரியர்களின் தரம் உயர ஒவ்வொரு தமிழாசிரியரும் அர்ப்பணிக்க வேண்டும், முழு ஈடுபாடு இருக்க வேண்டும், அதீத அலைகளை உருவாக்க வேண்டும் மற்றும் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். இதுவே, தரணியில் தமிழாசிரியம் தழைக்க அடித்தளமாகும்.