எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 14 மார்ச், 2017

‘என் கடன் பணி செய்து கிடப்பது!’


                    நால்வர் அருளிய ஐந்தாம் திருமுறையில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தான் தன் கடன் பணி செய்து கிடப்பது. அதன் முழுப்பாடல் பின்வருமாறு,
நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே

                    7-ஆம் நூற்றாண்டிலே உதிக்கப்பட்ட இச்சிந்தனை 21-ஆம் நூற்றாண்டிலும் எப்படி மிளிர்கிறது என்பதை ஆராய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம். அதிலும், ஆசிரியர் பணியில் எந்தளவுக்கு இப்பாடல் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

                   ஒரு நல்லத் தமிழாசிரியரின் கடமை பணி செய்து கிடப்பதுவேயன்றி வேறொன்றும் இல்லை. பணி என்றச் சொல்லுக்குச் சேவை என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு ஆசிரியரும் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உணர்ந்து கொண்டால் தமிழ்ப்பள்ளிகள் நிச்சயம் மிளிரும். ஒரு கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தால், பல சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் தத்தம் வேலைகளைச் செய்யும். ஒன்றோடொன்று மோதிக் கொள்வது கிடையாது. இப்படி ஓயாமல் உழைப்பதால் தான் அஃது உயரத்தில் இருக்கிறது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதைப் போல் ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரு முறை மணி காட்டும். சிந்தித்துப் பாருங்கள்.

                   ஆக, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் சக்கரத்தைப் போல சுழன்று கொண்டே இருந்தால் எல்லாத் தமிழ்ப்பள்ளிகளும் நிச்சயம் உயரத்தில் இருக்கும். ஒரு பள்ளிக்கூடத்தின் பலமே அங்கு இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களின் பலம் மற்றும் அவர்களின் ஒருமித்தக் கருத்தே ஆகும். பள்ளியில் எந்த ஆசிரியர்களும் தனித்து இயங்க முடியாது. அப்படி இயங்கினால் நிச்சயம் அப்பள்ளித் தோற்றுப் போகும். நீங்கள் எறும்பு ஊர்ந்துச் செல்வதைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். எந்த எறும்பும் நின்று பேசி விளையாண்டதை வரலாறு பார்த்ததில்லை. இதைத் தான், தன் கடன் பணி செய்து கிடப்பது என்கிறேன். எறும்பின் வெற்றி பேசாதது அல்ல, மாறாக அதன் கூட்டு முயற்சியே. 

                       நம் பள்ளிகளின் வெற்றியும் அதுவே. கூட்டு முயற்சிக்கு அடிப்படையாக இருப்பது பணி செய்து கிடப்பது. இதுவே, ஒவ்வொரு நல்லாசிரியரின் உயர்ந்த பண்பும் கூட. நாட்டில் எந்தப் பள்ளியாவது ஒளிர்கிறது என்றால் அந்தப் பள்ளியை ஒரு குடைக்கு ஒப்பீடுச் செய்யலாம். காரணம், ஒவ்வொரு குடைக்குள்ளும் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கான விடை அங்கு தான் இருக்கிறது.  ஒரு விரிக்கும் பொழுது, நிறையக் கம்பிகள் ஒன்று சேர்ந்து ஒரே அளவாகப் பிரியும். ஒரு கம்பி உடைந்தாலும் குடை அதன் தன்மையை இழந்து விடும். குடையில் உள்ள ஒவ்வொரு கம்பியும் அதன் பணியைச் செவ்வனே செய்கின்றன.

                   அந்தக் குடையைப் போன்று தான் ஒரு பள்ளியும். ஓர் ஆசிரியர் சோடைப் போனாலும் பள்ளியின் வளர்ச்சி உடைந்த குடை போன்றாகிவிடும். சிந்தித்துப் பார்த்தால் சீர் பெற முடியும். கொஞ்சம் சூரியக் குடும்பத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். தன் கடன் பணி செய்து கிடப்பது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 9 கிரகங்களும் தன்னுடையச் சுற்றுப் பாதையிலிருந்து விலகியதாக எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியர்களைப் பற்றிய அதிருப்தியும், ஆசிரியர்கள் மத்தியில் பெற்றோர்களைப் பற்றிய அதிருப்தியும் வரக் காரணம் என்ன? இரு சாராரும் குறைகளைப் பற்றி ஆராயும் வேகத்தை விட, நிறைகளைப் பற்றி ஆராயும் சோகமே அதிகம். அதனால் தான் மீண்டும் மீண்டும் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உரக்கச் சொல்லுகின்றேன்.

                   இராமாயண காவியத்தில் இராமர் நினைத்திருந்தால் சீதையைத் தனியா ளாக காப்பாற்றியிருக்க முடியும். ஏன் ராமர் அவ்வளவுப் பெரியப் படையைத் திரட்ட வேண்டும்? ஆஞ்சநேயர் ஒருவர் போதுமே சீதையை மீட்பதற்கு. இங்கு தான் வாழ்க்கை எனும் பாடம் போதிக்கப்படுகிறது. காரணம் வேறு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இராமர் படையில் திரண்ட அத்துணை ஜீவராசிகளையும் கவனியுங்கள். ஒவ்வொன்றும் தத்தம் கடமையைச் செய்ததே அந்த வாழ்க்கைப் பாடம். ஒன்று திரண்டால் தான் வெற்றியும் புகழும் வரும். அதனால் அனைவரும் நன்மையடைவர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயலாற்றுவது பள்ளிக்கு மட்டும் அல்ல, தமிழ் சமூதாயத்திற்கே பெரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் யார் இராமர் என்பது முக்கியமல்ல, மாறாக இராவனனாக இல்லாமல் இருந்தால் போதும்.

                    தூக்கணாங்குருவி தன் கடன் பணி செய்து கிடப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. கூடு கட்டும் பொழுது, தான் கட்டியக் கூடு கீழே விழுந்து விட்டால் மீண்டும் புதியக் கூடு கட்டுமே ஒழிய விழுந்தக் கூட்டை எடுக்காது. எத்தனை முறை கீழே விழுந்தாலும் மீண்டும் எடுக்காது. தூக்கணாங்குருவியிடம் இருக்கின்ற அந்த விடா முயற்சி மற்றும் மீண்டும் இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தும் முறைமையை கண்டு நாம் கற்றுக் கொள்ளும் மிகச் சிறந்த பாடம். ஆசிரியர்கள் மத்தியில் ஆயிரம் சிந்தனைகள் இருக்கலாம். ஆனால், அத்துணைக்கும் அஸ்திவாரமாய் இருப்பது மனத் தடைகள். தடைகள் உடைபடும் பொழுது தான் பலப் பள்ளிகள் வெளிச்சத்திற்கு வருகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தான் இருக்கின்ற பள்ளியிலே தூக்கணாங்குருவி போல உருமாற வேண்டும். பணி செய்வதை ஒரு பிணியாக நினைக்கக் கூடாது. இனி காலங்கள் நம் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம் என்று நினைத்து பணி செய்வதில் ஓர் அணியாகத் திரள வேண்டும்.
ஒன்றே செய்தல் வேண்டும்...
ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும்...
நன்றும் இன்றே செய்தல் வேண்டும்...
இன்றும் இன்னே செய்யவும் வேண்டும்

என்ற கபிலரகவல் கூறுவது போல் தன் கடன் பணி செய்து கிடப்பது என்று உறுதி கொள்வோம்.