உலகத்தில் பிரிக்க முடியாதது
என்பது நிறைய உள்ளன. கல்வியைப் பொருத்த மட்டும் பிரிக்க முடியாதது எது என்று
கேட்டால் பாடமும் விளையாட்டுத் துறையும் (இணைப்பாடம்) ஆகும். தேசிய கல்வி
தத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாணவன் 7 வயதிலிருந்து 18 வயது
வரை தன்னுடைய ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யும் பொழுது ஒரு
முழுமைப்பெற்ற மாணவனாக உருவாக்கம் பெற்றிருக்க வேண்டும். தன்னுடையப் பிள்ளை கல்வியிலும் இணைப்பாடத்திலும்
சரிசமமாக வளர வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் கல்வியை வைத்து மட்டும் நாம் ஒரு மாணவனை அளவிட முடியாது. மாறாக, வகுப்பறையை
விட்டு பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில மற்றும் தேசிய அளவிலும்
என்ன சாதித்தார்கள் என்று அளவிட வேண்டும்.
செய்தி என்னவென்றால், ஒவ்வொரு மாணவரும் தாம் எஸ்.டி.பி.எம் வரை விளையாட்டு
மட்டும் இணைப்பாடத்தில் கலந்து கொண்டு பெற்ற அனைத்து சான்றிதழுக்கும் மொத்தமாக 10 புள்ளிகள்
கொடுக்கப்படும். அந்த 10 புள்ளிகள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குச் சேர்த்துக்
கொள்ளப்படும். அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் கல்விக் கடனுதவி கிடைப்பதற்கும், பல்கலைக்கழகத்தில்
சில தனிச் சிறப்புகள் கிடைப்பதற்கும் இணைப்பாடம் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றது.
நாட்டின் நீர் மூழ்கி வீராங்கனை பண்டலேலா ரினோங் லண்டன் ஒலிம்பிக்கில் பெற்ற
வெண்கல பதக்கம் அவருக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் சிறந்த இடத்தை அளித்திருக்கிறது.
அவருக்கு அஸ்ரேலியா பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு இடம் கிடைத்ததை நாம்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெருமைக்கும் இணைப்பாடத்தின்
மேன்மையாகும்.
உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த பெருமை கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக
பள்ளியில் நடைபெரும் அனைத்து இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் பிள்ளைகளை அனுப்பி
ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுங்கள்.
‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருத்தல் ஆகாது-பாப்பா
மாலை முழுதும் விளையாட்டு-
என்று வழக்கப்படுத்திக் கொள்ளு-பாப்பா’
என்பது பாரதியாரின் பொன்னால் பொரிக்கப்பட்ட வைர
வரிகளாகும். அப்பொழுதே பாரதியார் விளையாட்டின் மேன்மையை நமக்கெல்லாம் நன்கு
உணர்த்தியிருக்கின்றார். நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருனம் இது.
இக்கருத்தினையே சுவாமி விவேகானந்தரும் தம்முடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு
ஒன்றின் மூலம் நமக்கெல்லாம் தெளிவு படுத்துகின்றார். ஒரு முறை பள்ளித்திடலில் சில
மாணவர்கள் காற்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
ஒரு மாணவன் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு கீதையை வாசித்துக்
கொண்டிருந்தான். உடனடியாக விவேகானந்தர் அந்தச் சிறுவனிடம் சென்று கீதையை வாசிப்பதை
வைத்து விட்டு காற்பந்து விளையாடச் என்றார். பிறகு, இச்செயலைப் பற்றி அவரிடம்
வினவிய போது, அவர் கூறிய பதில் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது.
‘காற்பந்து விளையாடும் பொழுது நம் உடம்பின் நரம்புகள்,தசைகள்,இரத்த நாளங்கள்
யாவும் சுறுசுறுப்பு பெற்று புது தெம்பு பெறுகிறது.மூலையும் சுறுசுறுப்பு
பெறுவதால் நாம் படிப்பது விரைவில் மனமும் மூலையும் ஏற்றுக் கொள்கிறது.’ எவ்வளவு
பெரிய அறிவியல் நமக்கெல்லாம் உண்மையை அவர் உணர்த்தியிருக்கின்றார். ஆக, விளையாட்டின் மேன்மையை உணர்ந்து
நம் பிள்ளைகளுக்கு விளையாட்டுத்துறையில் முன்னேற ஒரு வாய்ப்பு அளிப்பது ஒவ்வொரு
பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.
கடலில்
எந்தத் துளி முதல் துளி என்று யாராலும் கூற முடியுமா? அதுபோல் தான் உங்கள்
பிள்ளைகளிடம் எத்தகையத் திறமை இருக்கிறது என்று நீங்கள் கணிக்க முடியாது.
மலேசியாவின் விளையாட்டுத்துறை நம் தமிழ் இளைஞர்களுக்காக காத்துக்கிடக்கிறது.
கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதே சாலச்சிறந்தது. மலேசியாவின் முன்னாள் பறக்கும் பாவை என்று பெயர்
எடுத்த ஜி.சாந்தியின் 23 ஆண்டு கால 100 மீட்டர் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது.
நாட்டின் புதிய மின்னல் ஓட்ட வீரர் சாய்டாதுல் உஸ்நியா சுல்கிப்லி சரித்திரம்
படைத்ததை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 23 ஆண்டு காலமாக இன்னொரு
ஜி.சாந்தியை உருவாக்குவதில் ஏன் இவ்வளவுத் தடைகள்?
காரணங்கள்
எதுவாக இருப்பினும் ஆக்கமே இப்பொழுது நமக்கு அவசியமாகிறது. நெல் வயல்களில் நிறைய
வயல்கால்கள் காணப்படும். அந்த வயல்கால்களில் நிறையத் தண்ணீர் தேக்கி
வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்ணீர் வெளியாகாமல் இருப்பதற்காக மடை ஒன்றை உருவாக்கி
வைத்திருப்பார்கள். மடையைத் திறந்தால் தான் தண்ணீர் நெல்வயல்களுக்கு பாய்ச்சப்படும்.
மடையைத் திறப்பதற்கு விவசாயி கடமைப்பட்டுள்ளான். நெல் வயல்களுக்குத் தண்ணீர் தயாராக
இருப்பது போல், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்திறமை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது
என்பது உண்மை. அதைத் திறந்து விட அல்லது வெளிக் கொணர ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள்
தயாராக இருக்க வேண்டும்.
இணைப்பாடத்தின் வாயிலாக அத்திறமையை
மிக விரைவில் கண்டு கொள்ள இயலும். சமீபத்தில் இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வென்ற
டத்தோ லீ சோங் வேய்யை நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப் துன் ரசாக் அவர்கள் வெளிப்படையாகப்
பாராட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாட்டிற்குப் பெருமைச் சேர்த்த டத்தோ லீ சோங்
வேய்யைப் போன்று நம் மாணவர்களும் அந்நிலையை அடைய முடியும். ஆதலால், விளையாட்டுத்துறைக்கு அடிப்படையாய் இருப்பது இணைப்பாடம்
என்பது எள்ளலவும் சந்தேகம் கிடையாது. இனி முன்னோக்கிச் சென்று இணைப்பாடத்தில் மீட்சி
நிலையை உருவாக்க ஆசிரியர்களோடு பெற்றோர்களும் இணைந்து செயலாற்ற உறுதிப்பூன வேண்டும்.