எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 8 மார்ச், 2017

‘உங்கள் பிள்ளைகளின் இலட்சிய வார்த்தைகளை அலட்சியம் செய்து விடாதீர்கள்!’

                                   ‘உன்னுள் ஓர் ஆசை எழுந்ததானால் அதை அடையும் திறமை உன்னுள் இருப்பதனால் தான் அது எழுந்தது என்ற வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். மனோவியலில் மிக உயர்ந்த தத்துவம் இது. உங்கள் பிள்ளைகள் ஆசை ஆசையாய் சொன்ன வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறதா? அது விளையாட்டாய் உச்சரித்த வார்த்தைகள் அல்ல, இலட்சியத் துளிர்விட்ட வார்த்தைகள் அவை. உங்கள் பிள்ளைகள் இலட்சியத்தைப் பற்றி சும்மா பேசினால் விட்டுவிடுங்கள். ஆனால், அதனையே சும்மா சும்மா பேசினால் விட்டுவிடாதீர்கள். அது அவர்களின் எதிர்காலத்தின் அடையாளம்.

                                      மிக உயர்ந்த நவரத்தினமான வைரத்தைத் தோண்டித்தான் எடுக்க வேண்டும். அதைப் போல, உங்கள் பிள்ளைகளின் தனித்திறமையை அவர்களின் எண்ணங்களின் ஆழத்திற்குச் சென்று தேடித்தான் எடுக்க வேண்டும். எண்ணங்கள் தான் வார்த்தைகளாக மாறுகின்றன. அப்படி எழும்புகின்ற எண்ணங்களை முடக்கி விடாதீர்கள். கொஞ்சம் ஆய்வுச் செய்து பாருங்கள். ஆயிரம் நம்பிக்கைகள் பிறக்கும். அண்ணல் காந்தி அவர்கள் தான் சிறு வயதாக இருந்தபோது அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்தப் பிறகு உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார். தன் சிறு வயதில் எடுத்த அந்த உறுதி மொழியே  அண்ணல் அவர்களை மஹாத்மாவாக மாற்றியது. தன் பெற்றோர்களிடம், ‘இனி நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்று சொன்ன அந்தச் சூழல் உங்கள் பிள்ளைகளுக்கும் அமையாதா  என்ன? இனி தேட வேண்டிந்து உங்கள் கடமை.

                           ஒரு குழந்தைப் பிறக்கும் போதே 9 வகையான அறிவுத்திறனுடன் பிறக்கிறது என்று பேராசிரியர் ஆர்வட் கார்டனர் உரைத்திருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அந்த 9 வகையான அறிவுத் திறனில் ஒன்றுகூடவா உங்கள் பிள்ளைகளிடம் இல்லாமல் போயிற்று. ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை மணி காட்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவர்கள் நல்லவர்களாவதும் தீயவர்களாவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளை அசைப்போட்டுப் பாருங்கள். உண்மை விளங்க வெகு தூரமில்லை. குழந்தை மனோவியலில் குழந்தைகளின் வளர்ச்சியி  னை 5 வகையாகப் பிரித்துள்ளனர். முதலாவது, கற்பக் காலம். இது முழுக்க முழுக்க இறைநிலை தொடர்புடையது. இரண்டாவது, குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரையிலாகும். இந்நிலையில், குழந்தைகள் தன்னந்தனியாக மேலே பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு விளையாடுவார்கள். உண்மையில் அவர்கள் தேவதைகளுடன் தொடர்புக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து, மூன்றாவது நிலை. இது 6 மாதம் முதல் 3 வயது வரையாலானது. இந்நிலையில் குழந்தைகள் குருவாக மாறியிருப்பர்கள். நமக்குத் தெரியாதப் பல விடயங்களை அவர்கள் நமக்குச் சொல்லித் தருவார்கள். 
                                  இதை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். தொடர்ந்து, நான்காவது நிலையாகும். இந்நிலை 3 வயது முதல் 7 வயது வரையாகும். இந்நிலையைச் சக்தி நிலை என்பார்கள். அதிகமாக துறு துறுவென இருப்பார்கள். அவர்களின் நிலையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இறுதியாக, 7 வயதிற்குப் பிறகு இன்று வரை அவர்களுடைய வாழ்க்கைப் பதிவுகள் என்பார்கள். நம்முடைய வாழ்கையும் தான். 7 வயது வரை என்ன பதிவுச் செய்தோமா அது தான் நம்மைத் தொடர்ந்து வரும். மனிதனுடைய வாழ்க்கை நேற்றையப் பதிவுகள்.

                   இப்பொழுது மீண்டும் நினைவுப்படுத்திப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் எதுவென்று. வானில் 100 கோடி நட்சத்திரம் இருந்தாலும், சூரியன் வழிவிட்டால் தான் நட்சத்திரம் மின்ன முடியும். அதுபோலவே, உங்களுடையக் குழந்தைகள் மின்ன வேண்டும் என்றால் நீங்கள் வழிவிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். மாவீரன் நெப்போலியனைத் தோற்கடித்தக் காரணம் ஆயிரம் இருக்கலாம். ஆனால், டுக் ஆப் வெள்ளிங்டன் என்ற அந்த தளபதி தன் சிறு வயதிலே நெப்போலியனைப் பல முறை தோற்கடித்த தைச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், டுக் ஆப் வெள்ளிங்டன் தான் சிறுவனாக இருந்த போது, இராணுவ பொம்மைகளை வைத்து போர்க்கல விளையாட்டு விளையாடுவாராம். அதில், நெப்போலியனைத் தோற்கடிப்பது போல் உருவகப்படுத்தி மகிழ்வாராம். இறுதியாக, வோட்டர்லு எனும் இடத்தில் நெப்போலியன் தோற்றுப் போனதை உலகமே நம்ப மறுத்தது.

                      பிள்ளைகள் தான் நம்முடைய உண்மையான சொத்துக்கள். அவர்களைக் கவனிக்க ஆரம்பியுங்கள். பின்னாளில் அவர்கள் உங்களைக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடலில் சுற்றித்திரியும் ஆமை கரையில் வந்து தான் முட்டையிடுகின்றன. முட்டையிட்டப்பிறகு, கடலிலிருந்து கொண்டே தான் இட்ட முட்டையை நினைத்து உருகுமாம். அந்த நினைவின் வெப்பமும், மணலின் வெப்பமும் சேர்ந்து அம்முட்டைகள் வெடித்து ஆமைக்குஞ்சுகளாக வெளி வருகின்றன. ஆமையின் எண்ணங்களின் வலிமையே இப்படி இருக்கும் பொழுது, மனிதர்களின் எண்ணங்கள் இன்னும் எப்படி இருக்கும்?


                   உலகில் சாதித்த அத்தனைப் பேரும் தன் சிறுவயதில் கண்டுபிடிக்கப்பட்டவர்களே! அவர்களின் திறமையைப் பட்டயம் தீட்டியது நிச்சயம் அவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் தான்.  இனியாவது கவனித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளை எழுதி வைத்து வாருங்கள். பூத்துக் குலுங்கும் பூக்களைப் போல, உங்களின் பிள்ளைகளும் பூத்துக் குலுங்குவது நிச்சயம். குழந்தைகளின் கேள்விகளில் நமக்கு அறிவு பிறக்கிறது. அறிவின் தேடுதல் அவர்களிடம் தான் இருக்கிறது என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அடிக்கடி உரைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

                                  நமது அணு சக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கு சிறுவர் என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களோடு பேசுகையில் அவரும் சிறுவராகிவிடுவார். ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தால் அது இலட்சியம்என்று ஐயா கலாம் சொல்லியிருப்பதை யோசித்துப் பாருங்கள். இனியாவது உங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.