‘இந்தப் பிரபஞ்சமே நீங்கள் அல்லவா! நீங்கள் அல்லாத ஏதாவது இங்கே இருக்கிறதா
என்ன? இந்தப் பிரபஞ்சத்தின் ஆன்மா
நீங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே நீங்கள் தாம். நீங்களே எங்கும் பிரகாசித்துக்
கொண்டிருக்கிறீர்கள். இப்பிரபஞ்சம் முழுவதுமே நீங்கள் தாம்’ என்று சுவாமி விவேகானந்தா தன்னுடைய ஞான யோகத்தில்
இவ்வாறு குறிப்பிடுகிறார். இதை விட வேறு வார்த்தை என்ன வேண்டும் உங்களுக்கு? அதனால் தான் சொல்லுகிறேன் மாணவ பிரம்மாக்களே! தன்னை
அறிந்து கொண்டால் நீங்களும் தரணி ஆளலாம். நிச்சயமாக!
நாளையச் சரித்திரம் எழுத இன்றே
புறப்படுங்கள். தேர்வுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். தேர்வு உங்களுக்காகக்
காத்திருக்கட்டும். அப்படியொரு மனோதிடம் உங்களிடம் வேண்டும். விரை ஒன்று போட சுரை
ஒன்று முளைக்குமா?
‘தூய நெஞ்சில்
எழுகின்ற எண்ணங்களுக்குச் சக்தி மிக உண்டு. அத்தகைய நெஞ்சத்தில் எழுகின்ற
எண்ணங்களே சத்திய சங்கல்பங்கள் ஆகின்றன’
என்று சுவாமி ஆத்மானந்தா உறுதியோடு கூறுகின்றார். தரணி ஆள இதை விட என்ன வேண்டும்? சூரியன் தாமரையை மலரச் செய்கின்றான். சந்திரன்
அல்லியை மலரச் செய்கின்றான். உங்களின் மனதை மலரச் செய்ய மேலும் படித்துப்
பாருங்கள். தரணி ஆள்வதற்கு பிறவி தகுதி தேவையில்லை; மாறாக நீங்கள் இன்று செய்கின்ற செயலே காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்’
என்ற
குறளினை உங்களின் மனதினில் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் செய்கின்ற தொழில் அல்லது செயலை வைத்தே நாளைய வாழ்வுதனை
நிர்ணயிக்கப்படுகிறது. சாதிக்கப் பிறந்த மாணவ பிரம்மாக்களே! ‘உங்களிடம் உள்ள குறைகளைக் கடந்து முன்னேறுங்கள்.
உங்களது மனதை அடக்கி நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்’ என்று உளவியல் மேதை ஜேம்ஸ் ஆலன் உரைத்திருப்பதை
உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில்
பிறந்தவர். போர் வீரனுக்கான எந்தப் பின்புலனும் இல்லை. உடல் ரீதியாகவும்
நிராகரிக்கப்பட்டவர். எல்லா வகையான ஏளனப் பேச்சுக்கும் கேலிக் கிண்டலுக்கும் ஆளாவர்.
ஆனால், பிறகு நடந்தது என்ன? பிரான்ஸ் சாம்பராஜ்யத்தின் முதல் பேரரசன் ஆனார். ஆம், அவர் தான் மாவீரன் நெப்போலியன். சாதாரண
குடும்பத்தில் பிறந்த ஒருவர் தரணி ஆளவில்லையா? அவரைப் போல் நீங்களும் நம்புங்கள். குறையைப் பார்க்காதீர்கள். நிறையைப்
பாருங்கள். உங்கள் பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும். முதலில் உங்களுக்கு
நீங்கள் எஜமானர்களாக இருங்கள். எழுந்து நில்லுங்கள், சுதந்திரர்களாக இருங்கள்.
‘இந்த உலகை ஆட்டி வைக்கும் சக்தி ஆற்றல்கள் உங்களது உள்
மனதில் இருக்கிறதே ஒழிய உடம்பில் இல்லை’ என்று ஜேம்ஸ் ஆலன் உரைத்ததை உங்களின் ஆழ் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஏன்
தெரியுமா? இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு ‘நிக் விஜுச்’ என்ற ஓர் இளைஞனின் பயணம். பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லை, வளராத கால்கள். ஆம் இது தான் அவரின் அடையாளம். அவர் பிறந்தவுடன்
அந்த தாய் மிரண்டு போனாள். ‘எடுத்து
எறிந்து விடுங்கள்’
என்று கூறினாள். ஆனால், பிறகு அதே தாய் நிக்கை இந்த உலகில் போராடுவதற்குத் தயார்
படுத்தினாள். தன் வாழ்க்கையில் இரு முறை நிக் வாழப்பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்
என்பது உங்களுக்குத் தெரியுமா?
அப்பொழுது தான் நிக் தன்னை அறியும்
அறிவைப் பெறுகிறார். ‘எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாதீர்கள்.
முன்னேற்றத்திற்கான எதிர்ப்புகள் இன்றியமையாதவை. வெற்றி என்ற காற்றாடி, எதிர்ப்பு என்ற காற்றை எதிர்த்துக் கொண்டு தான் மேலே பறக்கிறது’ என்று சிந்தனையாளர் நார்மன் வின்சன்ட்பீல் கூறியதை நிச்சயம்
நிக் படித்திருக்க வேண்டும். அவரைப் பார்க்கும் பொழுது நாம் அனைவரும் எல்லையில்லாத
தெய்வீகப் பேரொளியில் இருந்து தோன்றியவர்கள் என்று நிச்சயமாக நமக்குத் தோன்றும். ஆசீர்வதிக்கப்பட்ட
மாணவ பிரம்மாக்களே! ‘விதி ஒரு கதவை மூடும் பொழுது நம்பிக்கை
இன்னொரு கதவைத் திறக்கும்’ என்பார்கள். நம்பிக்கை
தான் எல்லாமே!
இரண்டாம் உலகப் போரின் நாயகன் சர்
வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய சிறு வயதில் படிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவம். சிறுவனான
சர்ச்சிலுக்கு அன்று வகுப்பில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. சர்ச்சிலின் தேர்வுத்
தாளை வாங்கிப் பார்த்த ஆசிரியருக்கு ஒரே ஆச்சர்யம். விடைத்தாளில் சர்ச்சில் விடையை
எழுதாமல் பேனா மையைத் தெளித்து விட்டு அதனை ஆய்வுச் செய்து கொண்டிருந்தார். ஆசிரியர்
அதனை வாங்கி, ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சர்ச்சில் வெள்ளைத் தாளில்
தெளித்த மைகளைக் காட்டி, ‘எதிரியின்
கப்பல்கள் நம் நாட்டின் மேலே பறந்து கொண்டிருக்கின்றன. அதனை எப்படி வீழ்த்துவது என்று
திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்றாராம். அப்படியொரு
நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் நீங்களும் ஜெயிக்கலாம்.
‘பாறையைப்போல் உறுதியாக நில்லுங்கள். உங்களுக்கு அழிவே இல்லை. நீங்களே இப்பிரபஞ்சத்தின்
கடவுள்.’ என்று சுவாமி விவேகானந்தா நம்மை அழைக்கிறார்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. மலையிலிருந்து விழும் அருவி கடலில் போய் சேர்வதை எவ்விதம்
யாராலும் தடுக்க முடியாதோ, அதே போல் தரணி ஆள நினைக்கும்
உங்களின் நம்பிக்கையை யாராலும் தடுக்க முடியாது. ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்று முன்னோக்கிச்
செல்லுங்கள். தீர்மானிப்பது நீங்களாக இருக்கட்டும். முடிவை இறைவனிடம் விட்டு விடுங்கள்.
‘MAN PROPOSES AND GOD DISPOSES’ என்று ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள்.
ஆதலால், உடனே தொடங்குங்கள். உன்னதத்தை நீங்களும்
அடையலாம். ‘மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும்
கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள்;விழித்திருங்கள்.
குறிக்கோள், இலட்சியத்தை அடைந்தே தீருங்கள்!’ என்று கட உபநிடதத்தில் உங்களுக்காகவே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
உணர்ந்து கொண்டு உடனே புறப்படுங்கள். தன்னை அறியும் இரகசியமும் இதுவே!