எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுற்றி வரும் பண்பாடு மலரட்டும்...


                             ஒரு குழந்தை தன் தாயையே சுற்றி வரும். சுற்றி வந்தால் தான் அந்த குழந்தைக் கவனிக்கப்படும். சூரியக் குடும்பமே ஒரு சூரியனைச் சுற்றி வருவதைப் பார்த்திருப்போம். ஒன்பது கிரகங்களும் சுற்றி வந்தால் தான் அந்த சூரியக் குடும்பம் சரியாக இயங்கும். இந்த சுற்றி வருதல் கருத்தை அப்படியே வகுப்பறைக்கு மாற்றம் செய்யும் பொழுது ஒரு புதியப் பரிணாமத்தைப் பார்க்க முடியும். கற்றல் கற்பித்தல் முறையில் சுற்றி வருதல் என்பது ஓர் அடிப்படைத் திறன். சொல்லப் போனால் வெற்றியின் இரகசியமும் அதுதான். புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டு வரும் 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நுணுக்கத்தைப் புகுத்தினாலும் சுற்றி வரும் பண்பு இல்லாவிடின் அந்த கற்றல் கற்பித்தலில் அர்த்தமே இல்லை.

                             இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் இரகசியங்கள் ஏராளம். நாம் பார்க்கும் திறனைப் பொருத்தே அஃது அமைகின்றது. சுற்றி வரும் திறனை வகுப்பறையில் புகுத்தும் பொழுது அபரிமிதமான வளர்ச்சியைக் காண முடியும். நம்மைப் பொருத்த மட்டில் அது வகுப்பறை. ஆனால், மாணவ செல்வங்களுக்கு அது தான் முதன்மை உலகம். அவர்களின் எதிர்கால வளர்ச்சியும் வீழ்ச்சியும் இங்கு தன் ஆரம்பம் ஆகிறது. எல்லா மாணவர்களையும் நாம் நெருங்க வேண்டுமானால், அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக ஆசிரியர்கள் வகுப்பறையைச் சுற்றியே ஆக வேண்டும். மீன் தொட்டியில் உள்ள மீன்கள் அந்த தொட்டியையே சுற்றி வரும். அதன் ஆயுள் வரை அப்படித்தான். ஆசிரியர்கள் பாடம் முடியும் வரை சுற்றி வரும் பொழுது நிச்சயம் பாடத்தின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

                             வகுப்பில் மூன்று வகையான மாணவர்களைக் கவனிக்க வேண்டுமாயின் உட்கார்ந்து படித்துக் கொடுப்பது சரிவராது. சுற்றும் பொழுது மாணவர்களை நாம் கவனிக்க ஆரம்பிக்கின்றோம். நம்மை ஆசிரியர் கவனிக்கிறார் என்ற எண்ணமும் மாணவர்களுக்கு ஏற்படும். அந்த எண்ணம் ஏற்பட்டு விட்டாலே அவர்கள்  தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம்.  இங்கிருந்து பார்க்கும் பொழுது மாணவர்கள் தயாராக இருப்பது போல் தோன்றும் அல்லது புரிந்ததுப் போல் தோன்றும், ஆனால் அருகில் சென்று பார்க்கும் பொழுது தான் பல விடயங்கள் நமக்குப் புரியும். நாம் நினைத்துப் பார்க்க முடியாத வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். நாம் அவர்களை நெருங்கும் பொழுது நம்மிடம் இருந்து அவர்கள் பதுங்குவதைக் காண முடியும்.

                             பார்க்கும் பொழுது எழுதுவது போல் இருக்கும், ஆனால் அருகில் சென்று பார்க்கும் பொழுது பென்சில் கூட இருக்காது. புத்தகம் அவர்களிடம் இருக்காது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், பாடம் முடியும் வரை புத்தகத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மேசையின் அடியில் பார்த்தோமானால், குப்பைகளை அடைத்து வைத்திருப்பார்கள். பென்சிலைத் திருகித் திருகி மேசையின் அடியிலும், புத்தகப் பையிலும், பென்சில் பைகளிலும் போட்டு வைத்திருப்பார்கள். திகதி மற்றும் கிழமையைக் கூட சரியாக எழுதி இருக்க மாட்டார்கள். பென்சில் இல்லாமல் அரை மணி நேரம் கூட உட்கார்ந்து இருப்பார்கள். எத்தனை மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் வந்தார்கள் என்பது அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்.

                             இத்தனையும் கவனிக்க வேண்டுமாயின் சுற்றி வரும் பண்பாடு மலர வேண்டும். கோயிலில் இருக்கும் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி வந்தால் நாம் நினைக்கும் எண்ணம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுபோல், மாணவர்களை நாம் சுற்றி வரும் பொழுது எத்தனை மாணவர்களை விழிக்க வைக்கிறோம். அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆன்மீகத்தில் முருகன் ஞானப்பழத்திற்காக உலகைச் சுற்றி வந்ததும், விநாயகப் பெருமான் சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்ததையும் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அப்படிச் சுற்றி வந்ததால் தான் ஞானப்பழத்தின் இரகசியத்தை நாம் அறிய முடிகிறது. அந்த நிகழ்வை கொஞ்சம் உருமாற்றிப் பாருங்கள். நிறைய உண்மைகள் புரிய வரும்.

                             வண்டு ஒன்று பூக்களைச் சுற்றி வராவிடில் எப்படி தேனினை அது சேர்க்க முடியும்? ஒரு சாதாரண வண்டு எவ்வளவு பெரிய உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள். இயற்கையிடம் கற்றக் கொள்ள நமக்கு நிறைய இருக்கிறது. அனுபவம் நிறைந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் போதிக்கும் திறனை வெளியில் இருந்தே கணித்து விடுவார்கள். அதற்கு முக்கியமான காரணம் அந்த ஆசிரியர் சுற்றிக் கொண்டே இருப்பது தான். சுற்றுவது என்பது தேடுவது என்பது அர்த்தம். தேடினால் தான் கிடைக்கும் என்பது மனோவியலில் மிகப் பெரிய உண்மை. ஓடிக் கொண்டே இருப்பது தான் நதி,உலவிக் கொண்டே இருப்பது தான் காற்று, செயல் பட்டுக் கொண்டே இருப்பவன் தான் இளைஞன் என்று வைரமுத்து அழகாக எடுத்துரைப்பார். அந்த மாதிரியான இளைஞர்கள் தான் நம் தமிழ்ப்பள்ளிக்குத் தேவை. 
                           சுற்றி வரும் பண்பாட்டினை மலரச் செய்தால் நம்மை விட்டு விலகிப் போகும் மாணவர்களை நாம் கண்டெடுக்க முடியும். நம்மை நாடி வரும் மாணவர்களை விட நம்மை விட்டு விலகிப் போகும் மாணவர்கள் நமக்கு முக்கியம். எதிர்காலத்தில் தடுமாறிப்போகும் இளைஞர்கள் பள்ளியில் நம்மை விட்டு விலகிப் போன மாணவர்களே என்பதை மறந்து விடக்கூடாது. தலைமையாசிரியர் சுற்றி வந்தால் ஆசிரியர்கள் தயாராகிறார்கள். ஆசிரியர்கள் சுற்றி வந்தால் மாணவர்கள் தயாராகிறார்கள். ஆக, சுற்றி வரத் தயாராக இருங்கள்.