ஒரு சிறந்த மாணவன் பிறக்கவில்லை; உருவாக்கப்படுகிறன். இக்கூற்று மாணவனுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்கவேண்டுமாயின் நிறைய பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரிவரச் செய்து விட்டாலே சிறந்த பலனை எதிர்ப்பார்க்க முடியும். தமிழ்ப்பள்ளிகள் பல சவால்களை எதிர் நோக்கியிருக்கும் இக்காலகட்டத்தில், அதற்கு ஆணி வேராக இருக்கும் ஆசிரியப் பெரு மக்களின் அர்ப்பணிப்பைச் சீர்தூக்கிப் பார்க்கும் தருணம் இது. வெறும் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசாமல், அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தறிந்து செயல்படுவது நல்லது.
பள்ளியில் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துவிட்டது. உண்மைதான். அதற்காக நான் இந்த வேலையைச் செய்ய முடியாது என்று எந்த ஆசிரியரும் கூறிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆசிரியர்களின் பணிச்சுமையை எழுதுவதற்கு இக்கட்டுரை போதாது. ஆனால், அப்பணிச்சுமையை எல்லாம் இலகுவாக்குவது எப்படி என்று அளவிட்டுக் கூற முடியும். பள்ளியில் கற்றல் கற்பித்தலைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் ஆசிரியர்கள் இணைந்து செயல்பட முடியும். அதற்குத் தேவை மூன்று அல்லது நான்கு ஆசிரியர்களின் இணைப்பு. இவ்விணைப்பிற்கு தேவையானது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு, மற்றும் நட்பு பாராட்டுதல். இணைந்து செய்யும் எந்த வேலையும் சோடை போனது இல்லை. தனியாக செய்யும் சில வேலைகளில் தவறுகள் எற்படலாம். ஆனால், இணைந்து செய்யும் வேலையில் தவறுகள் எற்படுவது குறைவு.
தமிழ்ப்பள்ளிகளில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் முதலில் ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும். இம்மனமாற்றத்தின் எதிரொலி தான் இணைந்து செயல்படும் வியூகம். இவ்வாறு இணைந்து செயல்படுவன் வழி உறவு வலுப்பெறுகிறது, மன அழுத்தம் குறைகிறது, பணிச்சுமை இலகுவாகிறது, மற்றும் ஆசிரியர்கள் முழுமையாக கற்றல் கற்பித்தலில் ஈடுபட முடிகிறது.
ஆசிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. ஆசிரியர்கள் என்பர்கள் தனி ஆள் கிடையாது. மாறாக, அவர்களுக்குப் பின்னால் தத்தம் குடும்பம் மட்டும் அல்ல, இந்த தமிழ்ச்சமுதாயமே இருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது. ஒரு கை ஓசை சத்தம் எழாது. பல கைகள் சேர்ந்தால் அதன் பலமே வேறு. தனி மனித பிரார்த்தனைக்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. பிராத்தனை சமம் என்றாலும் அதன் சக்தியை ஒப்பிட முடியாது. அதைப் போலத்தான் ஒருவர் செய்யும் வேலையும் அதையே பலர் சேர்ந்து செய்யும் வேலையும் வெவ்வேறாகப் பலன் தரும்.
ஆதலால், ஆசிரியர்கள் எழுச்சிப் பெற வேண்டுமாயின் இணைந்து செயல்படும் பண்பினைக் கடைப்பிடிக்க வேண்டும். பார்க்கத் தெரிந்தால் பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக்கழகம் என்பார்கள். அதைபோல இணைந்து செயல்படத் தெரிந்தால் வேலைச் சுமை குறைந்து மனச்சுமையும் குறைந்து போகும். ரெக்காட் புக் மற்றும்
மாணவர்களின் புத்தகத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது. இதைத்
தவிர பள்ளியில் எல்லா வேலைகளையும் நாம் பகிர்ந்துச் செய்ய முடியும். குழுவாக
இருந்து செயல்படுவதும் குழுவில் இருந்து கொண்டு செயல்படுவதும் நம் ஆக்கச் சக்தியை
அதிகரிக்கும். பள்ளியில் வேலை பழுவை மட்டும் பார்க்காமல் அதை எப்படி சுமக்கலாம்
என்று சிந்தித்தால் மனம் இலகுவாகிவிடும். வேலையும் சுலபமாகிவிடும்.
இராமாயணத்தில் இராமரும்
இலட்சுமணனும் சீதையைத் தேடி அலைந்தும் பயனில்லை. ஆனால், சுக்ரீவன் தன் வானரக்கூட்டத்தை அனுப்பி சீதையைத் தேடிச் செல்லும் பொழுது சீதை
இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. இராமரின் நம்பிக்கையும்
புதுப்பிக்கப்படுகிறது. புதிய அத்தியாயமும் தொடங்குகிறது. ஆக,
பல கைகள் சேரும் பொழுது புதிய வழிகள் காண்பிக்கப்படுகிறது. ஆசிரியர் தொழிலிலும்
அப்படித்தான்.
எல்லா வேலைகளையும் தன்னிச்சையாகச் செய்யாமல் முன்னெச்சரிக்கையாகச்
செய்து பாருங்கள். உங்கள் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. திருவள்ளுவர் மிக
அழகாக ‘வினையால் வினையாக்கிக் கோடல்
நனைகவுள் யானையால் யானையாத் தற்று’ என்று
எடுத்துரைக்கிறார். ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து
முடிப்பது ஒரு யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போன்றது என்பது அதன் அர்த்தம்.
இந்தக் குறளில் இருக்கும்
உண்மைதனை ஆராய்தறிந்தால் நிச்சயம் ஆசிரியர்களின் வேலைகளை இலகுவாக்க முடியும்.
சிந்தித்துப் பார்த்து சிறகடியுங்கள் ஆசிரியர்களே! வாழ்க்கையில் இரண்டு இடத்தில்
நீங்கள் சமாளித்து விட்டாலே நீங்கள் வாழ்ந்து விட்டீர்கள் என்று ஆர்த்தம். ஒன்று
குடும்பம் மற்றொன்று வேலை செய்யும் இடம். இரண்டுமே பிரச்சனையாகும் பொழுது தான்
வாழ்க்கைத் தடம் மாறுகிறது. நாம் செய்யும் வேலையினால் நமக்கு மன அழுத்தம் வருகிறது
என்றால் பிரச்சனை வேலையில் அல்ல, மாறாக நம் அணுகு
முறையில் இருக்கிறது.
வேலை செய்யும் அணுகு முறையை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள்.
அடைவு நிலை வேறாக இருக்கும். கொடுக்கும் வேலைகளைச் சுமந்து செல்லாதீர்கள்.அது
நாளடைவில் கனக்கும். வேலைகளோடு வாழ்ந்துப் பாருங்கள். நாளடைவில் அது மணக்கும்.
கனக்கும் மனத்தை விட மணக்கும் மனமே உங்களை வாழ வைக்கும். உங்களின் பணிச்சுமை
இலகுவாகிவிட இதை விட வேறென்ன வேணும்?