விடுமுறைக்
காலங்களில் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளைப் பற்றி விமர்சனம் செய்வது என்
நோக்கம் அல்ல. அதனை மெருகூட்ட வேண்டும். மேலும் பயனுள்ளதாக்க வேண்டும். இதுவே என்
நோக்கம். விடுமுறை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுங்கோல் முறையாக
மாறிவிடக் கூடாது. அர்ப்பணிப்பும் உயர்ந்த இலட்சியமும் கொண்ட அனைத்து ஆசிரியப்
பெருமக்களுக்கும் இக்கட்டுரையைச் சமர்ப்பணம் செய்கிறேன். 2015-ஆம் ஆண்டின்
யு.பி.எஸ்.ஆர் முடிவுகள் பலரைத் திருப்திப்படுத்தவில்லை. ஆய்வுகள் வேண்டும் என்று
ஆதங்கம் வெளி வந்து விட்டது. எதுவாயினும், சிந்தனை மாற்றம் ஒன்றே சிறந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்க
முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் இக்கட்டுரையின் ஆய்விற்கு
எடுத்தக் கருப்பொருள் இந்த விடுமுறைக் கால வகுப்புகள்.
அமெரிக்காவின் முன்னால்
அதிபர் ஆப்பிரகாம் லிங்கனிடம் ஒரு முறை ஆய்வாளர்கள் ஒரு கோடரியைக் கொடுத்து 3 மணி
நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிபர்
கொடுத்த பதிலே இன்றைய கட்டுரையின் தொடக்கமாகும். ‘2 மணி நேரம் கோடரியைத் தீட்டுவேன்.1 மணி நேரத்தில் மரத்தை வெட்டி விடுவேன்.’ என்று கூறினார். இங்கு அவர் தீட்டியது வெறும்
கோடரியை மட்டும் அல்ல, நம் சிந்தனையையும் தான்.
பள்ளியின் யு.பி.எஸ்.ஆர் அடைவு நிலைக்காக அரும்பாடுபடும் அனைத்து
தலைமையாசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள் மற்றும்
எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர
இம்மாதிரியான வகுப்புகள் முக்கியம் தான்.
ஆனால், ஆய்வுகளைப் பார்க்கும் பொழுது தேர்வின் முடிவுகள்
திருப்திகரமாக இல்லை. இதில் யாரையும் குறை சொல்ல நான் வரவில்லை.நிறை சொல்ல,அதுவும் நிறையவேச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
தேசியக் கல்வித்தத்துவத்தில் ஒரு முழுமைப் பெற்ற, தனித் திறமை வாய்ந்த மாணவனை உருவாக்குவதே உன்னதமான நோக்கமாகும். வெறும்
தேர்வை மட்டுமே வைத்து அளவிடவில்லை. மலேசியக் கல்வி உருமாற்றுத் திட்டத்தில் கூட
11-ஆவது சரத்தில் செலவுச் செய்யும் ஒவ்வொரு ரிங்கிட்டிற்கும் மாணவர்களின் ஆற்றலை
அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘நமது முயற்சிகளின் வலிமையைத் தான்
நாம் விரும்பும் முடிவுகளின் பலனாக நாம் கருத வேண்டும்’ என்று மனோதத்துவ மேதை ஜேம்ஸ் ஆலன்
அவர்கள் உரைத்ததைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். விடுமுறைக் கால வகுப்பின்
வலிமையே இப்பொழுது ஆய்விற்கு உட்பட்டது. அப்படி ஆய்ந்ததில் சில உயர்ந்த கருத்துகளைப்
பார்ப்போம். மாணவர்களின் தனித் திறமையை வளர்க்க கிடைத்த வாய்ப்பே இந்த விடுமுறைக்
காலம். விளையாட்டுத் துறையில் ஆர்வத்தையும் திறனையும் வளர்க்க இதுவே சரியானத்
தருனம். வெளியில் இருந்து சிறந்த பயிற்சியாளர்களை வரவழைத்து தொடர் பயிற்சிகளை
வழங்கலாம்.
யு.பி.எஸ்.ஆர்
வகுப்புகளோடு சேர்த்து அணுகுமுறை,உத்திகள்,புதிய வழி முறைகள்,உயர் நிலைக் கேள்விகளை எதிர் நோக்கும் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய
பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினால் நிச்சயம் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்கும்.
மாணவர்களின் மனோநிலை, திடம்,
தைரியம், ஒழுக்கம் அதிகரிப்பதற்கு தனிப்
பயிற்சியினை ஏற்படுத்தி அவர்கள் மேலும் ஊக்க மூட்டலாம். பள்ளியிலேயே தங்கி
மாணவர்களுக்கு மனமகிழ் ஊட்டும் நடவடிக்கைகளை ஏற்படுத்தும் பொழுது மாணவர்கள்
மகிழ்வதோடல்லாமல், புதிய நம்பிக்கையும் ஊக்கமும்
பிறக்கும். தொடர்ந்து, சமய முகாம்களை சிறப்பாக ஏற்பாடுச்
செய்யும் பொழுது மாணவர்களிடையே தெளிவானச் சிந்தனையை உருவாக்க முடியும்.
இன்னும்
சொல்லப்போனால், தன்முனைப்புப் பயிற்சிகளும்
தலைமைத்துவப் பயிற்சிகளும் மாணவர்களின் திறமையைச் செதுக்கும் களமாக இருக்கும்.
குறிப்பாக இப்பயிற்சியின் வழி நிச்சயம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட
வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த விழிப்புணர்வு தான் அவர்களை அதிகமாக இயங்கச்
செய்கிறது. ஜனவரியில் வகுப்பகள் ஆரம்பித்தவுடன் ஆசிரியர்கள் அதிகமாக மாணவர்களிடையே
போராடத் தேவையில்லை. காரணம் அவர்களைத் தான் போர்க்கலத்திற்கான எல்லா ஆயித்தப்பணிகளை
செய்தாகி விட்டதே. இப்படிப் பிரச்சனைகள் குறையும் பொழுது ஆசிரியர்களின் பணிகள்
இலகுவாகின்றன. மாணவர்களின் மகிழ்ச்சியானத் தருனம் நிச்சயம் விடுமுறைதான். அதனை
மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
உலகில்
சாதித்த அனைவரும் தன் இளமைக்காலத்தை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளியின்
வகுப்பறையில் அடைபட்டவர்கள் கிடையாது. மேலை நாட்டு மாணவர்களுக்கு விடுமுறை என்பது
புதிய உலகம் போன்றது. பள்ளிக்கூடத்திலிருந்து தற்காலிக விடுதலை அல்ல. விடுமுறைக்
காலத்தில் தான் பெற்றோர்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது. தன் பிள்ளைகளுக்கு எவ்வளவுப்
பொது அறிவைக் கொடுக்க முடியுமோ, அவ்வளவையும்
கொடுத்துவிட வேண்டும். குறிப்பாக அறிவியல் தொழிற்நுட்பத் தொடர்பான ஆங்கலப்
படங்களுக்குக் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். நிச்சயம் இது படமல்ல,பாடம். அவர்களின் கற்பனைத் திறன்களுக்கு பெரும்
தீனியாக இருக்கும். மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர இந்த விடுமுறைக் காலமே தவிர, அவர்களை அடக்கி வைப்பதும், அடைத்து வைப்பதும் அல்ல.