ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு
வாழ்ந்தவர் புத்தபிரான் அவர்கள். அவர் தன் வாழ்நாளில் உலகெங்கும் சென்று மக்களைச்
சந்தித்து வழங்கிய சத்திய வாக்கின் சாரம் தான் ‘தன்மபதம்’ என்ற தொகுப்பு. அந்த தொகுப்பின்
முதல் சூத்திரமே ‘மனிதன் எண்ணங்களால்
உருவாக்கப்படுகிறான்’ என்று தொடங்குகிறது. இதையே
இயேசுபிரானும் தன் வாசகத்தில், ‘As man thinketh,so is he’ என்கிறார். எண்ணங்களே உலகை ஆள்கின்றன. உலகை ஆளும் பொழுது, நம்மை ஆள எம்மாத்திரம்.
‘எண்ணம் போல் வாழ்வு’ என்ற சொற்றொடரை
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா? மஹாபாரத த்தில் கர்ணன் பாத்திரம் பற்றி யாரும் மறக்க
முடியாதது. அவரின் இறப்பு மிகவும் பரிதாபத்திற்குறியது. நடிகர் சிவாஜி கணேசன்
பாத்திரமேற்று நடித்த அந்தக் கர்ணனை மறக்க முடியுமா? ஆனால், கர்ணனின் இறப்பு அவரின்
எண்ணத்திற்கு ஏற்ப நடந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? ஒரு துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கையில்
கர்ணன் இடமறித்து கூறிய அந்த வார்த்தைகளே அவனின் மரணத்திற்குக் காரணமாய் அமைந்தன.
கர்ணன், ‘ துரியோதனா, நீர் சொல்லும் திட்டங்களுக்கு எல்லாம் பாண்டவர்கள்
அடிபணிய மாட்டார்கள். கிருஷ்ணன் தன் படைகளுடன் வருவதற்குள் நாம் பாண்டவர்களைப்
போரிட்டு அழித்து விடலாம்.’ என்றார்.
அதனால் தான் போர்க்களத்தில்
கர்ணனின் தேரோட்டி ஓடிவிட்ட நிலையில் நிராயுதபாணியாக நின்ற நேரத்தில் கிருஷ்ணன்
அர்ஜுனனைப் பார்த்து அம்பை விடு என்கிறார். கர்ணனின் எண்ணம் போல் அவன் வாழ்வும்
முடிந்தது. இது கர்ணனுக்கு மட்டும் அல்ல;
நமக்கும் தான். நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் காரண காரியம்
உண்டு. எதுமே சும்மா நடக்க வில்லை. வேதங்களின் மொத்த சாரமே, ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்பது தான். அந்த நினைப்பானது ஒவ்வொரு மனிதருக்கும்
சராசரி நாளுக்கு 60 000 முதல் 80,000 வரை
உருவாகின்றன என்று அறிஞர்கள் வகுத்துள்ளனர். இந்த எண்ணங்களை உருவாக்க மூளையில் 100
கோடி நியுரோன்கள்(மூளை உயிர் அணுக்கள்) இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த
நியுரோன்களே எண்ணங்களை உருவாக்கி நம்மையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனை நம் பாட்டனார்
திருவள்ளுவர் அவர்கள்,
‘பெருமைக்கும் ஏனைச்
சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்பார். நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் மற்றவர் காரணமல்ல; மாறாக நாமே தான் காரணம் என்கிறார். இங்கே நாமே தான்
என்பதற்கு அடித்தளமாய் இருப்பது நம்முடைய எண்ணங்களே. அதனால் தான் ‘உங்களுடைய எண்ணங்களை மாற்றுங்கள், உங்கள் வாழ்க்கை மாறிவிடும்’ என்று மேலை நாட்டு எழுத்தாளர் நார்மன் விண்சண்ட் பேல் கூறியிருக்கிறார்.
எண்ணங்களுக்கு காந்த சக்தி இருக்கிறது. எண்ணங்கள் உருவாகின்ற இடம் தான் மனம் எனும்
மாபெரும் சக்தி. மனம் ஒரு வேலைக்காரன்,
ஆனால் மோசமான எஜமானன் என்பார்கள். மனதிற்கு நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் என்பது
தெரியாது. கட்டளையை நிறைவேற்றும் ஒரு வேலைக்காரன் அவ்வளவுதான்.
‘நாம் காணும் கற்பனைதான், நமது எண்ணம் தான்
நமது சூழ்நிலையாக மாறுகிறது’ என்று மனோதத்துவ
மேதை ஜேம்ஸ் ஆலன் உரைக்கின்றார். ‘The Last Leaf’ என்ற
கதையைக் கொள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் தன் அம்மாவுடன் வசித்து வந்தான். தடீரென்று, அச்சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் கண்டுவிட்டது.
அந்த அம்மாவும் நாட்டு மருந்து எல்லாம் கொடுத்து விட்டார். ஆனால், காய்ச்சல் நின்றபாடில்லை. அச்சிறுவனும்
படுத்தப்படுக்கையாகிவிட்டான். அச்சிறுவன் வீட்டின் ஓரமாக கட்டிலில்படுக்க
வைக்கப்பட்டிருந்தான். அவன் வலது பக்கத்தில் வீட்டின் ஓரமாக ஒரு செடி நட்டு
வைக்கப்பட்டிருந்தது. அச்செடியில் சில இலைகளே இருந்தன.
அந்தப் பையன் ஒவ்வொரு நாளும்
அச்செடியையே பார்த்து வந்தான். அவனுக்கும் காய்ச்சல் நின்றபாடில்லை. மழையின்
காரணமாக அச்செடிக்கு அடியில் தண்ணீர் தேங்கி ஒவ்வொரு நாளும் இலைகள் உதிர
ஆரம்பித்தன. மருத்துவர் இனி பையனைக் காப்பாற்றுவது சிரமம் என்று சொல்லி விட்டார்.
மனம் உடைந்த அந்த அம்மா செய்வது அறியாது தவித்தார். இலை உதிர உதிர அந்தப் பையனும்
கவலைக்கிடமானான். செடியில் உள்ள கடைசி இலையும் உதிரக் காத்திருந்தது. அந்தப்
பையனும் அந்த இலை உதிர்ந்தவுடன் தானும் இறந்து விடுவேன் என்று முழுமையாக
நம்பினான். இதை கவனித்து விட்ட அந்த பையனின் மாமா அன்று இரவே அந்த கடைசி இலையில்
பச்சை வண்ணம் பூசி செடியில் வைத்து கட்டிவிட்டார்.
அன்று இரவு நிலைமை மோசமானதால்
பையனின் சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து விட்டனர். நேரம் ஆக ஆக அந்தப் பையனின்
கவனம் அந்தச் செடியிலேயே இருந்தது. அந்த அதிகாலை நேரத்தில் பச்சை வண்ணம் அவன்
கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அவனுக்கு மனதில் சிறு நம்பிக்கைப் பிறந்தது.
விடிந்தது விடியாததுமாக அந்தப் பையன் அந்தப் பையன் பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த
அந்த இலையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய காய்ச்சலும் குறைய ஆரம்பித்தது.
செடி பிழைத்தது என்று அந்தச் சிறுவன் முழுமையாக நம்பி விட்டான். உண்மையில் அந்தச்
செடி இறந்து விட்டிருந்தது. அவன் எதை நம்பினானோ அது அங்கு நடந்திருக்கிறது. இதைத்
தான் ‘நம் வாழ்வு நம் எண்ணத்தைப்
பொறுத்திருக்கிறது’
என்பார் சிந்தனையாளர் நெப்போலியன் ஹில். நல்ல எண்ணங்களை விதைத்து, வாழ்க்கையை வண்ணமயமாக்குங்கள். எண்ணங்களைக் கவனமாக
கையாளுங்கள்.