எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 7 ஜூலை, 2016

கருவறை முதல் வகுப்பறை வரை...


          ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே வெற்றியாளனாகத் தான் பிறக்கிறது. கோடிக்கணக்கானவர்களை வென்று விட்டுதான் பிறக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுதே 9 வகையான அறிவுத்திறனைக் கொண்டு பிறக்கிறது என்று மேலை நாட்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

         எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே; அவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒரு குழந்தையின் பிறப்பையும் அன்னையின் வளர்ப்பையும் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றார்.

          அதேப் போல், வகுப்பறை என்பது ஒவ்வொரு மாணவரின் முதல் அனுபவம், முதல் மேடை, முதல் உலகம், போன்று அடுக்கிக் கொண்டே போகலாம். தன்னுடைய வாழ்க்கையின் தொடக்கம் தான் மாணவர்கள் கற்கும் வகுப்பறை. பள்ளியின் வகுப்பறைக்கும் தாயின் கருவறைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. மனோதத்துவத்தில் உலகத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று தெரிவிக்குறது.

        அதனால் தான், தாயின் கருவறைக்கும் பள்ளியின் வகுப்பறைக்கும் தொடர்பு உண்டு என்று விளக்கக் கடமைப்பட்டுள்ளேன். வயிற்றில் கரு உருவாவதற்கே தவம் செய்திருக்க வேண்டும். உருவான அக்கருவை ஒரு தாய் 10 மாதம் சுமந்து இந்த உலகிற்கு கொடுப்பதற்கு முன் அவள் எவ்வளவு சிரமங்கள்,பிரச்சனைகள்,தியாகங்கள்,கடமைகள் போன்றவற்றை எதிர் நோக்க வேண்டியிருக்கு. எல்லாவற்றையும் கடக்கும் போது தான் பிள்ளைச் செல்வம் என்ற அந்த பெருமையை அடைய முடிகின்றது.

         வகுப்பறையும் அப்படித்தான். ஒரு மாணவனின் வாழ்க்கையே ஆரம்பிக்கும் இடம். அவன் கடக்கப் போகும் 14 ஆண்டுகால வரலாறு தொடங்கும் இடம் தமிழ்ப்பள்ளியில். ஒரு தாய் தன்  குழத்தையைப் ஆரோக்கியமாக பெற்றெடுக்க என்னவெல்லாம் செய்கின்றாள். வேண்டாத தெய்வமில்லை. எவ்வளவு கவனம். எவ்வளவு ஆர்வம். பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம். நன்றாகப் பெற்றேடுக்க வேண்டும் என்ற தவம்.கருவில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தை நிச்சயமாக ஊனமாகத் தான் பிறக்கும். அதனால் தான் அவ்வளவு கவனம் பயம் பக்தி எல்லாம்.

          பத்து மாத இடை வெளியில் ஏதும் ஏற்பட்டால் குழந்தை ஊனமாகிவிடும் என்பது உண்மையென்றால், வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் முறையாக நடக்க வில்லையென்றால் அக்குழந்தையின் எதிர்கால வாழ்க்கையே பாதித்து விடும் என்பது உண்மையே. ஆறு ஆண்டு ஆரம்பக் கல்வியில் கடைசியில் ஒரு மாணவனுக்கு அடிப்படை வாசிப்பு, மும்மொழி அறிவு மற்றும் கணித நுணுக்கம் தெரியா விட்டால்  அவன் வாழ்க்கையே ஊனமாகிவிடுகிறது.

         ஆறு ஆண்டுகள் போட்ட விதையை இடைநிலைப்பள்ளிக்குச் சென்று மாற்ற முடியுமா? ‘மாற வேண்டியது விதை அல்ல; மாற்ற வேண்டியது மண்என்பார்கள். எனவே, அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘கற்றல் என்பது பிரார்த்தனை;கற்பித்தல் என்பது வழிபாடுஎன்பது உண்மையென்றால் செய்வதைச் சிறப்பாகச் செய்து விடுங்கள்.

           தமிழ்ப்பள்ளிகளில் பெரும் சிந்தனை மாற்று அலை நிகழாதவரை நாம் சொல்வது துளிர்க்கப் போவது இல்லை. ‘கதவைத் திற காற்று வரும், மனதைத் திற மாற்றம்’. கருவறையில் வளரும் குழந்தையும் வகுப்பறையில் வளரும் குழந்தையும் ஒன்று என்று உணர்ந்து விட்டால் மாற்றம் நிச்சயம் உண்டு.


           ஆக, வகுப்பறையைக் கருவறையாக எண்ணி செயல்பட வேண்டும். வகுப்பில் மூன்று நிலையான மாணவர்கள் இருந்தாலும், ஆற்றல் அறிவு சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்தல் வேண்டும். ஆயிரத்து தொண்ணூற்று மூன்று பொருட்களை உருவாக்கிய அறிவியல் அறிஞர் தோமஸ் ஆல்வா எடிசனை மந்தம் என்று அவருடைய ஆசிரியர் ஒதுக்கி வைத்ததன் விளைவு அவருடைய அம்மா  அவருக்கு ஓர் ஆசிரியராக இருந்து வழிகாட்டியதை நாம் மறந்துவிடலாகாது. அதனால் தான், ‘ஆசிரியர்கள் முதல் பெற்றோர்கள்,பெற்றோர்கள் இரண்டாவது ஆசிரியர்கள்என்பார்கள். சிந்தனைச் செய் மனமே