எவரஸ்டு
மலையை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மலையேறிகள் புறப்படுகின்றனர். உயிரைப்
பணயம் வைத்தப் பயணம் அது. ஆகக் கடைசியாக வந்தத் தகவலின் படி 1922 முதல் சென்றாண்டு
வரை 287 உயிர்களை எவரஸ்டு பலி வாங்கியிருக்கிறது. அதில் 200 –க்கும் மேற்பட்ட
உடல்கள் இன்னும் அங்கேயே உரைந்து கிடக்கிறது. சாதிக்கப் புறப்பட்ட அந்த உயிர்கள்
பனிக்கட்டியில் சாய்ந்து கிடக்கிறது. உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும்
ஆயிரக்கணக்கான மலையேறிகள் புறப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
புதியப்
பள்ளித்தவணை தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. புறப்பட்ட ஆசிரியர்களுக்கு என்னுடையப்
பாராட்டுகள். உங்கள் பயணம் எவரஸ்டைத் தொடுவதற்கு அல்ல, கொடுக்கப்பட்டப் பிள்ளைகளை எவரஸ்டை விட உயர்ந்த நிலையைக் காட்டுவதற்கு.
நாட்டில் 10 000 தமிழாசிரியர்கள் நாம். எட்டுத்திசைக்கும் நம் பயணம் அர்த்தமுள்ளதாக
இருக்க வேண்டும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
பாதைகள் மாறலாம், ஆனால் பயணம் ஒன்றாகத்தான் இருக்க
வேண்டும். ‘சீறிய இலட்சியத்திற்காக செய்யும்
தியாகமானது மனிதக் குலத்தின் மாண்பாகக் கருதப்படும்’ என்று மேலை நாட்டுப் பேராசிரியர் எட்வின் ஆர்னால்டு அவர்கள் உரைத்திருப்பதை
ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்ப்பளியின்
எழுச்சிதான் நம் இலட்சியம். அதற்காக தியாகம் செய்யத் துணிந்த அனைத்து தமிழ்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் தமிழன்னை ஆசீர்வாதம் வானமெங்கும் நிச்சயம் பொழியும்.
காணாமல் போன சீதையைத் தேடி இராமபிரான் தன் சகோதரன் இலட்சுமணனுடன் புறப்பட்ட அந்த
வேகமும் விவேகமும் நமக்கும் வேண்டும். காரணம் அடுத்தத் தலைமுறை தொலைந்துப் போகாமல்
அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்க
வேண்டும். வீறு கொண்டு எழுந்த ஆசிரியர்களே நாம் வகுப்பில் எப்படிக் கற்றுக் கொடுத்தோம்
என்பது முக்கியமல்ல, மாணவர்கள் கற்றுக் கொண்டார்களா
என்பது தான் முக்கியம். நாம் கற்றுக் கொடுத்து மாணவர்களை உருவாக்குவதை விட, நம்மோடு
சேர்ந்து கற்கும் மாணவர்களை உருவாக்கினால் கற்பித்தல் இலகுவாகிவிடும்.
‘எழுச்சியும்
முன்னேற்றமும் ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை’ என்று இரிக் வேதம் ஓதுகிறது. கொஞ்சம் காது
கொடுத்துக் கேளுங்கள். எழுச்சியும் முன்னேற்றமும் நம்முடைய உரிமை. அந்த உரிமையை
மாணவர்களிடம் நாம் மேலோங்கச் செய்தல் வேண்டும். உலகத்தில் மாற்றுச் சிந்தனையோடு புறப்பட்ட
எந்தச் சமூகமும் தோல்வி அடைந்ததாகச் சரித்திரம் இல்லை. மாற்றுச் சிந்தனையோடு
எழுச்சியும் முன்னேற்றமும் ஒருங்கே அமைந்து விட்டால் நிச்சயமாகப் புதிய உலகம்
படைப்பது உறுதி. தெளிந்த நீரோடையாய் இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் உயர்ந்தக்
குறிக்கோலை அடைய முடியும். வகுப்பில் நீங்கள் படித்துக் கொடுத்தால் அது
செய்தியல்ல. மாறாக, வகுப்பே உங்களுக்குப் படித்துக்
கொடுத்தால் அது தான் செய்தி. இந்தச் செய்தி ஏற்கனவே 21-ஆம் நூற்றாண்டின்
வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறையில் புகுத்தாகி விட்டது. இனி, எடுத்தாள வேண்டியது தான்.
ஆசிரியப்
பெரு மக்கள் ஆள வேண்டியவர்கள். அந்த எண்ணம் ஒவ்வொரு ஆசிரியர்களிடமும் இருத்தல்
வேண்டும். ‘வினைத்திட்பம் என்பது ஒருவன்
மனத்திட்பம், மற்றைய எல்லாம் பிற’ என்று தெய்வப் புலவர் வினவுகின்றார். மனம்
நினைத்தால் மாறிடலாம். அதை தினம் நினைத்தால் ஆகிடலாம். மனம் உண்டானால் நிச்சயம்
மார்க்கம் உண்டு. ‘உயர்வாய் நினைப்பன உன்னை
உயர்த்தும், மயர்வாம் நினைவுகள் அறிவையும்
மயக்கும், துயர்வுரும் வினைக்குத் துணிவு
கொள்ளாதே, அயர்வின்றி இயங்கு ஆக்கம்
துணைவரும்’ என்று புலவர் பெருஞ்சித்தனார்
தக்க நேரத்தில் அறிவுருத்துகின்றார். ஆக்கத்தைத் துணையாகக் கொண்டு இந்தியக்
குமுகாயத்தில் தாக்கத்தை உருவாக்குங்கள்.
ஆக்கத்
துணையோடும் எழுச்சியோடும் புறப்பட்ட ஆசிரியர்களே, நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்;ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மாசு படாமல் கருமமே கண்ணா இருந்து விடுங்கள். நீங்கள் பின்னோக்கித் திரும்பினால்
வேகமாக வந்த அம்பு உங்கள் முதுகிலே குத்தி விடும். அம்பு விட்டது அர்ஜுனன்
என்றாலும் இதை தடுக்க இயலாது. எதிர் மறையை நீக்கி விட்டு நேர்மறையை நோக்கி
முன்னேறுங்கள். ஒரு சாதாரண ஆசிரியனை அசாதரணமான ஆசிரியராக மாற்றுவது சூழ்நிலை தான்.
அந்தச் சூழ்நிலைக்காக காத்திருக்காதீர்கள்.முடிந்தால் நீங்களே உருவாக்கிக்
கொள்ளுங்கள். மூன்று வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சாதாரண ஆசிரியர், நடுநிலை ஆசிரியர் மற்றும் அதீத ஆசிரியர். இந்த அதீத
ஆசிரியரை ஆங்கிலத்தில் ‘Super Teacher’ என்பார்கள்.
இந்த மூன்று நிலையில் நீங்கள் எந்த நிலை?
சுற்றும்
வரைக்கும் தான் பூமி, சுடும் வரைக்கும் தான் சூரியன்.
அதுபோல், கற்றுக்கொள்ளும் அல்லது கற்றுக்
கொடுக்கும் வரைக்கும் தான் ஆசிரியன். நிறுத்தி விட்டால் எல்லாம் சூன்யமாகிவிடும்.
வானில் எழுகின்ற ராக்கிட் தன் இலக்கை அடையும் வரை திரும்பிப் பார்ப்பது கிடையாது.
பள்ளியை நோக்கிப் புறப்பட்ட ஆசிரியர்களே,
நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் முந்திச் செல்லுங்கள். பின், உங்களுக்குத் தந்திவரும். நீங்கள் தான் அதீத
ஆசிரியர் என்று. இது வெறும் புகழ்ச்சி அல்ல. புறப்பட்ட ஆசிரியர்களுக்கு இது
புண்ணிய பூமி. இதை உரக்கச் சொல்வேன். உலகத் தமிழாசிரியர்கள் அறியும்வரை சொல்வேன்.
பாரினில் தமிழ்ப்பள்ளியைத் தழைத்தோங்கச் செய்வோம். வாரீர்.