சாதிக்கப் பிறந்த
மாணவர்களே! பிறக்கும் போதே நீங்கள் சாதித்து விட்டு தான் பிறந்திருக்கிறீர்கள்
என்பதை அறிவீர்களா? அறிந்து கொள்ளுங்கள். நீங்கள்
எழுதப் போகும் தேர்வுகள் எல்லாம் உங்களிடம் தோற்றுப் போகும். ‘ஒரு குழந்தைப் பிறக்கும் போதே 9 வகையான
அறிவுத்திறனுடன் பிறக்கிறது’ என்று பேராசிரியர்
ஹாவர்ட் கார்டனர் உலகிற்கு முரசொலித்ததை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். யு.பி.எஸ்.ஆர்,
பிதி 3 அல்லது எஸ்.பி.எம் தேர்வாகட்டும்,
தேர்வுகள் எல்லாம் தேர்வுகள் அல்ல, நீங்கள் தளராமல்
இருந்தால்.
உங்கள் ஒவ்வொருவரிடமும் மனதிலே
தீப்பொறி பறக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை ‘burning desire’ என்று சொல்லார்கள். ‘நாம் அனைவரும் நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த
அக்னியைக் கொழுந்து விட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக
முனைவது நம் கடமை’
என்று ஐயா அப்முல் கலாம்
அவர்கள் எழுப்பியதை உள் வாங்கிக் கொள்ளுங்கள் மாணவ பிரம்மாக்களே! இயற்கையிலேயே
நீங்கள் ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறீர்கள் என்பதை நம்புகிறீர்களா? நீங்கள் அளவிட முடியாத ஆற்றல் படைத்தவர்கள்.
நம்புங்கள். உங்களின் ஆற்றாமையை ஆழத்தில் புதைத்து விடுங்கள்.காரணம் நீங்கள்
வாழப்பிறந்தவர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்...செயல்...செயல். ‘சொற்கள் நீர்க்குமிழிகள்; செயல்கள் தங்கத்திவலைகள்’ என்பது சீனப் பழமொழிகளில்
ஒன்று. பேச்சைக் குறைத்து விட்டு முயற்சியை அதிகப் படுத்துங்கள். இருக்கின்ற
நாட்களை எண்ணுவதை விட, கொடுக்கப்பட்ட நேரத்தைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரியுமா? வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்கள் எதையும்
செய்வதில்லை. மாறாக, சாதாரண செயல்களையே சற்று
வித்தியாசமாகச் செய்கிறார்கள். அவ்வளவுதான். நீங்களும் அப்படித்தான். நீங்கள்
படிக்கும் நேரத்தை அதிகரித்துப் பாருங்கள். நீங்கள் படிக்கும் இடத்தை மாற்றிப்
பாருங்கள். வித்தியாசம் வேறு மாதிரியாகத் தான் இருக்கும். காரணம் தேடுபவனுக்குத்
தான் கிடைக்கும். தட்டுபவனுக்குத் தான் கதவு திறக்கப்படுகிறது. நீங்கள் சரியாக
இருக்கிறீர்களா என்பதே கேள்வி. ‘மனதுக்கு அழகு
மங்கா உறுதி’ என்பது பாரதியாரின் வேத வாக்கு. பகவத்கீதையில், ‘இடைவிடாது செயல் புரிய வேண்டும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. இருக்கின்ற நாட்களில்
கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மன உறுதியுடன் செயல் புரியுங்கள் மாணவ
பிரம்மாக்களே!
சுவாமி விவேகானந்தா கர்ம
யோகத்தில், ‘இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாச்
சக்திகளையும் கவர்ந்து இழுக்கின்ற மையமாக நீங்கள் இருக்கிறீர்கள்’ என்கிறார். அதனால் தான் நீங்கள் சாதிக்கப்
பிறந்தவர்கள் என்று தொடர்ந்தாற் போல் கூறிக் கொண்டிருக்கிறேன். உபநிடதத்தில் ‘யத் பாவம் தத்பவதி’ என்ற அழகான வரி இருக்கின்றது. அதன் பொருள், ‘மனிதன் எதை நினைக்கிறானோ, அப்படியே ஆகிறான்’ என்பதாகும். ஒரு பொதும் உங்களையும், நீங்கள் எடுக்கப்போகும் புள்ளிகளையும் குறைத்து
மதிப்பிடாதீர்கள்! உழைப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள் அது உங்களை உயர்த்தும்.
இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்களுடைய
மனதிற்குள்ளேயே இருக்கிறது என்பதைப் பகிரங்கமாகக் கூற விரும்புகிறேன். ஆம், மாணவ பிரம்மாக்களே! இவை எல்லாம் வேத வாக்கியங்கள். உள்
வாங்கிக் கொள்ளுங்கள். ‘நீங்கள் எந்த வேலையைச்
செய்தாலும் அந்த வேலையைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காதீர்கள். கடவுளுக்குச்
செய்யும் வழிபாடாகவே,
மிக உயர்ந்த வழிபாடாக அந்த வேலையைச்
செய்யுங்கள். அந்த வேலையைச் செய்து முடிக்கும் வரை உங்கள் வாழ்க்கையையே அதில் செலவிடுங்கள்’ என்று மீண்டும் சுவாமி விவேகானந்தா உரைத்திருப்பதை நினைவுப்படுத்திக்
கொள்ளுங்கள். இதைத் தான் இராமலிங்க சுவாமிகள், ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்கிறார். இருக்கின்ற நாட்களில் நீங்களும்
பசித்திருங்கள். வருகின்ற நாட்களில் தனித்திருங்கள். கிடைக்கின்ற நேரங்களில் விழித்திருங்கள்.
கழுகைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், அதன் மறு உருவத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வயதான கழுகு யாரும் நெருங்க முடியாத மலை உச்சியை அடைந்து
தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாம். பிறகு, உட்கார்ந்த இடத்திலேயே தன்னுடைய அலகை கல்லில் மோதி இரத்தம் வர உடைக்கப் பார்க்குமாம்.
வயதான கழுகின் அலகு மொத்தமாகி வளைந்து விடுவதால் அதனால் உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டதால்
அந்த அலகை உடைக்க முயற்சிக்கிறது. உண்ணாமல் உறங்காமல் இரத்தம் கசிய உடைந்த அலகில் மீண்டும்
புதியதொரு இலகு முளைக்கும் வரை காத்திருக்கும் அந்த கழுகு. பிறகு, சிறிய முளைத்த அந்த அலகைக் கொண்டு தன்னுடைய முதிர்ந்த
இரகுகளைக் கொத்திக் கொத்தி எடுக்குமாம்.
மீண்டும் புதிய அலகுகள் முளைக்கும்
வரை காத்திருக்குமாம் அந்த கழுகு. புதிதாக முளைத்த அலகோடும் இரக்கைகளோடும் வானத்தைப்
பிளக்க பறக்கத் தயாராகிறது கழுகு என்ற அந்த இராஜாளி. ஆம், இப்பொழுது அதற்குப் பெயர் கழுகு அல்ல, இராஜாளி. இயற்கையையே மாற்றி அமைத்த தைரியம் எப்படி அந்த இராஜாளிக்கு வந்தது? ஒரு சாதாரண கழுக் இராஜாளியாக மாறியது உண்மையாயின், சாதிக்கப் பிறந்த மாணவர்களே! நீங்கள் சாதிக்கப் பிறந்ததும்
உண்மைதான். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று அப்பர் சுவாமிகள் மொழிந்ததை நீங்களும் மொழிந்துப்
பாருங்கள். ‘என் கடன் படித்துக் கொண்டு இருப்பதே’ என்று. நீங்களும் ஆளப் பிறந்தவர்கள் ஆகலாம்.
அன்பு மாணவ பிரம்மாக்களே! சீனத்
தத்துவ ஞானி அவர்கள்,
‘yesterday is history, tomorrow is mystery, today is a gift’ என்று மிக அழகாக கூறியிருக்கிறார்.
நாளைக்கு எழுதப் போகும் தேர்வை விட இன்று என்னப் படித்தீர்கள் என்பதே முக்கியம். காரணம்
இந்த நிமிடம் உங்களுடையது. தேர்வுக்கு நாட்கள் நெருங்குகிறது என்பதை விட நீங்கள் எல்லாப்
பாடத்தையும் நெருங்கினீர்களா என்பதே முக்கியம். வெற்றிக்கு உங்களை யாரென்று தெரியாது.
ஆனால், உங்களின் உழைப்பிற்கு வெற்றி என்றுமே
அடிபணியும். ‘எழுச்சியும் முன்னேற்றமும் ஒவ்வொரு
உயிர்க்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை’ என்று இரிக் வேதத்தில் உதிர்த்ததை உங்களின் வேத மாக்கிக் கொள்ளுங்கள்.