எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

எண்ணம் போல் வாழ்வு...



                       உள்ளுவது  எல்லாம் உயர்உள்ளல்; மற்றஅது
                       தள்ளினும் தள்ளாமை நீர்த்து

                        என்ற திருக்குறளைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். வள்ளுவரின் சூட்சுமும் நமக்குப் புரிய வரும். ஏன் உள்ளுவது எல்லாம் உயர்வாய் இருக்க வேண்டும்? அது கிடைக்கா விட்டாலும் உயர்வாய் எண்ணுவதை விடக்கூடாது என்று அழுத்தமாகக் கூற காரணம் என்ன? சிந்தித்தோமானால் வள்ளுவர் மிகப் பெரிய மனோவியல் உண்மையை நம்மிடம் உரைக்கின்றார்.

                     கடந்த 2.5.2016 அன்று அலோர்ஸ்டாரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். தேவி சோம் வூன் என்ற 21-வயது நிரம்பிய  மலாய் இளைஞர் தாம் 21-ஆவது வயதுக்கு முன்பே இறந்து விடுவேன் என்று பல முறை கூறி வந்துள்ளார். இந்தக் கூற்றை அவரின் அண்ணன் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் சொன்ன மாதிரியே தன் 21-ஆவது அகவையை அடைந்த ஒரு வாரத்தில் சாலை விபத்தில் அகால மரணமடைந்து உள்ளார். இதைப் போன்று ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர் நினைத்ததை மனதில் விதைத்ததை அறுவடை செய்தார். அவ்வளவு தான்.

                      நாம் எண்ணும் எண்ணம் என்பது நூலில்லாத பட்டத்தைப் போன்றது. வானத்தில் அது பறந்து கொண்டிருக்கிறது என்பதை விட, மிதந்து கொண்டிருக்கிறது என்பதே சரி. வெறும் பட்டங்களாக அல்ல; படங்களாக. நாம் எண்ணும் எண்ணங்கள் ஒரு நொடிக்கு ஐந்து லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் எதை நினைக்கிறோமோ அங்கு சென்று உடனே நம்மிடம் திரும்பி வருவதாக மனோவியல் அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். வள்ளுவர் சொன்ன அந்த உயர் என்ற வார்த்தையைக் கொஞ்சம் கவனியுங்கள். உயர்வாய் நினைப்பன உன்னை உயர்த்தும் என்ற வரிகள் எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது. வானத்தில் உயரே இருக்கிறது அந்த இரகசியம். நமது சகஸ்ராரத்தின் உயரே இருக்கிறது உயர்வுள்ளல். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம். அதனால் தான் சொல்கிறார்கள், ‘எண்ணம் போல் வாழ்வு என்று.

                   ஒர் அரசர் எப்பொழுதுமே நகர் ஊர்வலம் செல்வது வழக்கம். அப்படி செல்கையில் எல்லோரையும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் கடைத் தெருவைத் தாண்டும் பொழுது, சந்தனக் கட்டை விற்கும் கடை முதலாளியைப் பார்க்கிறார் அரசர். பார்த்தவுடன் அவருக்கு அந்த கடைக்காரரிடம் மேல் ஒரு வகையான வெறுப்பு ஏற்படுகிறது. எரிச்சலும் கோபமும் மேலிட்டது. இது ஏன் என்று அரசருக்கு புரியவில்லை. இரண்டாவது முறையும் அவரைப் பார்க்கும் பொழுது இதே எண்ணமே அரசருக்குத் தோன்றியது. உடனே அமைச்சரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார் அரசர். அமைச்சருக்கு விபரம் புரிந்ததால் உடனே அந்த கடை முதலாளியைச் சந்திக்கச் சென்றார்.

                      அதற்கு அந்த முதலாளி, ‘என் மகளுக்காக வைத்திருந்த பணத்தை எல்லாம் கொண்டு சந்தனக்கட்டை வாங்கி விட்டேன்.கல்யான செலவுக்குப் பணம் இல்லாமல் க‌ஷ்டப்படுகிறேன். அப்பொழுது அரசர் ஊர்வலம் செல்லும் பொழுது அவர் இறந்து விட்டால் என்னுடைய சந்தனக்கட்டையை எல்லாம் வாங்கியிருப்பார்களே என நினைத்தேன் என்று கூறினார். இதனை ஏற்கனவே தெரிந்து கொண்ட அமைச்சர், எல்லா சந்தனக்கட்டைகளையும் அவரே வாங்கிவிட்டார். மகிழ்ச்சியடைந்த முதலாளியும் மனதார நன்றிதனைக் கூறினார். இந்த முறை அரசர் நகர் வலம் வரும் பொழது மீண்டும் அந்த முதலாளியைச் சந்திக்கிறார். ஆனால், பழைய மாதிரி கெட்ட எண்ணங்கள் வரவில்லை. அவர் மேல் ஓர் அன்பு வருகிறது. இனம் புரியாத மரியாதை ஏற்படுகிறது. இது அரசருக்கு புரியவில்லை. அமைச்சர் அழகாக பதில் அளிக்கிறார்.

                       அரசே, நீங்கள் முதல் இரு முறை அவரைப் பார்க்கும் பொழுது அவர் அந்த சந்தனக்கட்டையை விற்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு வேளை நீங்கள் இறந்திருந்தால் எல்லா சந்தனக் கட்டைகளும் விற்றிருக்குமே என்று அவர் தீவிரமாக நினைத்ததால் தான் உங்களுக்கும் அதே மாதிரி எண்ணம் தோன்றிற்று. நேற்று நானே நேரில் சென்று அந்த சந்தனக்கட்டைகளை எல்லாம் வாங்கி விட்டேன். இன்று நீங்கள் பார்க்கும் பொழுது அவர் மிகவும் சந்தோஷமான மனோநிலையில் இருந்து அரசர் வாழ வேண்டும் என்று உங்களையும் வாழ்த்தினார்.

                   இது எங்கோ நடந்த கதை அல்ல, நம் கண் முன்னே நடக்கும் ஆயிரம் கதைகள். நாம் எதை விதைக்கிறோமோ அப்படியே அதை அறுவடை செய்கிறோம் என்று இயற்கையின் நியதி (cosmic law) உரைக்கிறது. இதையே இயேசு பிரானும், ‘எதை விதைத்தாயோ அதை அறுவடை செய்வாய்என்று அழகாக கூறுவார். அதனால் தான் வள்ளுவரும், ‘உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் என்று அழுத்தமாக கூறுகிறார்.  அந்த உயர் உள்ளல் நமது சகஸ்ராரத்தின் உயரே  இருக்கிறது. உயர் என்ற சொல்லே நமக்கு உயர்வைக் கொண்டு வரும். எல்லா தொலைத்தொடர்பு கம்பம் உயரே தான் வைக்கப்பட்டிருக்கும். அப்படி வைத்தால் தான் தொடர்பு கிடைக்கும். அபு டாபியில் உள்ள அல் புர்ச் என்ற கோபுரம் உலகிலேயே உயரமான கோபுரம் மட்டும் அல்ல, மாறாக மனிதனின் மிக உயர்ந்த எண்ணங்களின் பிரதிபலிப்பும் அதுவே.

                    எண்ணங்களை மாற்றினால் வாழ்க்கை மாறிவிடும் என்பார்கள். கண்ணுக்குத் தெரியாத விண்ணுலகத்தில் எண்ண முடியாத விடயங்கள் பல கோடி. நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று மண்டலத்தில் பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் இருக்கிறது. காற்றின் வழியாகத்தான் சூட்சுமங்கள் பரிமாறப்படுகின்றன. அதில் எண்ணங்களே மிஞ்சி நிற்கின்றன. எப்படி அணுவில் ஃப்ரோட்டோனை இலெக்ரோன் சதா சுற்றி வருகிறதோ, அதே மாதிரி இந்த காற்று மண்டலத்தில் நாம் எண்ணும் ஒவ்வொரு நொடி எண்ணமும் சதா சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. நாம் எண்ணும் எண்ணங்களை பிரபஞ்ச மனம் உள் வாங்கி கிரகித்து மீண்டும் அதனைச் செயல்படுத்த ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கிறது. இவை எல்லாம் நொடிப் பொழுதில் நடக்கும் இறைவனின் அறியப்படாத இரகசியங்கள்.

                   மஹாபாரதத்தில்  கர்ணனின் இறப்பு தற்செயலாக நடந்தது அல்ல, மாறாக கர்ணன் ஏற்கனவே போட்ட எண்ணத்தின் விளைவுதான்  அந்நிலைக்குக் காரணம் என்று அறியப்படுகிறது. ஆக, இந்த மண்ணுலகில் யாராக இருந்தாலும் சரி எண்ணங்களே நம் வாழ்க்கையை அமைக்கின்றன. எண்ணத்தின் வலிமையே நம் வாழ்வின் தரம்,உயர்வு எல்லாம். உலகை வெல்வதற்கு முன் தன்னை வெல்ல வேண்டும் என்று சொன்னதும் இதற்காகத்தான். தன்னை என்பது நாம் எண்ணும் எண்ணங்களே!