எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

வாழ்க்கை ஓர் அழகான பயணம்...


                      வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களுக்கு நிச்சயம் ஓர் அழகான பயணமாகத்தான் அமையும். வாழ்க்கை வாழ்வதற்கு. போராட்டம் என்பது உண்மை தான். ஆனால், போராட்டமே வாழ்க்கையானால் நிம்மதி இழந்து விடுவோம். ஆசிரியப் பணியும் அப்படித்தான். குடும்பப் பிரச்சனையின் காரணமாக நிறைய ஆசிரியர்கள் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு இறக்கும் ஆசிரியர்களும் அதிகமாகிவிட்டார்கள். இவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கை ஓர் அழகான பயணமாக அமையாது.

                   நம் வாழ்வில் இரண்டு பகுதியில் முடிந்து விடும். ஒன்று, குடும்பம். இரண்டு, வேலை செய்யும் இடம். இதில் ஒன்று பிரச்சனையாகி விட்டாலும் கூட வாழ்க்கை அழகான பயணமாக அமையாது. இந்த இரண்டுமே பாதிக்கும் போது தான் மரணம் நெருங்கி விடுகிறது. புனிதமான ஆசிரியப் பணியில் பயணித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் இக்கட்டுரையைச் சமர்ப்பணம் செய்கின்றேன். எனக்குத் தெரிந்த நிறைய ஆசிரியர்கள் பள்ளியிலும் வீட்டிலும் சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆறுதல் வார்த்தைகளை விட இக்கட்டுரை நிச்சயம் அவர்களை அரவணைக்கும்.

                   ஆசிரியர்களே தயவு செய்து ஓர் உண்மைக்கு வந்து விடுங்கள். குறுகிய இந்த வாழ்க்கையில் பெரிதாக ஏதும் நாம் கொண்டு போவது இல்லை. வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக்க ஓர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இனி வெல்வதற்கு உலகு இல்லையே என்று வருத்தப்பட்ட மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எத்தனையோ சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்த அவன் ஒரு சாதாரண சாதுவிடம்(சித்தரிடம்) தோற்றதை மறக்க முடியுமா? இறந்த பிறகு தன் இரு கைகளையும் பிணப்பெட்டியின் வெளியில் தொங்குமாறு ஆணையிட்டிருந்தான். உலகையே ஆண்ட மாவீரன் ஒன்றுமே இல்லாமல் செல்கிறானே என்ற செய்தி தான் அது.

                     உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு,மயக்கமா கலக்கமா,மனதிலே குழப்பமா?’ என்ற கண்ணதாசன் வரிகளைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். பள்ளியிலும் குடும்பத்திலும் என்னப் பிரச்சனை என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, வாழ்ந்து பாருங்கள் என்பது  தான் என் நோக்கம். நமக்கு எது நடந்தாலும் அனைத்துமே கடந்து போகும். தங்கி விடுவதற்கு இது ஒன்றும் முதுமை கிடையாது. மறந்தும் மனதிலே பதித்து விடாதீர்கள். உங்களுடைய எண்ணங்களைப் புதுபித்து விடுங்கள். பிரச்சனைகள் உங்களை விட்டுப்போகும். புதியப் பதிவுகளை வர விடுங்கள்.

                   கம்பராமாயணத்தில் கைகேயி கேட்ட அந்த 2 வரமும், இராவணன் தன் உயிரையே மாய்துப் போனதும் அடுத்தவர் சொல் கேட்டதனால் தான். கைகேயி கூனியின் பேச்சைக் கேட்டு மனம் குழம்பிப்போய் மதிகெட்டு கேட்கக் கூடாத அந்த இரண்டு வரத்தைக் கேட்டாள். இராவணனோ தன் தங்கையின் மதியிழந்தப் பேச்சைக் கேட்டு சீதையின் மேல் மோகம் கொண்டான். சம்பந்தமே இல்லாத தம்பியின் படையில் இருந்த ஒரு சாதாரணமானவனின் பேச்சைக் கேட்டான். விசாரிக்காமல் உணர்ச்சி வசப்பட்டான். அனைத்தையும் இழந்தான். இரண்டிற்கும் ஒரே ஒற்றுமை தான். அடுத்தவர் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்வது.

                      பள்ளியிலும் அப்படித்தான். அடுத்தவர்கள் சொல்வதைத் தயவு செய்து நம்பிவிடாதீர்கள். அது நம்மை அழித்து விடும். எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பிணும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவர் செல்வதைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, குரைக்கின்ற நாய் தான் கல்லடிப்படும். பதுங்குகின்றப் புலி நிச்சயம் பயும். புரிந்து கொண்டால் இதுவே அறிவு. பிரச்சனைகளை அதிகமாக நினைக்க நினைக்க அது படக்காட்சியாக மனதிலே பதிவாகும். அப்படி ஆழ்மனதிலே பதிவாகும் பொழுது நிச்சயமாக அது வாழ்க்கையில் பெரியத் தாக்கத்தினை ஏற்படுத்தி விடும். அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அப்படித்தான் ஆரம்பமாகிறது.

                   வள்ளுவர் அழகாகச் சொல்லுவார். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று. எவ்வளவு அழகான வார்த்தைகள் அவை. நமக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் நம்மால் இருந்து வந்தது என்று கல்லால் அடித்ததுப் போல் சொல்கிறார். பறகு ஏன் நாம் மற்றவரின் மேல் பழியைப் போட வேண்டும்? ஓர் அழகானப் பயணத்தை வாழ முடியாதது அடுத்தவர் குற்றமா? சிந்தனைச் செய் மனமே. யாரையும் திருந்தப் பார்ப்பதை விட நாம் திருந்தினோமா என்பது தான் முக்கியம். அதேபோல், யாரையும் திரும்பிப் பார்க்காதீர்கள், நம்மை எல்லோருரையும் திருப்பிப் பார்க்க வையுங்கள். நீங்கள் உண்மையில் வாழ்கிறீர்களா அல்லது போராடுகிறீர்களா? வாழ்ந்துப் பாருங்கள் வானமெங்கும் வாழ்த்துகள் பொழியும்.


                   நான் பார்த்த ஆசிரியர்களில் பெரும்பாலும் இந்த நிமிடம் வாழத் தெரியாதவர்கள். தங்களுடைய அழகான வாழ்க்கையை அடுத்தவரிடம் ஒப்படைத்து விடுவார்கள். தனக்கு ஓர் வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விட்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு செய்தி. இழந்தது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், வாழ்ந்தது நிஜமாகட்டும். வாழ்க்கையை அர்த்தமாக்க வாழ்ந்து விடுங்கள். வாழ்க்கை ஓர் அழகான பயணம்.