சிறுகதை.....
‘கோயில் கோபுரத்தில் வெள்ளைக்காரச் சிலை’
‘எங்கே அவரு. வந்தோமா படித்துக் கொடுத்தோமா இல்லாமா, இவரு யாரு அந்தச் சிலையை உடைக்கச் சொல்வதற்கு? அவர வரச் சொல்லுங்கள் சார். இல்லையன்னா நிலைமை மோசமாகிடும்’ கூட்டத்தில் வந்த பெரியச்சாமியின் குரல் கடுமையாக
இருந்தது. தடுமாறிப்போன தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் உடனே சுதாரித்துக்
கொண்டார். வந்தவர்கள் காட்டமாக இருப்பது அவருக்குத் தெரியும். ‘தானும் குரலை உயர்த்தினால் நிலைமை மோசமாகி விடும்
என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர்களை
அமைதிப்படுத்த அனைவரையும் அழைத்துக்
கொண்டு திடல் ஓரமாக சென்றார்.
‘ஐயா, அவர் செய்தது தவறுதான். என்ன
நடந்தது என்று நான் விசாரிக்கின்றேன். அவர் ஒரு நல்ல ஆசிரியர். அவசரப் பட
வேண்டாம். உங்களுடைய உணர்வை நான் மதிக்கின்றேன். அவர் இன்று பள்ளிக்கு வர வில்லை.
அடுத்த வாரம் தான் பள்ளிக்கு வருவார். வந்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் சொல்லி
முடித்தவுடன் வந்தவர்கள் கொஞ்சம் மனம் மாறித்தான் போயிருக்கணும். ‘இல்லை சார். கோயில்மேல் துரை அவரு மனைவியம்மா சிலை
வச்சது இன்னிக்கு நேத்து இல்ல. இது காலா காலமும் உள்ளது. நாங்க அத மாத்த முடியாது
சார். அப்புரம் அது சாமி குத்தமாகிடும்’. இதைக் கேட்ட தலைமையாசிரியர் முருகானந்தம் குழம்பித்தான் போயிருந்தார். காரணம்
அப்படி ஒரு சிலையை அவர் பார்த்ததே கிடையாது. வந்தவர்கள் கொஞ்ச ஆறுதலுடன்
விடைபெற்றுச் சென்றார்கள்.
அவர்கள் சென்றவுடன்
உடனடியாக தலைமையாசிரியர் ஆசிரியர் தேசனுக்கு தொலைபேசி செய்தார். ‘ஹலோ, வணக்கம் சார்.
எப்படி சார் இருக்கீங்க?’ ‘சார்.நான்
நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி சார் இருக்கீங்க?’ ஆசிரியர் தேசன் உற்சாகத்தோடு தன் தலைமையாசிரியரை நலம் விசாரித்தார். தலைமையாசிரியர்
சற்று முன்பு பள்ளியில் நடந்த விஷியத்தை விலாவாரியாக ஆசிரியர் தேசனிடம் எடுத்துக்
கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் தேசன் சற்றே கலங்கினார். எப்படி இது நடந்தது என்று
அவருக்குப் புரியவில்லை. இன்னும் இரு நாட்களில் ஆசிரியர் கழகத்தில் பட்டமளிப்பு
விழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாக இருந்த ஆசிரியர் தேசன் தன் எண்ணங்களைப் பின்னோக்கி
சிந்திக்கலானார்.
இதோ, இரண்டரை ஆண்டு காலத்தை ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில்
முடித்து விட்டு இலட்சியக் கனவோடு முதல் நாள் பள்ளிக்கு தன் மோட்டார் வண்டியில்
பறந்து கொண்டிருந்தார் இளம் ஆசிரியர் தேசன்.
அவரின் முதல் நாள் பயணமே
அவரைச் சோதனையில் ஆழ்த்தி விட்டது. தோட்டப்புறத்தில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளி, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பயன்படுத்தப்பட்ட
இரப்பர் தொழிற்சாலை தமிழ்ப்பாடசாலையாக மாறியிருந்தது. செம்மண் புழுதி இல்லாமல்
அப்பள்ளிக்குச் செல்ல முடியாது. தேசன் ஆசிரியரும் அப்படித்தான். முதல் நாளே லேசான
மழைத்தூரல். காட்டிற்குள் சென்று கொண்டிருந்த அவரின் மோட்டார் வண்டியில்
எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று திடீரென்று
மோட்டாரின் சக்கரத்தில் புகுந்து விட்டது.
அதிர்ச்சியடைந்த
ஆசிரியர் தேசன் கலக்கதுடன் மோட்டாரை செம்மண் சகதிக்குள் விட்டு விட்டார். மோட்டாரை
விட்டு இறங்கும் பொழுது தவறுதலாக செம்மண் புழுதியில் வைத்து விட்டார். சப்பாத்து
சேறு பட்டதையும் கவனியாமல் பாம்பு வந்த இடத்தைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.
‘அப்பாடா, நல்ல சகுனம் தான்’ என்றவாறு மீண்டும்
தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். வசதிகள் இல்லாதப் பள்ளிக்கூடம் தான். ஆனால், எல்லா அசதிகளையும் போக்கியது. அன்பான ஆசிரியர்கள், பணிவான மாணவர்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு
நிம்மதி இருந்தது. பள்ளிக்கு வந்து
ஓராண்டு கடந்து விட்ட நிலையில் அவருக்கு ஆறாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடம் போதிக்க
வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மிகவும் ஆர்வமாகவும்
சந்தோஷமாகவும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் தேசன் மாணவர்களிடையே
நெருங்கிப்பழகி தமிழ்மொழி உணர்வை ஊட்டினார். ஒரு முறை மாலை வகுப்பின் போது
ஆசிரியர் தேசன் கட்டுரை ஒன்றினை போதித்துக் கொண்டிருந்தார். அவர் வெறும் பாடத்தை
மட்டும் போதிக்கும் ஆசிரியர் அல்ல, மாறாக மொழி உணர்வு, சமூதாயச் சிந்தனை, சமயம் ஆகியவற்றைச் சேர்த்து தன் மாணவர்களுக்கு போதிப்பவர். அன்றும்
அப்படித்தான். ‘மாணவர்களே! உங்கள் தோட்டத்து
கோயில்களை நன்றாகப் பார்த்துள்ளீர்களா?’மாணவர்களும் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டினர். ‘கோயிலின் கோபுரத்தில் சாமி சிலைகள் இருக்கலாம்.
ஆனால், வெள்ளைக்காரர் அவர் மனைவி சிலைகள் இருக்கலாமா?இது பாவம் இல்லையா?’ இது தான் அவருடையக் கேள்வி. மாணவர்கள் பலவாராக பதில் அளித்துக்
கொண்டிருந்தனர். எல்லா கேள்விகளுக்கும் நிதானமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தார்
ஆசிரியர் தேசன். அதில் ஒரு மாணவன், ‘சார்.
இவ்வளவுப் பாவம் என்று தெரிந்தும் ஏன் இன்னும் இதை உடைக்காமல் இருக்கிறார்கள்?’அதற்கு ஆசிரியர் தேசன், ‘அப்படியெல்லாம் உடைக்க முடியாது. அதற்கு நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன. முறையாக
அதைச் செய்ய வேண்டும்’ என்றார் அவர். இதைக் கேட்ட சில
ஆண் மாணவர்கள் தங்களுக்குள்ளே முனகிக் கொண்டனர்.
எப்பொழுதும் போல வகுப்பை
முடித்துக் கொண்டு ஆசிரியர் தேசன் தன் வீட்டிற்குப் பயணமானார். மறுநாள் காலையில்
தன் பட்டமளிப்பு விழாவிற்குப் பயணமாகி கொண்டிருந்த பொழுது தான் தலைமையாசிரியரிடம்
இருந்து அந்த தொலைப்பேசி அழைப்பு வந்தது. வகுப்பு முடிந்த அன்று நான்கு மாணவர்கள்
நேராகத் திறந்திருந்த கோயிலுக்குச் சென்றுள்ளார்கள்.
ஆள் நடமாட்டம் இல்லாததால் நாள்வரும்
பூட்டப்படாத கோயில் கதவைத் திறந்து உள்ளே புகுந்துள்ளனர். நாள்வரில் இருவர் கோபுரத்தில்
ஏறி அந்த வெள்ளைக்காரர் மற்றும் அவரின் மனைவியன் சிலையைப் பிடித்து அசைத்து
இழுத்துள்ளனர். ஆனால், சிலையை அவர்கள் உடைக்க வில்லை.
அவர்கள் கைகளில் ஆயுதம் ஏதும் இல்லை. சிலை கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது.
‘டேய்
இராஜா! ரொம்ப கஷ்டமா இருக்குடா.அசைக்க முடியலடா..’ என்று குமரேசன் அவேசப் பட்டான். ‘டேய்
எப்படியாவது உடைத்து விட்டு சீக்கிரம் ஓடி விடலாம் வா!’ என்று கூறிய இராஜா படபடப்புடன் காணப்பட்டான். நேரம் சரியில்லை என்பார்கள்.
அவர்கள் நேரமும் அப்படித்தான். அந்தத் தோட்டத்து ஜாகா கொஞ்சம் ஜாகாட்டாகவே
செயல்பட்டு விட்டார். கோயிலின் மைல் அந்த மாணவர்களைப் பார்த்து விட்ட அவர் அவசரமாக
மோட்டாரை விட்டு விட்டு நேராக
கோயிலுக்குள் ஓடினார். அவரைப் பார்த்த அந்த நான்கு மாணவர்களும் பதறி
அடித்து ஓட முயற்சித்தனர். ஆனால், அந்த நான்கு
மாணவர்களும் சரியாக மாட்டிக் கொண்டனர்.
அந்த ஜாகா அவர்களைப் பிடித்து கைகளைக் கட்டி
கீழே உட்கார வைத்திருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த நான்கு மாணவர்களும் அவருக்கு வேண்டிய உறவுப் பையன்கள். பயந்து நடுங்கிப்
போயிருந்த அந்த நான்கு மாணவர்களும் கடும் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டனர்.
அதற்குள் விஷயம் தோட்டத்திற்குள் பரவிவிட, சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் அங்கு வந்து விட்டனர். ‘சீ! இவன் என்ன கொலையா செய்து விட்டான். கொலையாளியைப் போல் கட்டிப் போட்டு
வைத்து விட்டார்களே?’ வந்திருந்த பெற்றோர் ஆவேசத்துடன்
அந்த ஜாகாவிடம் கத்தினார். ‘இவர்கள் செய்தது
பெரிய குற்றம். சாமி சிலையை எப்படி இவர்கள் உடைக்க முடியும்? போலீஸ் வரட்டும்..மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.’ ஜாகாவும் குரலை உயர்த்தித் தான் பேசினார்.
‘சரி ஐயா! நீங்கள் சொன்னதுப் போல் சிலை ஏதும் இங்கு உடைபட வில்லை. போலீஸ்
எல்லாம் இங்கு வர வேண்டாம். இது சின்னப் பிரச்சனை தான். இவர்களை விசாரித்து
விட்டுவிடலாம். இவர்கள் நம்ப பிள்ளைகள் தானே?’ கூட்டத்தில் வந்திருந்த தோட்டத்து கிராணி அவர்கள் எல்லாரையும்
சமாதானப்படுத்தினார். ‘சரி...அந்த
பிள்ளைகளை இங்கே கூப்பிடுங்கள்.என்ன நடந்தது என்று விசாரிப்போம்.தம்பி உங்க பேரு
என்னது.’ கிராணி அய்யா அந்த மாணவனைப்
பார்த்துக் கேட்டார். ‘என் பெயர் இராஜா
சார்.’ ‘அப்படியா...சரி ஏன்யா கோபுரத்தில
ஏறி அந்த சிலையை உடைக்கப் பார்த்தீர்கள்?
பயப்படாதீங்க.. நான் இருக்கேன்..சொல்லுங்க’ என்று கிராணி ஐயா பவ்வியமாகக் கேட்டார். அமைதியாகப் பார்த்த இராஜா நடந்த
வற்றைக் கூறலானான். எல்லாருடையக் கண்களும் இராஜாவின் மேல் தான் இருந்தது. ஆனால் இராஜாவுக்கு
மட்டும் அந்த ஜாகாவைப் பார்க்க இன்னும்
பயமாகத் தான் இருந்தது.
‘தேசன் சாரு எங்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்குறாரு. இன்னிக்கி மாலை
வகுப்பு அவரு தான் எடுத்தாரு. நம்ப கோயில் கோபுரத்தில வெள்ளைக்காரச் சிலை
இருப்பதைப் பற்றி நிறையப் பேசினாரு. அது பவம்னு சொன்னாரு. தவறுன்னு சொன்னாறு. அவரு
எங்களை உடைக்கச் சொல்லல. நாங்க தான் யோசிச்சி முடிவு செஞ்சோம்.’ என்று சொன்ன முடித்தவுடன் கூட்டத்தில் ஆசிரியர்
தேசனின் பெயர் அடிபடலாயிற்று. நிலமை சரியானவுடன் எல்லா பெற்றோர்களும் அவர் தம்
பிள்ளைகளைக் கூட்டிச் சென்று விட்டனர். திடீரென்று பெரு மூச்சு விட்ட ஆசிரியர்
தேசன் தன் எண்ண அலைகளிலிருந்து விடுபட்டார். இப்படி நடந்து விட்டாதே என்று
வருத்தப்பட்டார். அந்த வருத்தத்துடன் தன் பட்டமளிப்பு விழாவிற்காக ஈப்போ நோக்கிப்
பயணமானார்.
மறுவாரம் பள்ளிக்குத்
திரும்பிய ஆசிரியர் தேசனை தலைமையாசிரியர் அனுமதியுடன் சில கேள்விகளைக் கேட்டனர். ‘நீங்க செஞ்சது ரொம்பத் தவறு சார். ஒன்னுந்தெரியாதப்
பிள்ளைகளை நீங்கள் தூண்டி விட்டது தவறு. வந்தோமா படித்துக் கொடுத்தோமா என்று
இருக்கணும். தலைமையாசிரியரிடம் நாங்க எல்லாம் பேசிட்டோம். இனிமே இப்படி வராதபடி
பார்த்துகுங்க சார்.’ மிகவும் பொருமையாகவே தலைவர் பெரியச்சாமி
இவ்வாறு கூறினார். ஆசிரியர் தேசனும், ‘நடந்தத் தவறுக்கு என்னை மன்னிசிருங்க. இது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது.’ என்று கூறி முடித்தார்.
சரியாகப்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு……
அதே தோட்டத்துக் கோவிலின்
கும்பாபிஷேகம். கோவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. ஆசிரியர் தேசனுக்கும் ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. அதைப்
பார்த்தவுடன் கட்டாயம் செல்ல வேண்டும் என்றிருந்தார். அந்த நாளும் வந்தது. தன் குடும்பத்துடன்
கோவிலின் வாயிலுக்குள் நுழைகிறார் ஆசிரியர் தேசன். அவரின் கண்கள் கோவிலின்
கோபுரத்தை உற்றுப் பார்க்கின்றன. என்ன ஆச்சர்யம். அங்கு அந்த வெள்ளைக்காரச்
சலையைக் காணவில்லை. அவரின் கண்கள் குளமாயின. கண்ணிற்குத் தெரியாத தெய்வத்தைக்
கொஞ்ச நேரம் மறந்து விட்டு, கண்ணிற்குத்
தெரிந்த தெய்வமாகிய அந்த நான்கு மாணவர்களைத் தேடி ஓடுகின்றார் ஆசிரியர் தேசன். அவர்களின்
சந்திப்பு நிச்சயமாக அந்த கோபுரத்தின் கீழ் தான் நடந்திருக்கும்.