எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

தோட்டப்புற மாணவர்களே! நீங்கள் போற்றப் பிறந்தவர்கள்...


                   நாட்டில் இன்னும் தமிழ் வாழ்கிறது என்றால், தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகிறது என்றால் அதற்கு முதன்மை காரணம் தோட்டப்புறங்களே. தோட்டப்புறம் என்றாலே அது ஒரு பசுமையான நினைவுகள். தமிழன் தவழ்ந்தது, தமிழ் தழைத்தது இங்கு தான். தோட்டப்புறப் பள்ளி என்றாலே அது ஒரு தனி அடையாளம். குறைகள் எது வேண்டாலும் இருக்கலாம். அது முக்கியமல்ல. தோட்டப்புறம் என்ற அடையாளம் மாறினாலும் அங்கிருந்துப் புறப்பட்ட ஆயிரக்கணகான மாணவர்கள் இன்று தரணியை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

                   சுற்றிலும் செம்பனை மரங்கள். நெடுகிலும் செம்மண் சாலை. நடுவிலே கொட்டகை அமைப்பில் தமிழ்ப்பள்ளி. நாட்டில்  இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கட்டப்பட்டக் கட்டிடங்களை இன்னும் தமிழ்ப்பள்ளியின் அடையாளமாக இருக்கின்றன. இணையம், மின்சாரம், தண்ணீர் வசதிகள் குறைவான பள்ளிகளை இன்றும் காண முடியும். பார்ப்பதற்குக் குடிசை போல் காட்சி தந்தாலும் அங்கு தான் வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. நான் வைரம் என்று சொன்னது நம் மாணவர்களைத் தான். வசதி குறைந்து காணப்பட்டாலும், அவர்களிடம் அசதியைக் காண முடியாது. ஆசிரியர்களின் கட்டளையே அவர்களின் வேத வாக்கு.

                   ஆசிரியர்களுக்கு எத்தனை உலகம் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், தோட்டப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டும் தான் உலகம். எவ்வளவு அடி வாங்கினாலும் கடைசி வரைக்கும் அந்த மரியாதை இருக்கும். யு.பி.எஸ்.ஆர் தேர்வில் நகர்ப்புற மாணவர்கள் 7எ எடுத்தால் அது சாதாரணம். ஆனால், தோட்டப்புற மாணவர்கள் 7எ எடுத்தால் அது அசாதரணம். 7எ எடுக்க வைத்த அந்த ஆசிரியர்களின் உழைப்பும் அசாதரணமானது என்றால் அது மிகையாகாது. நேரம் காலம் பார்க்காத அம்மாதிரியான ஆசிரியர்களின் தியாகம் போற்றத்தக்கது. செம்மண் தோட்டத்தால் செதுக்கப்பட்டச் மாணவச் சிங்கங்களே, உங்களின் கர்ஜனை உலக அளவில் ஒலிக்கட்டும். உங்கள் பாதங்கள் நா சபையில் பதியட்டும்.

                     மலேசியக் கல்வி உருமாற்றத் திட்டத்தில் நாட்டின் முதல்  உயர் நிலைப் பள்ளியாகத்(SBT) தேர்வுப் பெற்றது ஜொகூரில் உள்ள ரிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பதை மறந்துவிடலாகாது. ஒரு தோட்டப்பள்ளி மலேசிய வரைபடத்தில் அடையாளங் காட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் கெடா மாநிலத்தில் புக்கிட் ஜெனுன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வட்டாரத்திலேயே முதல்நிலைப் பள்ளியாகத் தேர்வுப் பெற்று நம்மை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிப்பாங் வட்டாரத்தில் அமைந்துள்ள பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி தகவல் தொழில் நுட்பத்தில் நாட்டிலேயே முன்னோடியாக அங்கீகாரம் பெற்று தோட்டப் பிள்ளைகளின் அதீத ஆற்றல்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறையப் பள்ளிகளை இங்கே கோடிக்காட்ட முடியும்.

                   தோட்டப் பள்ளிக்கென்று ஒரு மண் வாசனை உள்ளது. அது நிச்சயமாக நம் பிள்ளைகளைக் கைவிடாது. வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் அமைத்துக் கொடுத்தால் தோட்டப்புற மாணவர்களும் கொண்டாடப் படுவார்கள். நகர்ப்புறத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பாடம் படித்துக் கொடுத்தால் பணம் கனக்கும், தோட்டப்புறத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பாடம் படித்துக் கொடுத்தால் மனம் கனக்கும். தான் வசதியாக இல்லா விட்டாலும் தன் பிள்ளைகள் அசதியாகக் கூடாது என்று எண்ணும் பெற்றோர்கள் இருக்கும் வரை தோட்டப்பள்ளிகள் தமிழுக்கு ஓர் அடையாளம் தான்.

                   மலேசியாவில் இந்திய சமூதாயம் 55% மட்டுமே தன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அந்த 55% -இல் பாதிக்கு மேல் தோட்டப்பள்ளிகளைச் சார்ந்ததாகும். ஒரு காலத்தில் தோட்டப்பள்ளிகள் தானே என்று இழிவாகப் பார்த்த காலம் போய், இன்று தோட்டப்பள்ளிகள் துப்பாக்கித் தோட்டாவைப் போல் தெறிப்பதைக் காண முடிகிறது. ஆகவே, அன்பு மாணவர்களே நீங்கள் சிறுமையை எண்ணிச் சிறுத்துப் போகாதீர்கள். வறுமையை நினைத்து வருந்தி விடாதீர்கள். தொடர்ந்துப் போராடுங்கள். புலிகள் வாழும் காட்டில் தான் மான்களும் வாழ்கின்றன. யானைகள் திரியும் காட்டில் தான் எலிகளும் வாழ்கின்றன. இறைவன் படைப்பில் எல்லோரும் சாதிக்கப் பிறந்தவர்களே.


                   தோட்டத்தில் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள். உங்களுக்கு ஓர் உண்மைத் தெரியுமா? இன்றைய நாள் வரை ஆப்பிரிக்கக் கண்டத்தில் 65 இலட்சம் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லவே இல்லை என்று யுனெஸ்கோ கல்விக் குழு தெரிவிக்கிறது. அதனால் தான் கவிஞர் கண்ணதாசன், ‘உனக்கும் கீழே உள்ளவர்கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு, மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?’ என்று அழகாகக் கூறுவார். காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் சாதிக்க முடியாது. நீங்கள் பிறந்தது தோட்டத்தில் என்றாலும் நீங்கள் வாழ்ந்து காட்டப் போவது நிச்சயமாக வேறொரு இடமாகத்தான் இருக்கும். 

                அது எந்த இடம் என்று நீங்களே முடிவுச் செய்து கொள்ளுங்கள். தமிழன்னையின் தவப்புதல்வர்கள் நீங்கள். தரணியாள வந்தவர்கள் நீங்கள். மயக்கத்தை உதறி விட்டு வீறு கொண்டு நடைபோடுங்கள். ஆறுகளைப் போல் பாய்ந்து செல்லுங்கள். உலகத்தை உங்கள் பக்கம் திருப்ப முனைப்புக் காட்டுங்கள். நீங்கள் முந்திச் செல்லும் நேரம் இது.நம்புங்கள்.