எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 7 ஜூலை, 2016

குறை சொல்பவர்களே…..கொஞ்சம் கேளுங்கள்


              ‘நீங்கள் தினமும் எதை நினைக்கின்றீர்களோ, தினமும் எதை பேசுகின்றீர்களோ, தினமும் எதை செய்கின்றீர்களோ அதுவாக நீங்கள் ஆகிறீர்கள்என்பது மனோவியல் தரும் செய்தியாகும். இங்கு குறை சொல்பவர்களை நான் குறை சொல்ல வரவில்லை.மாறாக, குறை சொல்லும் பழக்கம் நம்மை எங்கு இட்டுச் செல்கிறது என்பதனை விளக்கிச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
                             குறைகள் என்பது வெறும் நுரைகள் என்று வைரமுத்து மிக அழகாகச் சொல்வார். நுரைகளை அதிகம் விட்டால் அது நம்மையே மூடி விடும். ஆதலால், அதை நாம் அனுமதிக்கக்கூடாது. வில்லில் வந்த அம்பும் வாயில் வந்த சொல்லும் ஒரு விளைவை ஏற்படுத்தாமல் மீண்டும் திரும்பாது என்பதை நாம் உணர வேண்டும். ஒரு பள்ளியின் வளர்ச்சி அதன் கல்வியிலும் மட்டும் அல்ல, மாறாக அப்பள்ளியிலும் அப்பள்ளியைச் சுற்றிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களும் சொற்களும் தான் என்பதை மறுத்து விட முடியாது.
                             பெற்றோர்களானாலும் சரி ஆசிரியர்களானாலும் சரி யார் யாரைக் குறைச் சொன்னாலும் பாதிப்பு அந்த பள்ளிக்குத் தான். பள்ளியைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைப் பற்றியும் குறை சொல்லும் 10 பெற்றோர்களைப் பற்றி ஆய்வு செய்தால், அதில் 8 பெற்றோர்கள் அவர் தம் பிள்ளைகள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியே இருப்பார்கள். அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் இருப்பது போல் தோன்றும். அவர்கள் பேச்சில் நியாயம் இருந்தாலும், அவர்கள் நிறையவே குறை சொல்பவர்களாக இருப்பார்கள்.
                             உண்மையைக் கூறப்போனால் அவர்கள் கெட்டவர்கள் கிடையாது. பேச்சும் செயலும் வன்மையாக இருக்கலாம், ஆனால், இவர்கள் தன் சக்தியை குறை சொல்லும் தவறான வழியில்  பயன்படுத்தி விட்டார்கள். இவர்கள் செய்த தவற்றினால் பாதிக்கப்படுவது பள்ளி மட்டும் அல்ல, அவர்களுடைய சொந்த வாழ்வும் அவர்தம் குடும்பமும் தான். வெறும் குறைகளையே பார்த்து விட்ட இவர்களின் மனம், அதையே முழுமையாக நம்பி விடுகிறது.
                             மனம் எதை நம்பகிறதோ அது நடக்கத் தொடங்குகிறது. அதனால் தான் இவர்கள் பள்ளியிலும் சரி பள்ளி வெளியிலும் சரி எதைப் பேசினிலும் அது பிரச்சனையில் தான் போய் முடிகிறது. இக்குறை சொல்லும் பண்பு ஆசிரியர்களிடையே காணப்பட்டால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்பல பள்ளிகளில் மிகத் திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும் அப்பள்ளி சிறந்த நிலைக்கு வராததற்கு காரணம் கற்றல் கற்பித்தல் மட்டுமே என்று சொல்ல முடியாது.
                             மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் ஆசிரியர்களிடையே இக்குறை சொல்லும் பண்பு அதிகமாக காணப்படும். குறை சொல்லுகின்ற நிலையில் அங்கு எந்த சாதனைகளும் நிகழப்போவது இல்லை. பள்ளியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு இந்த குறை சொல்லும் பண்பே அடிப்படையாக அமைகின்றது.
                   ஆசிரியர்களுக்கிடையே மோதல், ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர் மற்றும் துணைத் தலைமையாசிரி யர்களுக்கிடையே மோதல், இறுதியாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மோதல். ஆக, ஒரு பள்ளியில் அதிகமாக பேசப்படுவது கருத்துகளா அல்லது குறைகளா என்பதை வைத்தே அந்த பள்ளியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அமைகின்றது.

          திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறள் நூலிலே குறை சொல்பவர்களைப் பற்றி தனியே ஒரு அதிகாரமே எழுதியிருக்கின்றார் என்றால் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புற்றீசல் போல வளரக்கூடிய இந்த குறை சொல்லும் பண்பானது நம்மை மட்டுமல்ல நாம் வாழும் சமுதாயத்தையே அழித்துவிடக்கூடிய தீய சக்தியாகும். எனவே, குறை சொல்லும் பண்பை குறைத்துவிட்டு, நிறை சொல்லும் பண்பை நிறையவே பேசிப் பழகுவோம்.