524 தலைமையாசிரியர்கள். 524
தலைமைத்துவம். 524 சிந்தனைகள். 524 சமூதாய மறுமலர்ச்சி. 524 பாதைகள்...பயணங்கள்.
ஆம், தலைமையாசிரியர் என்பது பதவி அல்ல; அஃது ஒரு தவம். ஒட்டு மொத்த சமூதாயத்தின் உரத்தக்
குரல். தலைமையாசிரியரின் பரிநாமங்கள் பற்பல. தலைவராக, ஆசிரியனாக, தந்தையாக, அண்ணனாக, நண்பனாக, நல் வழிகாட்டியாக, குருவாக, சமூதாயத் தொண்டனாக, இலட்சிய நாயகனாக, வருங்கால விடிவெள்ளியாக, இன்னும் எத்தனை எத்தைனையோ பரிநாமங்கள்.
ரோபின் ஷர்மா தனது ‘The Leader who Had No Title’ - நூலில்
தலைமைத்துவத்தில் இருக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக ஒரு கட்டவிழ்க்கிறார். தன்
பெயருக்குப் பின்னால் ஒன்றும் இல்லை என்ற தத்துவத்தை மிக அழகாக விவரிக்கிறார்.
உண்மையும் அது தான். அறுபது வயதைக் கடந்தப் பிறகு தான் நாம் யாரென்று நமக்குப் புரிய வரும். அந்த கணப்
பொழுதில் இந்தச் சமூதாயம் நம்மை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே
இன்றைய வாழ்க்கை அமைகிறது. பீடு நடை போடும் தலைமையாசிரியர்களே! நிச்சயம் நம்
நாடும் இந்தச் சமூதாயமும் உங்களை நாடிக் கிடக்கிறது. சீன தேசத்து அறிஞர் லௌ சு
அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மக்களை வழி
நடத்த வேண்டும் என்றால் அவர்கள் பக்கத்திலேயே நீங்களும் செல்ல வேண்டும். தங்களையே
நம்பிக் கொண்டிருக்கும் 10,000
தமிழாசிரியர்களின் ஒட்டு மொத்த அவாவும் அதுவே.
மாணவர்களின் தனித் திறமையை
அறிய பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களின் திறமையை அறிய பள்ளியில் தலைமையாசிரியர் மட்டும் தானே
இருக்கிறார். வழிகாட்ட வேண்டியவர் நீங்கள் மட்டும் தானே! கம்ப இராமாயணத்தில் வரும்
அனுமனின் உண்மை சொரூபத்தை எடுத்துக் கூறிய ஜாம்பவான் போல் நூற்றுக் கணக்கான
தலைமையாசிரியர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஜாம்பவான்
எடுத்துக் கூறாவிடில் அனுமன் ஒரு சாதாரண வானரமாகவே வாழ்ந்திருக்கக் கூடும்.
ஆசிரியர்களும் அப்படித் தான். அவர்களைச் சாதாரண ஆசிரியர்களாக ஆக்குவதும், அசாதாரணமான ஆசிரியர்களாக ஆக்குவதும் ஜாம்பவான் போன்ற
தலைமையாசிரியர்களே!
பீடு நடை போடும்
தலைமையாசிரியர்கள் நிச்சயம் யாருக்கும் கேடு விளைத்ததில்லை. அவர்கள் நாடுவது அன்பு
வழி. அதிகாரம் தோற்றுப் போகும் என்பது அவர்களுக்குத் தெரிந்த வழி. சீடன் தயாராக
இருக்கும் பொழுதுதான் குரு தோன்றுவார். ஆசிரியர்கள் தயாராக இருந்தால் தான்
இலட்சியத் தலைமையாசிரியர் தோன்றுவார். ‘தோன்றின்
புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குறளின் வெளிப்பாட்டிற்கேற்ப பீடு நடை போடும் தலைமையாசிரியர்களுக்கு
நாம் தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.
மிகச் சிறப்பாகப் பணி செய்வதற்கு ஒரு பெரிய
பதவியில் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. இக்கருத்தினைச் சிந்தனைப்
புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் மிக அழகாக எடுத்தியம்புகிறார். ‘ஒரு மனிதனின் வாழ்க்கைப் பணி, தெருவைச் சுத்தம் செய்யும் தொழிலாக இருந்தால், மைக்கல் ஆஞ்சலோ எவ்வாறு ஓவியம் தீட்டினாரோ, அல்லது பீத்தோவன் எவ்வாறு இசையமைத்தாரோ அல்லது ஷேக்ஸ்பியர் எவ்வாறு கவிதை
எழுதினாரோ அதுபோல அவர் தெருக்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.’
நாட்டின் கல்வி வளர்ச்சியில்
ஏற்பட்டிருக்கும் அதிவேக உருமாற்றத்திட்டம் காலத்தின் கட்டாயம். இவ்வுருமாற்றத்
திட்டமானது ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம், இவையணைத்தும் தேசிய கல்வித் தத்துவத்தின் எதிரொலியே தவிர வேறொன்றும் இல்லை.
ஆக, தேசிய கல்வித் தத்துவமே நமக்கு
அடிப்படை, ஆதாரம்...எல்லாம். தேசிய கல்வித்
தத்துவத்தை உணர்ந்த தலைமையாசிரியர்களால் மட்டுமே எதிகாலச் சவால்களை எதிர் கொள்ள
முடியும். ‘Turbulent
times build great leaders’ என்று எழுத்தாளர் ரோபின் ஷர்மா மிக அழகாக கூறுவார். சவால்களும் சோதனைகளும்
நிறைந்த காலத்தில் மட்டுமே சிறந்த தலைவர்களைக் காண முடியும். அதுபோலவே, சவால்கள் நிறைந்த இக்காலக் கட்டத்தில் ஆற்றல் மிகுந்த
தலைமையாசிரியர்களைக் காண முடிகிறது.
‘துருப்புகளை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டால், தளபதி களத்திற்கு இறங்கத் தேவை இல்லை’ என்று பிரிட்டிஷ் அரச தந்திரி, இரண்டாம் உலகப் போரின் கிங் மேக்கர், ஹிட்லரின் ஆதிக்கத்தை முறியடித்த வின்ஸ்டன்
சர்ச்சில் உரைத்ததை சற்றே நினைவுக் கூற விரும்புகிறேன். ஆசிரியர்களையும்
துருப்புகளாக உருவாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்புகளைக் கொடுத்து விட்டால், தலைமையாசியரும் வின்ஸ்டன் சர்ச்சிலும் சமமே.
ஹிட்லரிடம் இல்லாத அதிகாராமா? இறுதியில் அவர்
தோற்றுப் போனதை இவ்வுலகமே பார்த்தது. அதிகாரங்கள் தோற்றுப் போகும் என்பதற்கு
இதைவிட சான்று ஒன்று இருக்குமா?
‘இனி வெல்வதற்கு உலகில்லையே’ என்று கொக்கறித்த
மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் கதையை இவ்வுலகமே அறியும். தான் இறந்தப் பிறகு தன் இரு
கைகளையும் வெளியில் தொங்குமாறு கட்டளை இட்டிருந்தார். உலகையே ஆண்டிருந்தாலும்
போகும் போது ஒன்றும் இல்லையே என்று உலகுக்கு எடுத்தியம்புகிறார். பதவியும்
அப்படித்தான். அதனால் தான் அது பதவி அல்ல தவம் என்றேன். தமிழர்களின் பெருமை
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது. அந்த
தொடர்ச்சியின் உருவாக்கம் தான் பீடு நடை போடும் தலைமையாசிரியர்களின் பயணம். தளம்
மாறலாம், தடம் மாறக்கூடாது. தலை
வணங்குகின்றேன் தலைமையாசிரியர்களுக்கு.