எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

21-ஆம் நூற்றாண்டு பெண்களுக்கு உரியது...


                    பெண்ணாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் உரைத்தது  இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதிலும், ஒரு பெண் ஆசிரியையாகப் பிறப்பெடுப்பது பெரும் புண்ணியம். பெண்களைப் பற்றி உரைக்க நிச்சயம் இக்களம் போதாது. இருப்பினும் சில உண்மைகளை எடுத்துரைப்பது என் கடமையாகும்.

                   21-ஆம் நூற்றாண்டு பெண்களுக்கு உரியது என்று இந்தியாவின் இந்து இதழின் நிர்வாகப் பொறுப்பாசிரியர் திரு.என்.முரலி அவர்கள் முறசொலித்திருப்பது சிந்திக்கத்தக்கது. ஐக்கிய நாட்டுக் கழகத்தின்  பெண்களுக்கான உயர் அதிகாரி மிக்ஷேல் பேச்சலல் அவர்களும் இக்கருத்தினையே வலியுறுத்திக் கூறியிருப்பது மேலும் உறுதியாகிறது. ஓர் உண்மையைப் பகிரங்கமாகக் கூறும் பொழுது  அதனை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். பெண்களிடம் உள்ள உண்மையான ஆக்கச் சக்தியினை எடுத்துரைக்க தைரியம் வேண்டும். கம்பராமாயணத்தில் ஹனுமான் தன் உண்மையான சக்திநிலைத் தெரியாமல் இருந்ததும், பின் ஜாம்பவான் விவரித்தப் பின்னரே ஹனுமான் வீறு கொண்டு எழுந்ததாகக் கூறப்படுகிறது.

                    அதேப் போல், மலேசியாவில் இருக்கும் 10,000 தமிழாசிரியர்களில் 60% மேற்பட்டவர்கள் பெண் ஆசிரியர்களாவர். தமிழ்ப்பள்ளிகள் மீட்சிப் பெற இது போதாதா? மாணவர்கள் மிளிர வேண்டுமானால், ஆசிரியர்கள் துளிர வேண்டும். பள்ளிக்கூடம் ஒளிர வேண்டுமானால், ஆசிரியர்கள் துள்ளி எழ வேண்டும். நான் போற்றும் சகோதர சகோதரிகளுக்கு இக்கட்டுரை நிச்சயம் புத்துணர்வு அளிக்கும். தமிழ்ப்பள்ளியில் பெண்ணாசிரியர்களின் ஆதிக்கம் இன்னும் முழுமைப் பெற வில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தர நிலையை மீட்டெடுக்க இது தான் தக்கத் தருணம். மீட்சிப் பெற மீண்டு விடுங்கள்.இனி ஆட்சி உங்களுடையது தான். நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ,சொல்லடி சிவசக்தி என்று பாரதியார் மொழிந்ததை சற்று உற்றுக் கேளுங்கள்.

                   2015-ஆம் ஆண்டின் உலகத்தின் சிறந்த மனிதராக ஜெர்மன் நாட்டு சென்சலர் ஏஞ்சலா மார்க்கெல் (பெண்) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்த போதிலும் ஒரு பெண் சாதிக்கும் பொழுது  நீங்களும் சாதிக்கலாமே? காரணத்தைக் கூறிக் கொண்டிருந்தால் காரியம் ஏது? உடல் பலத்தை விட மன பலமே பெரிது. பள்ளியில் பூத்துக் குழுங்குவது வெறும் பூக்கள் மட்டும் அல்ல, ஆசிரியைகளின் புன்னகையும் தான். பாரதிக் கண்ட புதுமைப் பெண் சமூதாயத்தில் மட்டுமல்ல, பள்ளியின் வளர்ச்சிக்கும் தான். தங்களின் அரவணைப்பிற்காகக் காத்துக் கிடக்கிறது தாய்ப்பள்ளி...தமிழ்ப்பள்ளி.

                   பள்ளியிலே நடக்கின்றப் பிரச்சனைகள், குறைக்கூறல்கள், மன உலைச்சல்கள், வேலைபழு இன்னும் எதுவாக இருந்தாலும் அவை யாவும் கடந்து போகும் ஒன்று. எதுவுமே நிரந்தரமல்ல. வெறும் 18 வயது நிரம்பிய பாக்கிஸ்தான் பெண் யுசோப்சாய் மலாலா. இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதை மறக்க முடியுமா? கழுத்தில் சுடப்பட்டு, உயிருக்குப் போராடி உலகத்தை வென்ற அந்தப் பெண்ணைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் தூர்ந்துப் போகும். கல்விப் புரட்சி செய்த அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்க உலகமே காத்துக்கிடக்கிறது. பெண் ஆசிரியர்களே, உங்களின் சிந்தனையை வரட்சியாக்கி விடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், பெண்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி.

                   இக்கட்டுரை பெண்களின் ஆளுமையை வெளிக் கொணர எழுதப்பட்டது. அறியாமையை வெளிக்காட்ட அல்ல. பெரும்பாலான ஆசிரியர்கள் ஏதோ வந்தோம்,வெந்தோம்,நொந்தோம் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குக் இக்கட்டுரை ஓர் அருமருந்தாகட்டும். தமிழப்பள்ளியைப் பொருத்த மட்டில் 2க பிரச்சனை இருக்கிறது. ஒன்று, எல்லாவற்றுக்கும் காரணம் சொல்லும் பண்பு. இரண்டாவது, எப்பொழுதுமே குறைக்கூறும் பண்பு. இவற்றை ஆராய்வது என் நோக்கமல்ல. ஆனால், இவற்றிலிருந்து எப்படி மீள்வது? நம் சமகாலத்தில் வாழ்ந்து வரும் ஒரு பெண் போராட்டவாதியை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நம் அண்டை நாடான மியன்மார் நாட்டின் போராளி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மற்றும் வருங்கால பிரதமர் ஆங் சான் சூகியி.
                   அந்த அம்மையின் போராட்டத்தில் நம் பிரச்சனைகள் யாவும்

தூசாகிவிடும். பேசாமல் சாதித்து விடுங்கள். நாளைய சரித்திரம் உங்கள்

 பெயரையும் உச்சரிக்கட்டும். ஆசிரியைத் திருமதி.வாணிஸ்ரீ    தேசிய வகை

 ஜாலான் கலிடி, முவார், ஜொகூர் தமிழ்ப்ள்ளியைச் சேர்ந்தவர். 148 நாடுகளைச்

  சேர்ந்த 8,000 ஆசிரியர்களை வென்று 1 மில்லியன் அமெரிக்க டாலரைத்

 தட்டிச் செல்ல காத்திருக்கின்றார். அடுத்த ஆண்டு மார்ச் 16 நாளன்று

 முடிவுகள் வெளிவர உள்ளன. கற்றல் கற்பித்தலில் அவர் சாதித்த

 விடயத்தைக கொஞ்சம் செவிசாய்த்துப் பாருங்கள். நீங்களும்

 சாதனையாளராக உருவாகலாம். ஆசிரியைத் திருமதி.வாணிஸ்ரீ அவர்களை

 அனைவரும் வாழ்த்துவோம். உலகத் தரத்தை நோக்கி தமிழ்ப்பள்ளிகள்

என்கிற வாசகம் உங்களால் நிஜமாகட்டும். கதவைத் திற காற்று

வரும்,மனதைத் திற மாற்றம் வரும் என்பார்கள். 21-ஆம் நூற்றாண்டை

 உங்களுடையதாக ஆக்கிக் கொள்ள இன்னும் என்ன பாக்கி இருக்கிறது? 

வாக்கியத்தை இத்தோடு முடிக்கின்றேன், வாழ்த்துகள் வானமெங்கும்

 பொழியட்டும்.