எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 9 ஜூலை, 2016

வணக்கம் மாணவ பிரம்மாக்களே...


                     பள்ளியின் சபை நேரத்தின் போது வணக்கம் மாணவ பிரம்மாக்களே என்று மாணவர்களைப் பார்த்து வணக்கம் சொல்வேன். என்னிடம் ஒரு மாணவன், ‘ஏன் எங்களைப் பார்த்து பிரம்மாக்கள் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு நான் கொடுத்த பதிலே இக்கட்டுரையின் நோக்கம். அந்த பதிலைக் கேட்டவுடன் அவருடைய முகத்திலே மலர்ந்தப் புன்னகை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவருடைய முகத்திலே பிரம்மாவைப் பார்த்தேன். அன்று தான் புரிந்தது பிரம்மா நம்முடன் தான் இருக்கிறார் என்று.

                ஐயா, பிரம்மாவுக்கு இவ்வுலகில் கோயில் இல்லை. காரணம் எதுவாக இருக்கலாம். பிரம்மா படைத்தல் தொழிலைச் செய்கிறார். படைத்தல் அல்லது உருவாக்குதல். ஆக்கச்சக்தி அதிகம் உடையவர். அதே படைத்தலும், உருவாக்குதலும், ஆக்கச்சக்தியும் உன்னிடமும் உள்ளது. அதனால் தான் உன்னை பிரம்மா என்று அழைத்தேன் என்றேன். உண்மையில் பிரம்மாவைத் நான் மாணவர்களிடத்தில் பார்க்கின்றேன். மனிதனும் தெய்வமாகலாம் என்பதைக் கேட்டிருக்கிறோம். தெய்வத்தை வெளியில் சென்று தேட வேண்டாம். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்று சித்தர்கள் பாடியிருக்கிறார்கள். பிரபஞ்ச சக்கியே மனிதனுக்குள்ளே உறைந்து கிடக்கிறது என்பதுதானே அவர்களின் வாக்கு.

                 பிரபஞ்ச சக்தியோடு நமக்குள்ள தொடர்பினை எடுத்துக் காட்டுவதும், பிரபஞ்ச சக்தியை நம்முடைய பரிணாம வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தெரிந்து கொள்வதும்தான் ஆன்மீகமாகும். அதே ஆன்மீகத்தைத் தான் நானும் பயன்படுத்துகின்றேன். சிந்தனையாளர்களே, அன்புகூர்ந்து கோயிலுக்காக பிரம்மாவைத் தேடாதீர்கள்; பிரம்மாவுக்காக மாணவர்களைத் தேடுங்கள். பழங்களைக் கொட்டிவிட்டுத் தேடாதீர்கள் சிதறி விடும். குவித்து விட்டுத் தேடுங்கள் இரு கைகளில் அள்ளிவிடலாம். மாணவர்களும் அப்படித்தான். சிதற விட்டால் சிதைந்து விடுவார்கள். குவியலாக இருக்கட்டும், கரை சேர்க்க நம் இரு கைகள் இருக்கிறது.

                ஆயிரம் கனவுகளோடு பறந்து வரும் அந்த மாணவர்களுக்கு நாம் தான் ஆதாரம். பார்க்கத் தெரிந்தால் பார்க்குமிடம் எல்லாம் பல்கலைக்கழகம் என்பார்கள். மாணவர்களை மாணவர்களாகப் பார்க்காதீர்கள். பிரம்மாவாகப் பாருங்கள். இப்பிரபஞ்சம் பல உண்மைகளை நமக்குப் புரிய வைக்கும். பருந்து குஞ்சு ஒன்று கோழிக் குடுப்பத்தில் சேர்ந்து வாழ்ந்த கதை தான் நம் மாணவர்களின் கதையும். தன் சக்தியை அறியாத அவர்களுக்கு நாம் தான் அரிய சக்தி. உணர வைத்து உயிர்க் கொடுக்கும் ஆற்றல் மிகுந்த ஆசிரியர்களை அடையாளம் கூறுங்கள்.

           அவர்கள் தான் பள்ளியின் சொத்து. தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிற்பிக்கும் ஓர் ஆசிரியருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. சிற்பி ஒரு சிலையைச் செதுக்கும் பொழுது தேவையற்றக் கல்லை அகற்றுகிறான். ஒரு சிலை உருவாகிறது. ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் உள்ளக் குறைகளைக் கலையும் பொழுது ஒரு சிறந்த மாணவன் உருவாகின்றான். கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பர்கள். வேறும் கல்லைப் பார்த்தால் நாய் நம் கண்ணிற்குத் தெரியாது. நாயை மட்டும் பார்த்தால் நிச்சயமாக கல் நம் கண்ணுக்குத் தெரியாது. மாணவனாகப் பார்த்தால் அவர்கள் திறமை நமக்கு தெரியாது. பிரம்மாவாகப் பார்த்தால் திறமையே அவர்கள் தான் என்று புரியும்.

                    ஒரு டாக்டர் தெடஸ்கோப்பைக் கையிலெடுத்தால் அது நோயாளிக்காக, ஒரு போலீஸ் துப்பாக்கியைக் கையிலெடுத்தால் அது திருடனுக்காக, ஒரு வக்கீல் கருப்புக் கோர்டைக் கையிலெடுத்தால் இது குற்றவாளிக்காக, ஆனால் ஒர் ஆசிரியர் ரெக்காட்புக்கைக் கையிலெடுத்தால் அது யாருக்காக என்று தெளிவாகக் கூறினால் நீங்கள் சிறந்த ஆசிரியர்! தமிழ் ஆசிரியம் வாழ வேண்டுமாயின் தெளிந்த சிந்தனை வேண்டும். வாக்கினிலே தெளிவு வேண்டும் என்பார் பாரதியார். அந்தத் தெளிவு இருந்தால் தான் பிரம்மாக்கள் நம் கண் முன் தெரிவார்கள். அப்படி இல்லையென்றால், காலம் முழுதும் பிரம்மா நமக்கு ஒர் கனா தான்.

                   பிரச்சனைகளைப் பற்றிப் பேசினால் நீங்கள் கடந்த காலம், வழிமுறைகளைப் பற்றிப் பேசினால் நீங்கள் நிகழ் காலம், மாற்றங்களைப் பற்றிப் பேசினால் நீங்கள் தான் எதிர் காலம். எதிர் காலம் வாழ மாற்றிச் சிந்தியுங்கள். நம் நடு மூளைப் பகுதியில் பிட்யூட்ரி கிலாண்டு என்கிற சுரப்பி ஒன்று இருக்கிறது. அங்கு தான் ஆழ்மனமும் இறை மனமும் மறைத்து வைக்கப் பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? அது நம் நடு நெற்றிக்குப் பின்னால் தான் அமைந்துள்ளது. அதனால் தான் நெற்றிக் கண் தத்துவமும், நெற்றியில் திருநீறு மற்றும் பொட்டு வைக்கும் பழக்கம் உள்ளது. இவ்வளவு அரிய பெரிய அறிவியல் சார்ந்த தத்துவங்கள் நிறைந்து  கிடக்கின்றன. அதனால் தான் பிரம்மாவுக்குக் கோயில் இல்லை என்பதை உணர்வீர்களா?


                கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பார்கள். வார்த்தைகளில் பேசுவதை விட அனுபவித்துப் பாருங்கள். மாற்று உலகம் மாணவர்களுக்கு மட்டும் அல்ல, ஆசிரியர்களுக்கும் தான்.