தனிமனித சிந்தனை
மாற்றமே சமூதாய மாற்றம். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் சமூதாயமே சாதிக்க முடியும்.
நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் கொடுக்கப்பட்டது காலத்தின் கட்டாயம் அல்ல. மாறாக, அது நமக்கு ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரை
வாசிக்கும் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். சிந்திக்கச் சில மணித்துளிகள்
எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் வாழ தமிழ்ப்பள்ளி வாழ தமிழர்கள் வாழ தவமாய்
தவமிருந்துப் பெற்ற நம் தமிழ்ப்பள்ளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவை. அங்கு படும்
காலடிகள் மிதிக்கப்பட்டவை அல்ல,
விதைக்கப்பட்டவை. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் அர்ச்சனைக்கு உரியவை.
பிரச்சனைக்கு உரியவை அல்ல. 524 தமிழ்க் கோவில்கள் தழைத்தோங்க ஒன்றிணைவோம்.
தரணியில் தலைநிமிர தமிழ்ப்பள்ளி நமக்கு அரிய வாய்ப்பு. ஒரே வாய்ப்பு.
சரித்திரம் எங்கு
நடக்கிறது என்பது முக்கியமல்ல. அதில் கிடைக்கும் செய்தி தான் முக்கியம். 16-ஆம்
நூற்றாண்டில் நடந்த சம்பவம். 1519-இல் ஹெர்னான்டோ கொர்தெக்ஸ் என்ற ஸ்பேயின் நாட்டு
தளபதி மெஸ்ஸிக்கோ நாட்டைப் படையெடுத்து கடற்கரை ஓரத்தில் தரையிறங்கினான். 5
கப்பல்களில் வந்து இறங்கிய அவர்கள் தொடர்ந்து மெஸ்ஸிக்கோ நாட்டு போர் வீரர்களுடன்
போரிட்டனர். மாதங்கள் சில கடந்த போர் முடிவுக்கு வர வில்லை. தளபதியும் சளிக்க
வில்லை. ஆனால், போர் வீரர்கள் சோர்ந்து
விட்டனர். ஒரு பக்கம் பசிக் கொடுமை. காரணம் கொண்டு வந்த உணவு முடியும் தருவாயில்
இருந்தது. மறுபக்கம் கடுமையான நோயின் தாக்கம்.
வீரர்கள் மடிந்துக்
கொண்டே போனார்கள். இடிந்து விழ தளபதிக்கு மனமில்லை. இருக்கின்ற வீரர்களை அழைத்து
கடிந்து கூறினார். அந்த வார்த்தைகளை தான் இன்று அவரைப் பற்றி பேச வைத்தது. சில
வீரர்களை அழைத்து தாம் வந்த 5 கப்பல்களையும் எரிக்கச் சொல்லி விட்டார். கப்பல்கள்
எரியும் அந்த நேரத்தில் வந்து விழும் வார்த்தைகளைக் கொஞ்சம் கேளுங்கள். ‘ வீரர்களே! இனி நாம் திரும்பிப் போக முடியாது. வேறு வழியே
இல்லை. போரிட்டுத் தான் ஆக வேண்டும். வென்றால் நமக்கு நாடு. இல்லையென்றால்
சுடுகாடு.’ அவ்வளவு தான். சோர்ந்து விட்ட ஒரு படை
மெஸ்ஸிக்கோவை வென்றது வரலாறு. இந்த வரிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நமக்கும் வேறு வழியில்லை. தமிழ்ப்பள்ளி தான் நமக்கு கடைசி வாய்ப்பு. நிச்சயம்
வென்றெடுக்கலாம், ஒன்றுதிரண்டால். மாண்புரச் செய்யலாம்,மரியாதைக் கொடுத்தால். ஆனால், பள்ளியில் நடப்பது
என்ன?
நடக்கக்கூடாத எல்லாப் பிரச்சனையும் நடக்கின்றது.
பிரச்சனையைப் பற்றிப்
பேசுவது என் நோக்கம் அல்ல. ஆனால், பள்ளியில்
என்னப் பேச வேண்டும் என்பதே என் நோக்கம். பள்ளி என்பது ஒரு கோயில். அங்கு எது
திரும்பத் திரும்பப் பேசப் படுகிறதோ அது மந்திரமாக மாறி எதிரொலிக்கும்.
பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி எதை விதைக்கிறார்களோ அது தான் முளைக்கும்.
இது நம் உபநிடதத்தின் சாரம். ஒரு பள்ளிக் கூடம் வெற்றியடைய உழைப்பு நிச்சயம்.
உண்மை. ஆனால், வேறு சில காரணங்களும் உள்ளன. ஒரு பள்ளியில்
நேர்மறைச் சிந்தனை அதிகம் பேசப்படுகிறதா அல்லது எதிர்மறைச் சிந்தனைப்
பேசப்படுகிறதா என்பதை வைத்தே அப்பளியின் வெற்றி தோல்வியைக் கணித்து விடலாம்.
ஆசிரியர்களுக்கிடையே
நல்ல உறவு இல்லாதது, தலைமையாசிரியர்
பிரச்சனை உள்ள பள்ளியை உற்று நோக்குங்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கம் இழுபரி, அடிக்கடி பெற்றோர்கள் பள்ளியில் வசைப்பாடுவது,
ஆசிரியர்களை மோசமாகத் திட்டுவது போன்ற பள்ளியையும் கவனியுங்கள். நிச்சயம் உண்மை
உங்களுக்குப் புரியும். சொன்ன வார்த்தைகள், சொல்லிய இடம்
நிரம்ப முக்கியம். சொல்லியவர்களுக்கு நிச்சயம் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
உளவியலில் சொல்லியவர்களுக்கு 70% பாதிப்பை எற்படுத்தும் என்று கூறுகிறது.
வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. பள்ளியைப் பற்றி அதிகம் குறை சொல்லும்
பெற்றோரைக் கவனியுங்கள். அவர்களின் பிள்ளைகள் நிச்சயம் கல்வியில் பிரச்சனை
இருக்கும். இது சாபம் அல்ல. மறுக்க முடியாத உண்மை.
பள்ளியிலே பூத்துக்
குளுங்குவது பூக்கள் மட்டும் அல்ல, நம் சொல்லாடலும் தான். அதனால் தான் அர்ச்சனைக்கு உரிய வார்த்தைகளைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். பிரச்சனையான வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். அது உங்களை வாழ வைக்கும். ஒரு சிறந்த மாணவன்
6எ 1பி எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
நிச்சயம் எங்காவது தவறு ஏற்பட்டிருக்கும். அந்தத் தவறுகளில் ஏன் நான் சொல்லும்
தவறும் இருக்கக்கூடாது. சும்மா எதுவும் நடக்காது. இதைத் தான் காரண காரிய உலகம்
என்பார்கள். எந்தச் சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களோ அது
மந்திரமாகிறது. சொல்லின் தன்மைக்கு நல்லது கெட்டது தெரியாது. உரைக்கப்பட்டச் சொல்
விதைக்கப்படுகிறது.
வீண் வாதம்
வேண்டாம். தன் வாதத்தையும் பிடிவாதத்தையும் தள்ளி வைத்து விட்டு, துள்ளி எழ கற்றுக் கொள்ளுங்கள். நம் பள்ளி நம் பிள்ளைகள் என்ற
எண்ணத்துடன் பள்ளியில் நுழையுங்கள். உங்கள் பிள்ளைகளைக் கடைசியாக விட்டுச்
செல்லாதீர்கள், கடைசி வரைக்கும் விட்டுச் செல்லுங்கள்.
வார்த்தைகள் உங்களை வாழ வைக்கும். வாழ்ந்து விடுங்கள்.