தை
மாதம் தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் ஒட்டுமொத்த கௌரவம். உலகத்திற்குப் பறை
சாற்றும் நாளும் இதுவே. உலகத் தமிழர்களுக்கு ஒர் உன்னதமான நாள். பொங்கலைப் பற்றி
விவரிக்கும் கட்டுரையல்ல இது. இனி பொங்கி வரப்போவது மனப்பொங்கலாக இருக்க வேண்டும்
என்பதற்காகவே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்றப் பழமொழி
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், தமிழர்களில் விழித்துக் கொண்டோர் எத்தனை பேர் என்று வினவினால் அது கேள்விக்
குறியே.
பொங்கலன்று
மூன்று கரும்புகளைக் கட்டி அதன் நடுவே பொங்கலிடுவார்கள். அந்த மூன்று கரும்புகளை
முக்கோண வடிவில் கட்டுவதைக் கவனியுங்கள். அந்த முக்கோண வடிவில் தான் இருக்கிறது
மனப்பொங்கல். மூன்று முனையில் ஒரு முனை தமிழர்களின் இனமான உணர்வும், இன்னொரு முனையில் நன்றி உணர்வும், கடைசி முனையில் ஒற்றுமை உணர்வும் ஒரு சேரக்
கட்டப்படுகிறது. சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை நமக்குத் தெரிந்தவை.
அக்கட்டுரையின் வாயிலாக மனப்பொங்கல் என்றப் புதியப் பொங்கலை அறிமுகம் செய்வதில்
பெருமைக் கொள்கிறேன்.
இத்தைத்திருநாளில்
ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் மீட்சிப் பெறும் எண்ணங்கள் உதிர்க்க வேண்டும்.
எதிர்காலத்தை மனதில் கொண்டு இனமானத்தில் உறுதியாய் நின்று ஜெயிக்கும் படியான
சமூகமான உருவெடுக்க வேண்டும். குறுகியச் சிந்தனையைப் புறந்தள்ளி விட்டு, தூர நோக்குச் சிந்தனையை மனதிலே விதைக்க முயல
வேண்டும். புறநானூற்றுப் பாடலில் கணியன்
பூங்குன்றனார், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று பாடினாரே அந்தத் திறன் மீட்டெடுக்கப்பட
வேண்டும். தமிழர்களின் பெருமைகளை நாமே சொல்லிக் கொண்டிருப்பதில் பெருமை ஒன்றும்
இல்லை. நமக்கான அடையாளத்தை நாமே உருவாக்க வேண்டும். இது நிச்சயமாக தனியாளாக
முடியாது. இனமானத் தமிழர்கள் இனியும் தாமதிக்கக் கூடாது.
‘நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி’ என்று பாரதியார் அன்றே விலாசியிருக்கிறார். உலகத் தமிழர்களின் எழுச்சியாக
விளங்கிய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் ஐயா மறைந்து விட்டார். அடுத்த எழுச்சிக்காக
யாரிடம் நாம் செல்வது? பலநூறு ஆண்டுகளாகவே தமிழினம்
சிதைக்கப்பட்டுவிட்டது. சிதறி விட்ட இந்தச் சமூதாயத்தின் நம்பிக்கை நாயகன் யார்? ஒற்றுமைக்கும் தமிழனுக்கும் வெகு தூரம் ஆகி விட்டது
என்றால் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டம். தன் சொந்த இனத்தையே கொல்லுகின்ற
காட்டுமிராண்டித்தனம் எங்கிருந்து வந்தது?
உலகத்திற்கே நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்று மேடை போட்டுச் சொல்லலாம்.
ஆனால், நம் இனத்தில் நாகரிகமற்ற
நடத்தைகளைப் பட்டியலிட்டால் அதுவே குறையாகிவிடும். ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று தெய்வப் புலவர் சொல்லியதைச் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். நம் இனத்தின் பெருமைகளுக்கும் சிறுமைகளுக்கும் வேற்று இனத்தவர்
காரணமன்று. நாம் அதற்கு காரணம் என்று கல்லால் அடித்ததுப் மொழிகின்றார்.
ஒற்றுமை
தான் ஓர் இனத்தின் உயிர்நாடி. அதை இழந்த எந்தச் சமூகமும் உருப்பட்டதாகச் சரித்திரமே
இல்லை. பொங்கி வரும் இந்நந்நாளில் ஒற்றுமையை இணைத்துக் கொண்டால் இனிக்கும் நாளாக
அமையும். இல்லையென்றால் தமிழினத்திற்கு இது சோதனைக் காலம் தான். பழமைகளையேப்
புகுத்திக் கொண்டிருக்கும் பழமைவாதிகளுக்கு வரும் இந்தப் போகிப் பண்டிகைக்கு விடை
கொடுத்து விடுங்கள். தரணியைப் புரட்டிப் போடும் தமிழனுக்கு நாம் தலைசாய்ப்போம்.
ஓர்
இனம் தாழ்ந்துப் போவதற்கு காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், உயரே பறப்பதற்கு பரந்த மனம் வேண்டும். எதையுமே
தாழ்த்திப் பேசுகின்ற இனம் எப்படி உயர்வடையும்? ஆஸ்ரோ தமிழ்ச் செய்திகளைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள். அதில் வரும் 90%
செய்திகள் குறை காண்பவையே. அது நிஜமாகக் கூட இருக்கலாம். ஆனால், குறையையே செய்தியாகக் கொண்டால் எப்படி சமூகம்
பயன்படும் என்று தெரிய வில்லை? குறை சொன்னச்
சமூதாயம் கறை கண்டதில்லை. நன்றி பாராட்டும் சமூதாயம் உயர்வடைவது உறுதி. நாம் மலேசியாவில்
வாழ்வது மிகப் பெரியப் புண்ணியம். அதுவும் தமிழோடு வாழ்வது பெரும் பாக்கியம்.
குறைகளைப் பேசினால் நிறைகள் நமக்குத் தெரியாது. நிறைகளை நிறையவே பேச வேண்டும்.
தாழ்த்திப்
பேசுவதை தவிர்த்து விட்டு வாழ்த்திப் பேசுவோம். இனி வரும் சமூதாயம் வாழ
வேண்டுமாயின் தைப்பொங்களோடு இந்த மனப்பொங்கலையும் இணைத்துக் கொள்ளுங்கள். இனமானத்
தமிழன் வீறு கொண்டு எழுந்து விட்டான் என்றச் செய்தி எட்டுத்திக்கும் பரவ வேண்டும்.
ஒற்றுமைத் தமிழன் ஓங்கி விட்டான் என்கிறச் செய்தி உலக வானில் தலைப்புச் செய்தியாக
வெளிவர வேண்டும். தமிழர்களால் உலகம் பெருமைக் கொள்கிறது என்று வாழ்த்துகள்
வானமெங்கும் பொழிய வேண்டும். ஒவ்வோர் வீட்டிலும் சூரியப் பொங்கல் பொங்கும் பொழுது
ஒட்டுமொத்தத் தமிழர்கள் வீட்டிலும் மனப்பொங்கல் பொங்கி வழிய வேண்டும். கோடானக்
கோடியின் ஒரே சாட்சியாகக் விளங்கிக் கொண்டிருக்கும் சூரியபகவானின் ஆசீர்வாதத்தோடு
இனி வரும் காலம் தமிழர்களின் பொற்காலம் என்றுரைப்போம். உலகத்துக்கும்
முரசொலிப்போம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.