எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 9 ஜூலை, 2016

வாசித்துப் பார் வானம் வசப்படும்


                   வாசிப்பு என்பது ஓர் ஆன்மாவின் இராகம். அது அறிவிற்கும் ஆற்றலுக்கும் உள்ள ஓர் உறவுப்பாலம். அதனால் தான் வாசிக்கின்ற சமுதாயம் உலகை ஆளும் என்பார்கள். நம் நாட்டில் சராசரி ஆண்டிற்கு ஒவ்வொரு நபரும் 2 புத்தகங்களே வாசிக்கின்றனர் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலை நாட்டினரோ ஆண்டிற்கு ஆறிலிருந்து 10 புத்தகங்கள் வரை வாசிக்கின்றனர் என்று மேலும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

                  இந்தி சுதந்திர போராட்டவாதி மாவீரன் பகத் சிங்ஙை தூக்கில் போடும் சில மணித்துளிகளுக்கு முன்பு அன்னாரின் கடைசி ஆசை என்ன என்று வினவிய போது, அவர் சொன்ன அந்த வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘நான் படிக்கும் புத்தகத்தை இன்னும் முடிக்க வில்லை; நான் படித்து முடித்தப் பிறகு என்னைத் தூக்கில் போடுங்கள்என்றார். அது அன்னாருன் கடைசி ஆசை என்றால், வாழும் காலத்திலேயே நாம் வாசித்து விட வேண்டும் அல்லவா?

                  ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்என்று ஔவை சொன்னது கல்விக்கு மட்டும் தான் என்று எண்ணிவிடலாகாது. வாசிக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று நினைத்து சிந்தித்துப் பாருங்கள், வானம் வசப்படும். அறிவும் ஆற்றலும் புத்தாக்கச் சிந்தனைக்கு அடித்தளமாகும். அவ்விரண்டையும் ஒருங்கே கொடுப்பது வாசிப்பு என்றால் அது மிகையாகாது.

                   வாசிப்பு நம் சுவாசிப்புஎன்று சொல்வார்கள் கற்றறிந்தோர். காரணம், சுவாசம் நின்று விட்டால் இறப்பது உறுதி. அது போல், வாசிப்பதை நிறுத்தி விட்டால் இறந்து விடுவது உடலல்ல;மாறாக நம் மூலையில் செயல்பாடுகள். மனிதச் சிந்தனையை உருவாக்கம் செய்வதும், உருகுழைக்கச் செய்வதும் வாசிப்புத் தன்மையினாலேயே மட்டும் தான் முடியும். அவ்வளவு முக்கியம் வாய்ந்த இந்த வாசிப்பு முறை நம் பள்ளிகளில் எப்படி நடக்கிறது என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

                   வாசிப்பை நம் சுவாசமாக மாற்றாவிட்டாலும் பராவாயில்லை. குறைந்தது நம் வாழ்வின் பண்பாடாக மாற்ற முடிந்தால், நம் சமுதாயத்தில் மிகப் பெரிய மறுமலர்ச்சியைக் காண முடியும். மேலை நாடுகளில் வாசிப்புப் பழக்கம் ஒரு பண்பாடாக கடைப்பிடிப்பதால் தான் அவர்கள் நம்மை விட 20 ஆண்டுகள் வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கிறார்கள். காலையில் வாசிப்புத் திட்டம் அமல்படுத்துவது, ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக வரச்சொல்வது, ஒரு செயல் திட்டம் இல்லாமல் வாசிப்பு நடத்துவது,வாசிப்புத் திறனைப் பற்றி முழுமையான ஆய்வுத் திட்டம் இல்லாமை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாததால் எப்படி வாசிப்புத் திட்டம் வெற்றி பெறும்?

                          வாசிப்பு என்று தனியாகப் பார்க்காமல் அதனை பண்பாட்டோடு கலந்து விட்டால் நிச்சயம் பெரிய மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம். பண்பாடு என்பது நம் வாழ்க்கையின் வெளிப்பாடு. அந்த வாழ்க்கைக்குள் மாணவர்களைக் கொண்டு வந்து விட்டால், பிறகு அவர்களின் வாசிப்பு தாகத்தைத் தீர்க்க நமக்கு புத்தகங்கள் போதாது. இணையத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாத இக்காலக்கட்டத்தில், வாசிப்பு என்ற பெயரில் திணிப்பது சரியா அல்லது வாசிப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சரியா?

                        நாம் எடுத்துக் கொடுத்து விட்டு மாணவர்களை வாசிக்கச் சொல்வதை விட, நாம் கொடுத்து விட்டு அவர்களைச் சுயமாகவே  எடுக்கச் சொல்வது எவ்வளவோ மேல். இவ்வாறு கட்டாயப் படுத்தி வாசிக்கச் சொல்வது வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே. பிறகு என்ன நடக்கிறது? இடைநிலைப்பள்ளிக்குச் சென்றவுடன் நம்முடைய மாணவர்களில் வாசிப்புத் திறனில் மட்டுமா மாற்றம் ஏற்படுகிறது; அவர்களின் நடத்தையே அல்லவா மாறிவிடுகிறது.

                       ஆக, வாசிப்பை ஒரு பண்பாடாக மாற்றினால் மட்டுமே மாற்றத்தைக் காண முடியும். அதனால் தான் சொல்கிறேன் வாசித்துப் பார் வானம் வசப்படும்.