எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 7 ஜூலை, 2016

கற்றல் என்பது கவனித்தல்

1.    கற்றல் என்பது கவனித்தல்
          ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்றப் பாடலைப் பல முறை கேட்டிருப்போம். இரசித்திருப்போம். ஆனால், அதில் கூறப்படும் வாழ்வியல் உண்மையை உணர்ந்திருப்போமா?
                       காலையில் பூத்துக் குலுங்கும் அந்தப் பூக்களைச் சென்று உற்றுப் பாருங்கள். அங்கு வரும் வண்டு ஒவ்வொரு பூக்களாகச் சென்று தேனை உருஞ்சிக் கொண்டிருக்கும். அங்கு தான் வாழ்வியல் தத்துவம் போதிக்கப்படிகிறது. ஒவ்வொரு பூக்களாகச் சென்றால் தான் தேன் என்ற அந்த உணவை ருசிக்க முடியும்.
         அதே போல்தான் பாட வேளையின் போது ஒவ்வொரு மாணவரிடம் சென்று அணுகினால் தான் கற்பித்தல் என்பது முழுமையடையும். இச்சீரிய சிந்தனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்தால் தான் பின்தங்கிய மாணவன்என்ற அடைமொழியை இல்லாமல் செய்ய முடியும்.
                     வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. வகுப்பில் ஆசிரியர் எப்படி நடந்துக் கொண்டார் என்பது தான் முக்கியம். உட்கார்ந்திருக்கும் மாணவர்களை எழச் செய்வதும் அழச் செய்வதும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களைக் கவர வேண்டும் என்றால் நிச்சயமாக ஆசிரியர்தன் இருக்கையைக் காலி செய்தாக வேண்டும்.
        ஆசிரியர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே கவனிப்பதற்கும் ஒவ்வொரு மானவரிடமும் சென்று கவனிப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உள்ளது. எப்படி அந்த வண்டு ஒவ்வொரு பூக்களாகச் சென்று வந்ததோ அதேப்போல் ஆசிரியர்களும் வகுப்பறையில் ஒவ்வொரு நிமிடமும் மாணவர்களுக்கிடையில் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் தன் தவற்றை மறைப்பதற்கு எப்படியும் நம்மை ஏமாற்றலாம். அது அவர்களின் தவறல்ல. அது அவர்களின் அறியாமை. அதனைப் போக்குவதுதான் நம் கடமை.
                             கவனித்தல் என்பது ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடம் மட்டுமல்ல. அவர்களின் தலை முடியை கவனியுங்கள்,உடைகளை கவனியுங்கள், நகத்தை கவனியுங்கள், அவர்களின் புத்தகப் பையை கவனியுங்கள், காலணியை கவனியுங்கள், பென்சில் பெட்டியை கவனியுங்கள், அவர்களின் பேச்சை கவனியுங்கள், அவர்களின் மனநிலையையும் கவனிக்க மறந்து விடாதீர்கள்.
           இவ்வளவையும் கவனிக்கின்றப் பொருமை இருந்தால் கற்றல் என்பது மிக இலகுவாகிவிடும். தான் கவனிக்கப்படுகிறோம் என்று தெரியும் பொழுது, ஒவ்வொரு மாணவரும் இயங்க முற்படுகிறார்கள். இந்த இயக்கம் தான் அவர்களின் வெற்றிக்கு முதல் படியாகிறது.
           சுண்டு விரல் பென்சிலை வைத்து எழுதும் மாணவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மாணவர்களின் புத்தகப் பையைத் திறந்து பாருங்கள், குப்பைக்கூடமாக காட்சியளிக்கும். பல அலங்கோலங்களைப் பார்க்கலாம். இது எல்லாம் எங்கள் வேலையா என்று ஆசிரியர்கள் கேட்கலாம். உண்மைதான். ஒரு மாணவனுக்கு முதல் ஆசிரியன் அவன் பெற்றோர்கள். அவர்களுக்கு  இரண்டாவது பெற்றோர்கள் நிச்சயம் ஆசிரியர்கள் தாம். அப்படிப் பார்க்கையில் ஆசிரியர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.
            ஒவ்வொரு ஆண்டுகளிலும் இந்த கவனித்தல் இருந்தால் ஆறாம் ஆண்டில் இருக்கும் மாணவர்கள் நிச்சயம் சிறந்த மாணவர்களாகத் தான் இருப்பர். ஆங்கிலத்தில் ‘The best way to learn is by practising’ என்று ஒரு வாசகம் உள்ளது. எதுவுமே பயிற்சியில் தான் உள்ளது. கவனித்தல் நாள்தோறும் பயிற்சியாகும் பொழுது அங்கு நிச்சயம் உயர்ச்சி ஏற்படுகிறது.
            இயற்கை நம்மை கவனிக்கிறது உண்மையென்றால் உடனே ஆசிரியர்கள் விழித்துக் கொள்ளுங்கள். கவனித்து விடுங்கள் அல்லது நீங்கள் கவனிக்கப் படுவீர்கள். கற்றல் கற்பித்தலின் இரகசியமும் இதுதான். மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அவர்களை நாம் கவனிக்க வேண்டும். அப்பொழுது தன் அவர்கள் நம்மை கவனிப்பார்கள்.