மலேசியக் கல்வி
உருமாற்றத்திட்டத்தில் (2013 -2025 வரை) ஐந்தாவது ஷரத்தில் ஒவ்வொரு பள்ளியிலும்
தலைமைத்துவம் நிறைந்த தலைமையாசிரியரை நியமனம் செய்தல் வேண்டும் என்று
வலியுறுத்தப்படுகிறது. என்.பி.கியு.எல் என்கிற 6 மாத கால பயிற்சியும் கட்டாயமாக்கப்பட்டு
விட்டது. இனி வரும் காலங்களில் தலைமையாசிரியர் பதவிக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை.
இள வயது தலைமைத்துவத்தை இனிமேல் காணலாம். நாட்டில் 524 தலைமையாசிரியர்கள்
வகித்துக் கொண்டிருப்பது பதவி அல்ல, தவம்.
இக்கட்டுரை
நாட்டில் உள்ள தலைமையாசிரியர்களின் பிரச்சனைகளைப் பற்றி அலசப்போவது அல்ல. தலைமையாசிரியர்களின் கடப்பாட்டினை,அவர்களின் தாக்கத்தினை ஆராயப்போகிறது. சிறு பள்ளியாக
இருந்தாலும் சரி, பெரியப் பள்ளியாக இருந்தாலும் சரி
கடமை என்பது ஒன்று தான். பள்ளியின் வெற்றி தோல்வி தலைமைத்துவத்தையே சாரும்.
தலைமையாசிரியரின் உயரிய நோக்கம் ஆசிரியர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த
வேண்டும். அத்தாக்கம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், திறமை மேம்பாட்டிலும், பெற்றோர்களின்
நம்பிக்கையின் வெளிப்பாட்டிலும் தென்பட வேண்டும். சமீபத்தில் வெளியான ‘எவரஸ்டு’
என்கிற ஆங்கிலப் படத்தைத் தயவு செய்து பார்த்து விடுங்கள். அது படம் அல்ல,பாடம். மலையேறும் போராட்டத்தில் 9 பெயரின் உயிரைக்
குடித்த உண்மைச் சம்பவம் அது.
எவரஸ்டு
குழுவின் தலைவர் எடுத்தத் தவறான முடிவினால் 9 மலையேறிகளின் உயிர் பரிதாபமாகப்
பிரிந்தது. வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடைந்திருந்தாலும் சூழல் அவனைக்
கட்டிப்போட்டு விட்டது. பாதைகள் மாறினாலும் பயணங்கள் மாறக்கூடாது என்பார்கள்.
ஆனால், தடுமாறியப் பயணம் இறுதியில்
தடையாகிப் போனது. அதனால் தான் தலைமைத்துவம் தலையாயது என்பார்கள். தலையாயத்
தலைமைத்துவம் ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து விட்டால், வருத்தப்பட வேறொன்றும் இல்லை. இலட்சியத் தலைமையாசிரியரைக் காண 7 இலட்ச தமிழ்
மக்கள் காத்துக்கிடக்கின்றனர். அலட்சியம் ஆயிரம் இருந்தாலும் பள்ளியின் அதி
வளர்ச்சியினை யாரும் மறுப்பதற்கில்லை. எல்லாப் புகழும் தத்தம் தலைமையாசிரியரையே
சாரும்.
தலைமையாசிரியர்
அவர்களுக்கு என்று பலப் பரிணாமங்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் அவர் வழிகாட்டியாகவே
இருத்தல் வேண்டும். குழி தோண்டி என்ற
பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது. எல்லாருக்கும் விழியாக இருப்பவர் கண்ணீரைக்
கண்டு கலங்கலாமா? பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு
ஆசிரியரும் உறவால் அமைந்த அன்பு கிடையாது, மாறாக அன்பால் அமைந்த உறவுகள் என்பதை மறவக்கூடாது. அன்பால் அமைந்த உறவுகள்
என்றும் மரித்துப் போகாது. பழி வாங்குவது அல்லது பழிப்போடுவது. இஃது இரண்டில்
ஒன்று இருந்தாலும் அப்பள்ளி வளர்ச்சிக் காணாது. மறுமலர்ச்சிக் காணின் வீரியச்
செயலே வித்திடும். மறுமலர்ச்சியை நோக்கிய தலைமையாசிரியருக்கு முகமலர்ச்சி
அவசியமாகிறது. அகமும் முகமும் மலர்ந்த தலைமையாசிரியரே ஆசிரியப் பெரு மக்களின்
கனவு.
இராமாயணத்தில் நடந்த
சம்பவம் ஒன்று நல்லாதாரம் கூறுகிறது. இராமணும் இலட்சுமணனும் குளிக்கச் செல்லும் பொழுது
தன்னிடம் உள்ள அம்புகளைப் பூமியில் குத்தி வைத்து விட்டுச் செல்வார்கள். ஒரு முறை
அப்படி வைத்து விட்டுச் செல்லும் பொழுது, ‘இராமா என்னைக் காப்பாற்று!’ என்ற அலறல் ஒலி கேட்டது. இராமர் சென்றுப்
பார்க்கும் பொழுது தான் குத்தி வைத்திருந்த அம்பில் ஒரு தவளைக் குத்துப் பட்டு
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. தான்
குத்தவரும் பொழுது ஏன் தன்னை அழைக்க வில்லை என்று இராமர் கேட்கிறார். அதற்குத்
தவளைக் கொடுத்த பதில் தான் எல்லா தலைமையாசிரியர்களுக்கும் தலைப்புச் செய்தி.
‘இராமா, என்னை யாரும்
கொல்ல வந்தால் இராமா இராமா என்று உன்னைத் தானே கூப்பிடுவேன். குத்த வந்தது
யாரென்று பார்த்தால் அது நீயாக இருக்கிறாயே.வேறு யாரை நான் கூப்பிடுவேன்?’ இதே நிலை
தான் ஆசிரியர்களுக்கும். யார் சரி தவறு என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
பள்ளியில் நடக்கும் வாதங்கள் பிள்ளைகளுக்கு பாதகங்களாக மாறிவிடக்கூடாது என்பதே
எமது தலையாய நோக்கம். நான் சொல்லுவதை விட வள்ளுவப் பெருமான் சொல்வதைக் கொஞ்சம்
கேட்போம்.
‘ சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
’
நடுநிலை வகிப்பது
சான்றோர்களுக்கு அழகு என்கிறது இக்குறள்.
பள்ளியில் தலைமையாசிரியரின் நடுநிலை பண்பு மலரும் பொழுது ஒவ்வொரு பள்ளியும்
பூத்துக் குழுங்க முடியும். சிறந்த வழிகாட்டல்கள் அதிகரிக்கும் பொழுது, நிறைந்த நல்லாசிரியர்கள் உருவாகிறார்கள். தாயிற்
சிறந்ததொரு கோயிலுமில்லை என்பது உண்மை என்றால், தமிழ்ப்பள்ளிக்கு சிறந்ததொரு தலைமையாசிரியரும் இல்லை என்பதும் உண்மையே.
தமிழ்க்கூறு நல்லுலகம் அடையாளம் காணுமாயின் சிறந்த தலைமையாசிரியர்களின் பெயர்கள்
சொல்லி மாளாது. தலைமைத்துவம் என்பது பதவியை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக தலைவனின் நடத்தையைச் சார்ந்தது. உயர்தரச்
சிந்தனை மற்றும் உயர்ந்த நடத்தையானது பள்ளியின் தலைமைத்துவத்தை தலை நிமிரச்
செய்கிறது. 21-ஆம் ஆண்டின் ஈடு இணையற்றப் பள்ளியாக உருமாற்றம் பெற தலைமைத்துவம்
மலரட்டும்,தலைமையாசிரியர் சிறக்கட்டும்.