இவ்வாறு சொன்னது 21-ஆம்
நூற்றாண்டின் முதன்மை மனிதராக டைம்ஸ் சஞ்சிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல்
அறிஞர் ஆல்பர்ட் ஐன்டைன் ஆவார். மனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் அறிவின் ஆற்றலை
விட கற்பனைச் சக்தியின் ஆற்றலே மேலோங்கி நிற்கிறது என்பது அன்னாரின் கூற்றாகும். இவ்வாறு
சொன்னது ஒரு சாதாரன மனிதர் கிடையாது. சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. அறிவு
என்பது நாம் தேடிச் சென்று பெறுவது. ஆனால், கற்பனை என்பது இறைவன் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். அதனைப் பயன்படுத்திய
மக்களே உலகை ஆண்டிருக்கிறார்கள்.
உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து
பொருள்களுக்கும் அறிவே முக்கியம் அவர் ஏன் கூறவில்லை? அவர் உருவாக்கிய சார்பியல் கோட்பாட்டிற்கும் (theory relativity) கற்பனைக்கும் என்ன தொடர்பு? நிச்சயம் தொடர்பு இருந்ததால் தான் கற்பனா சக்தி முக்கியம் என்று
உரைக்கின்றார். புத்தாக்கச் சிந்தனைக்கும் புனையாக்கச் சிந்தனைக்கும் அடிப்படையாய்
இருப்பது இந்த கற்பனா சக்தியே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு உறைவிடமாய் இருப்பதும்
கற்பனா சக்தியே! அறிவியல் அறிஞர்களிலிருந்து ஆசிரியர்கள் வரை அனைவரையும் புதிய
உலகிற்கு அழைத்துச் செல்லும் ஆத்மார்த்த நெறியாக இருப்பதும் இந்த கற்பனா சக்தியே!
ஆழ்ந்து சிந்தோமானால் கற்பனா
சக்தி மிக்கவர்கள் தான் இலட்சியக் கனவுமிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் தான்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளைப் பார்த்து ‘கனவு காணுங்கள்’ என்று உரக்க உரைக்கிறார். கனவிற்கும் கற்பனைக்கும் நெருங்கியத் தொடர்பு
உண்டு. கற்பனைகள் தான் கனவுகளாக உருமாறுகின்றன. அமெரிக்கர்களின் விண்வெளி
வெற்றிக்கு அவர்களின் கற்பனா சக்தியே முக்கியக் காரணம் என்பது நம்மில் எத்தனைப்
பேருக்குத் தெரியும்? சமீபத்தில் நாசாவின் ஜுனோ என்கிற
விண்கலம் வியாழன் கிரகத்தின் கோல் வளியில் சென்றடைந்த தை இந்த உலகமே வியந்து
பார்த்தது. இந்த விண்வெளியின் ஆராய்ச்சியில் அவர்கள் முன்னோடியாக இருப்பதற்கு என்ன
காரணம்? காரணங்கள் நிறைய இருக்கலாம்.
ஆனால், அதற்கு நிச்சயமாக கற்பனா
சக்தியும் ஒரு காரணம் என்பதை நாம் மறக்கலாகாது. இக்கூற்றை நிரூபிக்க
அமெரிக்காவின் ஹோலிவூட் திரைப்படங்களான
ஸ்தார் வோர்ஸ் முதல் கேலெக்சி படங்களே சாட்சி.
அமெரிக்கர்கள் முதலில் கற்பனைகளில் பார்த்து இரசித்தப்
பின்னரே அறிவைப் பயன்படுத்தி அதனை உருவாக்குகின்றனர். கற்பனையைப் பயன்படுத்தி
கோடிஸ்வரனாகலாம் என்பதை ஹோலிவூட்டைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் வந்த கேளிச்சித்திரப்படமான பைன்டிங் டோரியே இதற்குச் சாட்சி.
இன்னும் கொஞ்சம் ஆழமாகப்
பார்த்தோமானால், ஒரு நாட்டின் சரித்திரத்தையே
மாற்றக் கூடிய அபரிமிதமான சக்தி அந்த கற்பனை வளத்திற்கு இருக்கிறது. பிரஞ்சு
மாவீரன் நெப்போலியனைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அந்த மாவீரனைத்
தோற்கடித்த டூயுக் வெல்லிங்தனிடம் சென்று தங்களின் வெற்றிக்கு என்ன இரகசியம் என்று
வினவினார்கள். அதற்கு அவர், ‘நான்
சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது அடிக்கடி பொம்மைகளை வைத்துக் கொண்டு
நெப்போலியனைப் போரில் தோற்கடிப்பது போல் விளையாண்டு மகிழ்வேன்’ என்றார். சுருங்கக்கூறின், தன்னுடைய சிறு வயதிலேயே வெல்லிங்டன் நெப்போலியனைத் தோற்கடிப்பது போல் கற்பனை
வளத்தினை சுழலவிட்டிருக்கின்றார். கற்பனைக் கனவாக மாறி, பின் அதுவே வாழ்க்கையின் இலட்சியமாக்கியிருக்கிறது. ஜுன் 15 தேதி 1815-ஆம்
ஆண்டில் வோட்டர்லு (இன்று பெல்ஜியம் என்கிற நாடு) இடத்தில் இச்சரித்திர நிகழ்வு
உண்மையாகியிருக்கிறது.
‘கற்பனா சக்தி கற்ற அறிவை விட முக்கியமானது! ஏனெனில் கற்றது வரையறைக்கு
உட்பட்டது! ஆனால், கற்பனை ஆற்றல் பூகோளத்தையே
சுற்றும் தன்மையுடையது’ என்று ஐன்ஸ்டைன் கூறியது
எவ்வளவு உண்மையாகிவிட்டது. கற்பனையின் ஆற்றல் முழுக்க முழுக்க நமது வலது பக்க
மூளையின் தாக்கமாகும். இங்கு தான் கலையுணர்வு, மனிதனின் ஆற்றல்கள், இறைத்தேடல் யாவும்
பொக்கிக்ஷங்களாக மறைப்பொருளாக இருக்கின்றன. அதனால் தான் இடது கைப் பழக்கம்
உள்ளவர்கள் ஒரு துறையில் நிச்சயமாக ஒளிர்வார்கள் என்று அறிவியலாளர்கள்
உரைக்கிறார்கள்.
மேலும், பெரிய புராணத்தில் ‘கற்பனைக் கடந்த சோதி’ என்று
ஆரம்பமாவதைச் சற்று கவனியுங்கள். இறைவனின் சோதியானது ஆதியானது, அந்தமானது. நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது.
அப்படியானால் நம்முடைய கற்பனையானது எவ்வளவு அபாரமானதாக இருந்திருக்கும்? தியானத்தின் அடிப்படையே கற்பனை தான் என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்களா? நான்கு வேதங்களின் சாரமே ‘நீ எதை நினைக்கீறாயோ அதுவாக ஆகிறாய்’ என்பது தான். ‘தத்துவ மசி’ அல்லது ‘அஹம்பிரம்மாஸ்மி’ என்பார்கள். இவை எல்லாமே
கற்பனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது. எண்ணங்களின் கூட்டுதான் கற்பனை. எண்ணங்கள்
விதைகள் என்றால் கற்பனைகள் மரங்கள் போன்றவை. எண்ணங்களின் வலிமையால் கற்பனைகள்
வேர்விட ஆரம்பிக்கின்றன.
எண்ணிலடங்கா கற்பனைகள்
விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதனை உள்வாங்கும் தகுதி நம்மில்
இருக்கிறதா என்பது தான் கேள்வி! “கற்பனா சக்தியில் எல்லாம்
அடங்கியுள்ளது. அது நிஜ வாழ்க்கையின் பிடிமானத்திற்கு ஓர் ஒத்திகைப் போன்றது.” என்று ஐன்ஸ்டைன் அழகாக எடுத்துரைப்பார். நிச்சயமாக நாம்
எதிர்காலத்தில் வாழப்போகும் வாழ்க்கைக்கு ஓர் ஒத்திகைப் போன்றதே! பிரபஞ்ச அறிவும் ஆழ்மன
ஆற்றலும் நம்மை இணைப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. எண்ணங்களே அதற்கு இணைப்புப்
பாலம். இது வெறும் தூங்கும் போது வரும் கனவுப் பாலம் மட்டுமல்ல, கனவை நிஜமாக்கும் இலட்சியப் பலம்.
‘பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்பார் கிரேக்க தத்துவ ஞானி சோக்ராட்டீஸ்.
எதையுமே பரிசோதித்துப் பார்த்தப் பிறகு தான் கருத்துகள் கூற வேண்டும். ‘அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது’ என்று நம்முடைய ஔவைப்பிராட்டி மொழிந்ததைப் கொஞ்சம் பரிசோதித்துப்
பாருங்கள். காரணம் மானிடனுக்கு மட்டுமே கற்பனா சக்தி படைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்திப்
பாருங்கள். பாரினை ஆழ வெகு தூரமில்லை!