இப்படிச் சொன்னது முன்னாள் உலகப் புகழ் பெற்றத்
தொழில் அதிபர் ஹென்றி போர்டு அவர்கள். அப்படித் திருத்தியதால் தான் இன்றளவும் போர்டு காடிகள் பீடுநடைகள் போட்டுக்
கொண்டிருக்கின்றன. இவ்வரிகள் இயந்திரத்திற்கும் மட்டுமல்ல. நம் இதயத்திற்கும்
சொல்லப்பட்ட வைர வரிகள். குறைகளைக் காண்பவர்கள் கறை தொட முடியாது என்பார்கள். கடைசி
வரை பிரச்சனை என்ற கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். மனதில் உள்ளவை தான்
வார்த்தைகளாக வெளி வரும். வார்த்தைகளாக வந்தபின் அஃது வேதங்களாக மாறுவதை நாம்
அறிந்திர மாட்டோம்.
வார்த்தைகளுக்கு நல்லது
கெட்டது தெரியாது. வாயிலிருந்து வந்த சொல்லும் வில்லில் இருந்து வந்த அம்பும் தன் வேலையைக் காட்டாமல் திரும்பவும்
போகாது என்பார்கள். வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உள்ளது. காரணம் வார்த்தைகள் எண்ணங்களின்
பிறப்பிடம். எண்ணங்கள் மனத்தில் விதைக்கும் விதைகள். மனமோ மனிதனுக்குக் கிடைக்கப்
பெற்ற பொக்கிக்ஷம். ‘மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாமோ’ என்று ஆகத்தியர்
மொழிந்திருப்பது சிந்திக்கத்தக்கது. வார்த்தைகள் தான் மந்திரம்.
‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால்
சுட்ட வடு’
என்று
திருவள்ளுவர் உரைத்திருப்பது மிகப் பெரிய சத்தியவாக்காகும். நாவினால் உரைத்த
வார்த்தைகளுக்கு ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் இருக்கிறது என்பது இதன்
வழி புலனாகிறது.
ஒரு முறை மகான் புத்தர்
அவர்கள் தன் சீடர் ஒருவரை அழைத்து ஒரு
குடம் நிறைய தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சீடரும் ஒரு குடத்தில் தண்ணீர்
கொண்டு வந்தார். பிறகு, புத்தர் அந்த தண்ணீரில் சீடனை தன் கால்களைக் கழுவச்
சொன்னார். கழுவியப் பிறகு அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். உடனே அந்தச் சீடர்,
‘தண்ணீர் அழுக்காகிவிட்டது’ என்று சொன்னார். அதற்கு புத்தர், ‘தண்ணீர் முதலில்
சுத்தமாகத்தானே இருந்தது. அந்த அழுக்கு உன்னிடம் இருந்துதானே சென்றது. நீ தண்ணீரை
அழுக்காக்கி விட்டு தண்ணீரைக் குறை சொல்லலாமா?’ என்றார் புத்தர்.
அதனால் தான் சொல்கிறார்கள், ‘குறைகளைக் காணாதீர்கள்; நிறைகளைக் காணுங்கள்’ என்று. ஹென்றி
போர்டு சொன்னதும் அது தான். குறையைப் பேசினால் கறையைக் காண முடியாது. ஒரு
காலணி தொழிற்சாலையில் நடந்த சம்பவத்தைக்
காண்போம். காலணி முகவர் ஒருவரை ஒரு முறை
அந்த தொழிற்சாலையின் நிர்வாகம் மிகவும் பின் தங்கிய கிராமத்திற்கு அனுப்பி அங்கு
தன் காலணிகளை வியாபாரம் செய்ய யூகித்திருந்தது. அந்த முகவரும் கிராமத்திற்குச்
சென்று சூழ்நிலைகளைப் பார்த்து விபரங்களைச் சேகரித்துக் கொண்டு வந்தார். தான்
சேகரித்து வந்த விபரத்தை நிர்வாகத்திடம் விளக்கமாகக் கூறினார். ‘இந்த கிராமத்தில் மக்கள் சுத்தமாக இல்லை. யாருக்கும்
காலணி அணிய வேண்டும் என்று அக்கறை இல்லை.காலணி விற்க இங்கு சிரமம்’ என்றார்.
அதனைச்
சற்றும் எதிர்பாராத நிர்வாகம் உடனே இன்னொரு முகவரை அங்கு மீண்டும் அனுப்பியது. அந்த
நிருபரும் உடனே கிராமத்திற்குச் சென்று நிலவரத்தை நேரில் கண்டு ஆய்வுகள் செய்து
தொழிற்சாலைக்குத் திரும்பினார். நிர்வாகக்
கூட்டத்தில் மிகவும் கம்பீரமாக பேசலானார். ‘அந்த கிராமத்தில் இன்னும் காலணி அணியும் முறை அறிமுகப்படுத்த வில்லை.இதுவே நம்முடைய
வாய்ப்பு. மிகச் சுலபத்தில் காலணியை விற்று தீர்த்துவிடலாம்’ என்று கூறினார். முதலாம் முகவர் முடியாது என்று கூறினார்.
இரண்டாவது முகவரோ முடியும் என்று கூறினார். இதைத் தான் ஹென்றி போர்டு ‘குறைகளைக் காணாதீர்கள், முடிந்தால் திருத்தங்கள் செய்யுங்கள்’ என்றார். குறைகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.
இந்த நேர்மறைச் சிந்தனையானது
நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும். மகாபாரதத்தில் அர்ஜுனரிடம் கிருக்ஷ்ணர், ‘உலகத்தில் நல்லவர்கள் அதிகமா அல்லது தீயவர்கள் அதிகமா’ என்று கேட்டார். அதற்கு அர்ஜுணர், ‘நல்லவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்றார். பிறகு, கௌரவர்களிடமும் கிருக்ஷ்ணர் இதே கேள்வியைக் கேட்கிறார்.
அதற்கு கௌரவர்கள்,
‘இந்த உலகத்தில் கெட்டவர்களும், கொடியவர்களும் தான் அதிகமாக இருக்கிறார்கள்’ என்று உரைத்தனர். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப அமைவது தான்
நம் வாழ்க்கை. ‘நீ எதை நினைக்கிறாயோ, அதுவாக ஆகிறாய்’ என்ற வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓர் உண்மை.
‘இருட்டைப் பார்த்து பழிக்காதீர்கள்; முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்’ என்பார்கள். பழித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு நாள் பழிவாங்கப் படுவோம்.
மாறாக, ஏற்றி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
உங்களை ஏற்றி விட நிறைய பேர் இருப்பார்கள். புதிதாக வாங்கிய சட்டையில் ஒரு சிறியதாக
ஓட்டை இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் பார்த்துப் பாராட்டுவது அந்த சட்டையில்
அழகா அல்லது குறையாகத் தெரியும் அந்த ஓட்டையா? பதில் எதுவாக இருந்தாலும் அது தான் நீங்கள். சட்டென்று எறியும் அந்த வார்த்தையானது
மற்றவர்களை மட்டும் பாதிக்க வில்லை,மாறாக உங்களையும் பாதிக்கிறது
என்பதை மறந்துவிடலாகாது. வாழ்வது ஒரு முறை தான். அதை ஏன் குறையாகப் பார்க்க வேண்டும்?
அதை நிறையாகப் பாருங்கள். நிறைய
நல்ல விஷயங்கள் நடக்கும். இந்த தொழிற்நுட்பக் காலத்தில் திருத்தம் செய்யப்பட்டவைக்குத்தான்
மவுசு அதிகம். காரணம்,
திருத்தம் செய்யப்பட்டவைக்கு இன்னொரு
பெயர் ‘புனையாக்கம்’ அல்லது ஆங்கிலத்தில் ‘innovation’ என்பார்கள். ஆக, இனியும் குறையைக் காணாதீர்கள். முடிந்தால் திருத்தங்கள் செய்து பாருங்கள்.