எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் : புதியதோர் அணுகு முறை...


                  
                             21-ஆம் நூற்றாண்டில் நாம் காலடி எடுத்து வைத்து சென்றாண்டோடு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு கற்றல் கற்பித்தல் தோற்றத்தை மாற்ற, புதிய அணுகு முறையைப் புகுத்த, வகுப்பறைத் தோற்றத்தை உருமாற்றம் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தான் இந்த 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல். முகநூலிலும் வோட்சாப்பிலும் வகுப்பறை பலப்பல வண்ணங்களோடும், பற்பல வண்ண அட்டைகளோடும், புத்தாக்கச் சிந்தனையோடு உருவாக்கப்பட்ட அட்டவணைகள், மடிக்கனிணி, பல்லூடக வெண்திரை ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள். ஆசிரியர் பணி பெரும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இச்சான்று ஒன்று போதாதா?

                             ஆசிரியர்கள் வெண் கட்டிப் பயன்படுத்தி போதித்தக் காலம் மறைந்து போயிற்று. தற்போது குறியீட்டு பேனா(Marker Pen) பயன்பாடும் மறையும் தருவாயில் உள்ளது. இனி மிஞ்சி இருக்கப் போவது பல்லூடக வெண்திரையும் (Smart Board) மின்னியல் மடிக்கனிணியும் தான். இணையத்தின் வாயிலாக வகுப்பறைக்குள் மின்னியல் நூல்கள் வந்து விட்டதை நீங்கள் அறிவீர்களா? ஏற்கனவே பள்ளியில் அமலில் இருக்கின்ற வி.எல்.இ.ஃரோக்(VLE FROG) பயன்பாட்டின் தாக்கத்தின் இரண்டாம் கட்டம்தான் இந்த 21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் சூழல். இதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது 2000-தாம் ஆண்டில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் போதித்தல்(PPSMI) எனும் திட்டம் தான்.

                             இந்த 21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் இரண்டு விடயத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒன்று, இணையத்தைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தேடலை அதிகப்படுத்துவது. இரண்டாவது, உயர்தரச் சிந்தனையைப் புகுத்துவது. டெக்ஸ்ஸோ நோமி புழூம்ஸ்ஸின் உயரிய சிந்தனை ஆற்றல் இதற்கு அடிப்படையாக இருக்கின்றது. இதனைக் கல்வி அமைச்சும் ஐ திங் (I-Think) என்கிற 8 வகையாக சிந்தனை வரைபடத்தை அறிமுகம் செய்து பாடத்திலும் புகுத்தியுள்ளது. இணையமே 21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கு உயிர்நாடி. மற்றவையெல்லாம் பிற. இணையம் வாயிலாக மாணவர்கள் பாடம் தொடர்பாக முன் கூட்டியே விடயங்களைத் தேடி சேகரித்து இருக்க வேண்டும். அவர்கள் தேடியதை வகுப்பறையில் குழுவில் கலந்தாய்வு செய்தல் வேண்டும். 

                                  ஆசிரியர்கள் பங்கு இங்கு போதிப்பது அல்ல, மாறாக அவர்கள் வழி காட்டுதல் மட்டுமே ஆகும். மாணவர்களின் கற்றலில் மாணவர்களின் பங்கே அதிகமாக இருக்கும். மாணவர்களைப் பாராட்டுவதும், அவர்களின் முயற்சியைப் பாராட்டுதலும் 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் அதிகமாக இருக்கும். அதற்காக பிரத்தியேகமாக வண்ண அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனைத் தான் நீங்கள் முகநூலிலும், வோட்சப்பிலும் பார்த்திருப்பீர்கள்.

                             வகுப்பறைச் சூழல் மிக மிக முக்கியம். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே இருத்தல் அவசியம். மேசைகள் குழுவாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். பல்திறன் கற்றல் நுணுக்கங்களை ஆசிரியர் அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பாடத்திட்டத்தின் நோக்கத்தை ஆசிரியர் முன்கூட்டியே மாணவர்களுக்குத் தெரிவித்து எழுதப்பட்டிருக்க வேண்டும். பாடத்திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் முன்னாடியே துலங்குவதற்கு இது ஏதுவாகும். அடுத்து, ஆசிரியர் மாணவர்களிடையே நல்ல உறவு இருக்க வேண்டும். மரியாதைப் பண்பை அதிகமாக மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்களை அதிகமாகப் பேச வைக்க வேண்டும். அந்தப் பேச்சின் வாயிலாக அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். ஒற்றுமை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

                             அன்றையப் பாடத்தின் நோக்கம் நிறைவேற மாணவர்கள் முயற்சித்தார்களா என்று ஆசிரியர் ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற பல்வகைத் திறனில் ஆசிரியர் மாணவர்களைத் தூண்ட வேண்டும். இனி பாட நோக்கம் நிறைவேற ஆசிரியர்கள் மட்டும் மெனக்கெடத் தேவையில்லை. மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தி அவர்களை விழிப்புறச் செய்தாலே போதும். ஆசிரியர்கள் வெறும் மாதச் சோதனை,அரையாண்டு சோதனை போன்றவற்றை நம்பியிராமல் அவ்வப்போது பல்வகைத் திறனறிச் சோதனையை நடத்த வேண்டும். விடுபட்ட, பின் தங்கிய மாணவன் என்ற சொல்லுக்கே இங்கு இடமில்லை. மாணவர்களிடையே இருக்கும் ஆக்கத்திறனை வெளிக் கொணர்வதே 21-ஆம் நூற்றாண்டின் உண்மையான உன்னதமான நோக்கமாகும்.


                             மலேசியக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் போற்றத்தக்கவை. ஆனால், அது எவ்வளவு தூரம் மாணவர்களைச் சென்று சேர்ந்தது என்பதனைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், இது காலத்தின் கட்டாயம். மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறை கற்றல் கற்பித்தல் மாணவர்களை மட்டும் அழைக்கவில்லை,மாறாக ஆசிரியர்களோடு பெற்றோர்களையும் அழைக்கிறது.வாருங்கள் கைக் கொடுப்பம்.