எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தைக் காப்போம்...


                             தேசிய மொழிப் பள்ளிக்கும், சீன மொழிப் பள்ளிக்கும், தமிழ் மொழிப் பள்ளிக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தத்தம் தாய் மொழி, கலைக் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான அனைத்தையும் தற்காப்பதே ஆகும். இதுவே ஒவ்வொரு பள்ளியின் அடையாளமும் ஆகும். அடையாளத்தை இழந்த மொரீஸியத் தமிழர்களின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியாரின் வீர வரிகள் தாம் நினைவுக்கு வரும்.

                             தமிழ்ப்பள்ளியின் தனித்தன்மையே தமிழ் தான். உலகத் தமிழின் அடையாளம் செம்மொழி என்றால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் நிச்சயமாகத் தமிழாகத்தான் இருக்க முடியும். தமிழ்ப்பள்ளிகள் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போதே கெடா, லூனாஸ்,பாயா பெசார் தமிழ்ப்பள்ளியின் பெயர் தேசிய வகை கோ.சாரங்கபாணி என்று பெயர் மாற்றம் பெற்றச் செய்தி தேனாக வந்து இனிக்கிறது. தமிழ் வாழும், தமிழ்ப்பள்ளிகள் வாழும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து உள்ளது. ஆக, தமிழ்ப்பள்ளியின் ஒட்டுமொத்த அடையாளத்தை யாருக்கும் தாரை வார்க்கலாகாது. செம்மொழியாம் தமிழ்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

                             கையைக்கூப்பி வணக்கம் செய்யும் பண்பாடு தமிழர்களின் மிகத் தொன்மையான நாகரீகம் ஆகும். அதனை எளிமையாக காணக்கூடிய இடம் தமிழ்ப்பள்ளியே. மாணவர்கள் நமக்குச் செய்யும் அந்த வணக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அத்தகையத் தொன்மையான பண்பாட்டினைத் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளியின் மேன்மையை என்னவென்று சொல்வது? ஒரு நாளைக்கு எத்தனையோ முறை மாணவர்கள் தன் கைகளைக் கூப்பி ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வணக்கம் செய்கிறார்கள். அத்தனை முறையும் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?  எதிர்காலத்தில் வணக்கத்திற்கு உரியவர்கள் இன்று நம்மை வணங்குகிறார்கள். அவ்வளவு தான்.

                             தொடர்ந்து நம் பள்ளியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல். தாய்மொழி நாளேட்டில் இதுகாறும் வெளிவராத தமிழ்ப்பள்ளியில் கொண்டாடப்படும் படங்கள் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. என்ன தான் வீட்டிலும்  பொது இடங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டாலும், பள்ளியில் ஆசிரியர்களோடு கொண்டாடப்படும் பொங்களானது மாணவச் செல்வங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வு நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். தமிழர்களின் தொன்மையான அடையாளத்தை ஆவணப்படுத்தும் இடம் தான் நம் தமிழ்ப்பள்ளி. இச்சீரியச் சிந்தனை மாற்றம் தமிழ்ப்பள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

                             தைப்பொங்கல் ஒருபுறமிருக்க, மறுபுறம் சரஸ்வதி பூஜையின் கொண்டாட்டம் சொல்லி மாளாது. தமிழ்ப்பள்ளியின் அற்புதமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. சரஸ்வதி பூஜை அன்று பள்ளியே விழாக் கோலம் பூண்டிருக்கும். வண்ண வண்ணப் பாவாடை தாவணியில் நம் மாணவர்களைக் காண கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மாவிலைத் தோரணங்களும் சரஸ்வதியின் அலங்காரங்களும் அற்புதமாக இருக்கும். தேவாரப் பாடல்களும் சரஸ்வதியின் விளக்கமும் மாணவர்களின் மனதிற்கு விருந்தாக இருக்கும். இவை அனைத்தும் தமிழ்ப்பள்ளியில் மட்டுமே காணக்கூடியவை. பெருமைப் பட்டுக் கொள்ள ஆயிரம் இருக்கிறது. தேடிக் கிடைக்காத வரம் இது. பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளிதோறும் காலையில் சமய வகுப்பு நடப்பது தமிழ்ப்பள்ளிக்கு இன்னொரு முத்தாய்ப்பு. கிடைத்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி தெறிக்க விட வேண்டாமா?

                             தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு விடயம் நம் கலை கலாச்சாரத் தொடர்பான நிகழ்வுகள். பரதம், நாடகப் போட்டி, பாடல் ஆடல் திறன் போட்டி, கதைச் சொல்லும் போட்டி, மாறுவேடப் போட்டி...இன்னும் எத்தனையோ இருக்கிறது இங்கு சொல்வதற்கு. இவை அனைத்தும் தமிழ்ப்பள்ளியிலிருந்து பிரிக்க முடியாத நிலையான அடையாளங்கள். மாணவச் செல்வங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் மாறாதவை இந்நிகழ்வுகளே! ஆறு ஆண்டுகள் கல்விக் காலத்தை முடித்து விட்டு வெளியேறும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி மாணவர்களும் நிலைத்திருக்க, நிலையாய் இருக்க நம் தமிழ்ப்பள்ளிகளே அடித்தளமாக இருக்கிறது. அடுத்தத் தலைமுறையில் எவ்வளவுப் பெரிய இடர் வந்தாலும் அதை தடுத்து நிறுத்தும் திடம் நிச்சயம் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உண்டு.


                             பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டலைக் கல் என்பார் திருவள்ளுவனார். தமிழ்ப்பள்ளிகளும் சரி, தமிழ்ப்பள்ளியின் அடையாளமும் சரி அதனை வாழ்விப்பதும் வீழ்விப்பதும் மூன்றாம் தரப்பினர் அல்ல. நாம் தான் அதற்கு முழுப் பொறுப்பாளி. தமிழ் நாட்டில் கூட இல்லாத சுதந்திரம் இங்கு நம் தமிழ்ப்பள்ளிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை தற்காத்துக் கொள்ள வேண்டும். அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். 524-வது  தமிழ்ப்பள்ளியும் பிறந்து விட்டது. இன்னும் 6 பள்ளிகள் பிறக்க விருக்கின்றன. தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்த மலேசிய மண்ணிற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இது நன்றி சொல்லும் நேரம்.