ஆசிரியர்கள்
ஒவ்வொரு முறையும் போதித்து முடித்தவுடன் எல்லா மாணவர்களும் ஒன்று சேர்ந்து நன்றி
சொல்வார்கள். ‘நன்றி ஐயா,நன்றி அம்மா,நன்றி ஐயை’ என்ற ஒலி உரக்கக் கேட்கும். பள்ளியில் உள்ள எல்லா மாணவர்களும் நிச்சயம்
நமக்கு நன்றி உரைப்பார்கள். ஆசிரியர்களும் நல்லது என்று உரைத்து விட்டு சென்று
விடுவோம். ஆசிரியர்கள் நன்றிக்கு உரியவர்கள். உண்மை தான். மறுப்பதற்கில்லை. ஆனால், ஆசிரியப் பெரு மக்கள் காலம் முழுதும் நன்றிக் கடன்
கொண்டிருப்பதைத் தான் இக்கட்டுரை விளக்க விருக்கிறது. காரணம், ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். வெறும் சம்பளம்
வாங்கும் தொழில் அல்ல இது.
குறிப்பாக
தமிழ் ஆசிரியம் வாழ தமிழ் ஆசிரியர்களின் சிந்தனை மாற வேண்டும். ஏதோ பள்ளிக்கு
வந்தோம்,நொந்தோம்,வெந்தோம் என்றில்லாமல் வந்தோம் வென்றோம் என்கிற நிலைக்கு வர வேண்டும். இந்த
இனம் குறை பாடுவதில் சளைத்தவர்கள் அல்ல,
ஆனால் நன்றி பாராட்டுவதில் இன்னும் மேன்மை அடையவில்லை. கண்ணிற்குத் தெரியாத
தெய்வத்தை விட கண்ணிற்குத் தெரிந்த தெய்வம் எவ்வளவோ மேல். நம் கண்ணிற்குத் தெரிந்த
தெய்வம் மாணவர்கள் தான். ஒரு பள்ளியின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நம்
அன்பிற்கினிய மாணவர்கள். அவர்கள் இல்லையென்றால் நமக்கு வேலை இல்லை,நல் வாழ்வு இல்லை. அதனால்தான் அவர்களுக்கு நாம் நன்றி
கடன் பட்டவர்களாகிறோம். மாற்றுச் சிந்தனையைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் போற்றுதலுக்கு உரியவர்களாவீர்கள்.
ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் உள்ள உறவு நிரம்பவும் புனிதமானது. என்றுமே பொன்னெழுத்துக்களால்
செதுக்கப்பட்டவை. வாழ்க்கை முழுவதும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நம் பெற்றோர்கள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆப்பிரஹாம் லிங்கன் போல் அல்ல. அப்படி
இருந்திருந்தால் அவர்களும் ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியிருப்பார்கள். கடன்
பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார்கள். அந்த நிலை நமக்கும்
வரக்கூடாது என்பதற்காகவே இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. டயஜீனஸ் என்கிற
கிரேக்கத்தத்துவ ஞானி ஒருவர் இருந்தார். பகலிலேயே இடுப்பில் விளக்கைக் கட்டிக்
கொண்டு அவர் நடப்பாராம். வெளிச்சம் இருக்கின்ற போது விளக்கு எதற்காக என்று யாராவது
அவரைக் கேட்டால், மனிதர்களைத் தேடிக்
கொண்டிருக்கிறேன் என்பாராம். அதே மாதிரி எல்லா மாணவர்களும் நம் கண்களுக்குத்
தெரிந்தும் சிறந்த மாணவர்களையே நாம் ஏன் தேடுகின்றோம்? சிந்தித்துப் பார்க்கும் நேரம் இது.
மாணவர்களுக்கு
ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்று மனோதத்துவ ரீதியிலான புராணக் கதை ஒன்றைச் சொல்லக்
கடமைப்பட்டுள்ளேன். மனிதர்கள் தோன்றாதக் காலத்தில், எல்லா தெய்வங்களும், தேவர்களும், ரிக்ஷிமார்களும், அசுரர்களும் பூமியில் வாழ்ந்ததாகச் செய்தி. பிறகு, மனிதர்கள் உருவாகப் போகும் தருணத்தில் பிரச்சனை எழுந்தது. கேள்வி என்னவெனில், மனிதர்கள் உருவாகினால் தெய்வங்களெல்லாம் எங்கு
செல்வது? இக்கேள்வி பிரம்மா,விக்ஷ்ணு மற்றும் சிவபெருமானிடம் கொண்டு
செல்லப்பட்டது. பெரிய விவாதத்திற்கிடையில் தேவர்கள் எல்லோரும் மேலுலகத்திற்குச்
சென்று விடுவோம் என்று கூறினார்கள். மனிதர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். பறக்கும்
கப்பல் செய்து வந்து விடுவார்கள் என்று கைவிடப்பட்டது.
அடுத்து, சிலர் எல்லோரும் பூமிக்கடியில் மறைந்து கொள்வோம்
என்று தெரிவித்தார்கள். அதற்கும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. காரணம், மனிதர்கள் நிச்சயம் பூமிக்கடியில் வந்து விடுவார்கள்
என்று. இறுதியாக, கடலுக்கடியில் போகலாம் என்று
கூறப்பட்டது. அங்கேயும் இந்த மனிதர்கள் வந்து விடுவார்கள் என்று கூறப்பட்டது.
அடுத்த என்ன தான் வழி என்று எல்லோரும் விழிப் பிதுங்கும் நேரத்தில்
மும்மூர்த்திகளான பிரம்மா,விக்ஷ்ணு மற்றும்
சிவன் கொடுத்த அந்த பதிலே இன்றைய நம் செய்தி.
‘மனிதர்கள் விழித்திராத இடம்
மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அது தான் மறை மனம். அது நடு மூளையில் சரியாக
நெற்றிக்குப் பின்னாடி உள்ளது.பிட்யுட்டெரி கிலெண்டு அல்லது சுரப்பி என்று
அதற்குப் பெயர்.ஒரு சிலர் மட்டுமே அதை உணர முடியும்’என்று முடிவெடுத்தார்கள். மனம் என்கிற மிகப் பெரிய ஆற்றல் படைத்தவன் மனிதன்
என்பது மனோதத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அருளாசிப் பெற்ற எல்லா மகான்களும்
சாதாரண மனிதர்காகப் பிறந்தவர்கள் தான். இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும்
இருப்பர் என்பார்கள். ஏன், மூளையில் இருக்க
மாட்டாரா?
இப்பொழுது
துள்ளிக் குதிக்கும் அந்த மாணவர்களைப் பாருங்கள். எல்லோரும் நமக்கு நடமாடும்
தெய்வமாகத் தெரிவார்கள். அதனால் தான் அவர்களுக்கு நாம் நன்றிச் சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்குள்ள இறைத்தன்மையை வெளிக்கொணர்வதற்கு நமக்கு
வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. அதை நன்றாகப் பயன்படுத்தி நம்முடைய கடமையைச் செய்ய
வேண்டும் அல்லவா? இறை ஆனாலும் சரி திறமையானாலும்
சரி, இரண்டுமே மறைத்து
வைக்கப்பட்டிருக்கும். நாம் தான் அதனை மாணவர்களிடையேத் தேட வேண்டும். அந்த
பாக்கியத்திற்காக காலம் முழுதும் நாம் நன்றிச் சொல்ல வேண்டும். தன்னைக் கடைசி வரை
ஆசிரியன் என்றே ஐயா அப்துல் கலாம் அவர்கள் பறை சாற்றியது சிந்திக்கத் தக்கது.
நாமும் சிந்திப்போம்...சிறந்த மாணவர்களை உருவாக்குவோம்.