என் பள்ளியின் மூத்த ஆசிரியைச் சொன்ன ஒரு செய்தி என்னைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரு பெற்றோரிடம் தேசிய ஆளவிலான சீருடை இயக்க முகாமிற்கு தன் பிள்ளைகளை அனுப்பினால் என்னென்னப் பலன் என்பதனை விரிவாக விளக்கியதை அவர் கேட்டிருக்கிறார் போலும். தேசிய அளவிலான நற்சான்றிதழ் பிறகு அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு 10 புள்ளிகளுக்கு உதவி செய்யும் என்று அந்த அம்மாவிடம் கூறியிருந்தேன்.
இதனைக் கேட்ட அந்த ஆசிரியை பிறகு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘சார், ஒன்றாம் ஆண்டு முதல் படிவம் மூன்று வரை பெறும் நற்சான்றிதழ் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் 10 புள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை; மாறாக, படிவம் முதல் படிவம் ஐந்து வரை பெறும் நற்சான்றிதழே புள்ளியில் சேர்த்துக் கொள்ளப் படுகிறது’ என்றார்.
அவர் சொல்வது உண்மை என்றாலும், அதன் விளைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அப்படியென்றால், ஆரம்பப் பள்ளியில் ஏன் மாணவர்கள் பாடத்தை விட்டு விட்டு வெயிலிலும் மழையிலும் பயிற்சி எடுத்து மாவட்ட,மாநில அளவிலான போட்டி விளையாட்டிற்குச் செல்ல வேண்டும்? அதிலும் யு.பி.எஸ்.ஆர் மாணவர்களை பிழிந்து எடுக்கும் இக்காலக்கட்டத்தில் இந்த பாராபட்சமான நிலைமை தேவைதானா?
இதில் இன்னும் ஆராய்ந்தால், ஏற்கனவே விளையாட்டுத் துறையில் பின் தங்கியிருக்கும் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் இச்செய்தியின் மூலம் பின் விளைவுகளை எதிர்நோக்க இருக்கும். அந்த மூத்த ஆசிரியையிடம் நான் சொன்ன பதிலையே இங்கு ஆசிரியர்களின் சிந்தனைக்குத் தருகிறேன்.
‘விளையும் பயிர் முலையிலேயே தெரியும்’ என்பது நாம் கேட்ட பழமொழி தான். ஆனால், அதன் செய்தி மிகவும் ஆழமானது. மாணவர்களின் விளையாட்டின் ஆர்வம் என்பது இயற்கையாகவே அமைந்தது. அந்த ஆர்வத்திற்கு வாய்ப்பளிப்பது தான் இணைப்பாடத்தின் தலையாய நோக்கம். ஆறு ஆண்டுகளில் எவ்வளவு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் திறமையை வெளிக்கொணர முடியுமோ அந்தளவிற்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
இதையேத்தான் நம்முடைய தேசிய கல்வித் தத்துவமும் வலியுறுத்துகின்றது. ஆறு ஆண்டுகளில் முழுமைப் பெற்ற மாணவனாக உருவாக்காமல், இடைநிலைப்பள்ளியில் சென்றா அவர்கள் திறமையையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்?
சரி, நான்காம் படிவத்திலும் ஐந்தாம் படிவத்திலும் மட்டும் பெறும் நற்சான்றிதழே 10 புள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், அந்த நற்சான்றியழைப் பெறுவதற்கு அவர்களுக்கு எங்கிருந்து அந்த திறமை ஆளுமைக் கிடைத்தது? நிச்சயமாக அது தமிழ்ப்பள்ளியில் தான். தமிழ்ப்பள்ளியில் தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளாத எந்த மாணவனும் நிச்சயம் இடைநிலைப்பள்ளியில் வெற்றி பெற முடியாது.
கடந்த 2 ஒலிம்பிக் போட்டியலும் ஓர் இந்திய விளையாட்டாளர்கள் இல்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு யாரை நாம் குறை சொல்வது? தமிழ்ப்பள்ளிக்கும் ஒலிம்பிற்கும் என்ன சம்பந்தம்? சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் கூறுகின்றேன், தமிழாசிரியர்கள் தத்தம் கடமையைச் செய்திவிட வேண்டும். தேசிய அளவிலும் உலகளவிலும் இந்திய விளையாட்டாளர்கள் தொய்வு ஏற்பட்டதன் காரணம் நிச்சயம் தமிழ்ப்பள்ளியில் பிரதிபலிக்கும். இக்கூற்றை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
ஆங்காங்கே நடைபெறும் மாவட்ட அளவாலான திடல்தடப் போட்டியில் நம் இந்திய மாணவர்களின் பங்கு கணிசமாக குறைந்து விட்டது. பிரச்சனை எப்படியிருந்தாலும், ஆணி வேரைப்பற்றிதான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக, தமிழ்ப்பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியப் பெரு மக்களுக்கும் ஒரு செய்தி. கடமைக்காவும் அதிகாரத்தின் வெறுப்பிலும் பள்ளிக்கு வந்துவிட்டு போகாதீர்கள். சுய ஆர்வமும் சமுதாயத்தின் கடப்பாடும் ஒருங்கே கொண்டு செயல்பட முனையுங்கள்.
‘சீரிய இலட்திற்காக செய்யும் தியாகமானது, மனித குலத்தின் மாண்பாகக் கருதப்படும்’ என்று பேராசிரியர் எட்வின் ஆர்னால்டு கூறியதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.