எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

வகுப்பறை இரகசியம்...


                   கோவிலில் ஒரு கருவறை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறை. கருவறையில் இறைவனைத் தேடுகின்றோம். வகுப்பறையில் மாணவனின் எதிர்காலத்தைத் தேடுகின்றோம். தேடல் என்பது ஒன்றுதான். சிதம்பர இரகசியத்தைப் போல வகுப்பறையிலும் சில இரகசியங்கள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டால் அங்கு மாணவர்கள்  விதைக்கப்படுகிறார்கள். இல்லையென்றால் அங்கு மாணவர்கள்   புதைக்கப்படுகிறார்கள். கலைஞர்களுக்கு மேடை தான் பிரதானம். மாணவர்களுக்கு வகுப்பறை தான் உதாரணம். அஃது அவர்களின் முதல் உலகம்.
                   மாணவர்களின் வெளியுலகத் தொடர்புக்கு ஓர் உறவுப்பாலமாக இருப்பது தான் இந்த வகுப்பறை. அந்த பாலத்தை செம்மையாக அமைப்பவர்கள் ஆசிரியர்கள். அமெரிக்காவில் ‘Golden Bridge’ என்ற தொங்கும் பாலத்தின் உறுதிப்பாடு அதனை உருவாக்கிய கட்டிடக்கலை வல்லுனர்களின் ஆற்றலைப் போல் வகுப்பறையின் வல்லுனர்கள் நிச்சயமாக ஆசிரியர்கள் தாம். தேனீக்கள் ஒவ்வொரு பூக்களாகச் சென்று தான் தேனை உறுஞ்சும். ஒரு பூவை மட்டும் அது அணுகாது. வகுப்பறையின் இரகசியம் அங்கு போதிக்கப்படுகிறது. கற்றல் கற்பித்தல் நேரத்தின் போது ஆசிரியர் இறுதி நிமிடம் வரை ஒவ்வொரு மாணவராக அணுகும் அல்லது தொடரும் பொழுது அந்த மாணவன் கவனிக்கப்படுகின்றான். குறை நிறைகளை உடனே கவனிக்க முடியும். நிவர்த்திச் செய்ய முடியும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அந்த மாணவனின் மனதைத் தொட முடியும்.

                   நமக்கு வகுப்பறை என்பது வெறும் தான். ஆனால், மாணவர்களுக்கு அஃது இறை. அவர்கள் வாழ்வு அங்கு தான் தொடங்குகின்றது. அங்கு தான் முடித்தும் வைக்கப்படுகிறது. ஒரு செடி வளர்வதற்கு தண்ணீரும் சூரிய வெளிச்சமும் அடிப்படை. ஆனால், அச்செடி செழிப்புறுவதற்கு மண்ணும் உரமும் அவசியம். செடி என்ற அந்த மாணவன் வளர்வதற்கு அடிப்படைத் தேவை மட்டும் பொதுமா? நல்ல மண்ணும் மற்றும் உரத்தைப் போல அங்கீகாரமும், பாராட்டும், நேர்மறையான வார்த்தைகளும் முக்கியம். இதுவே செடி நமக்குக் கற்றுக் கொடுத்த அடுத்த இரகசியம். வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் வாழ்த்துமழையைப் பொழிய வேண்டும். மாணவர்கள் செய்யும் சிறிய பாடத்தையும் பெரிதாகப் பாராட்ட வேண்டும். எந்த நேரத்திலும் அவர்களை அங்கீகரிக்கத் தயங்கக் கூடாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’. ஏன் பள்ளியில் நாம் இரண்டாவது அன்னையாக இருக்கக் கூடாது? அடுத்தத் தலை முறை வாழ வாழ்த்தி விடுவோம்.

                   இந்து சமயத்தில் பிரம்மா,விக்ஷ்ணு,சிவன் ஆகியோரை மும்மூர்த்திகள் என்பார்கள். இந்த மூவரையும் இணைத்து அதற்குச் சமமான ஒன்று என்று காயத்திரி மூல மந்திரத்தைச் சொல்கிறார்கள். அதுமாதிரி, வகுப்பில் இருக்கும் மூன்று நிலை மாணவர்களை இணைப்பது அன்பு என்ற உலக நியதி. அதுவே அடுத்த இரகசியமிகிறது. அன்பே சிவமென்பதை மறத்தலாகாது. பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்தை ஒரு ஒழுங்கில் வைத்திருப்பது புவி ஈர்ப்ப்புச் சக்தியாகும். இந்த பூமியில் வாழ்வதற்கு அதே புவி ஈர்ப்புச்சக்தியாக இருப்பது அன்பு. பிரம்பைக் கையிலெடுத்த ஆசிரியர்கள் வரம்பை மீறுகிறார்கள். அன்பைக் கையிலெடுத்த ஆசிரியர்கள் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். சாதித்த ஆசிரியர்கள் யாவரும் மாணவர்களை மிரட்டியவர்கள் கிடையாது. மாணவர்களின் ஆற்றலைப் பார்த்து மிரண்டவர்கள். 

                   வகுப்பறையின் அடுத்த இரகசியம் கவனித்தல். ஒரு மாணவனின் வெற்றியின் இரகசியமும் இது தான். அந்த கவனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவர்களின் கவனத்தைக் கட்டிப் போடும் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஓர் ஆந்தையிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று இயற்கை செய்தி சொல்கிறது. மனோவியலில் ஆந்தை ஞானம் அல்லது அறிவாற்றல் என்று பொருள். ஆந்தையைப் போல மாணவர்களைப் பழக்கச் செய்தால் அபாரமான அறிவாற்றலைப் பெற முடியும். வில்வித்தைக்கு அர்ஜுனன் என்பார்கள். அவருக்கு வில் வித்தைக் கற்றுக் கொடுத்த துரோணாச்சாரியர் ஒரு முறை மரத்தில் உள்ள குருவியைக் குறிப்பார்க்கச் சொன்னார். அர்ஜுனனிடம் என்னத் தெரிகிறது என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன், ‘குருவி மட்டும் தான் தெரிகிறது என்றார். மரமோ,கிளைகளோ அல்லது இலைகளோ அல்ல. இதற்குப் பெயர் தான் கவனம். வகுப்பிலும் நிறைய அர்ஜுனர்கள் இருக்கிறார்கள். பார்க்கத் தெரிந்தால்.


                   இயற்கை நமக்கு மிகப் பெரிய ஆசான். கற்கத் தயாராக இருந்தால் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வது. இதுவே வகுப்பறையின் அடுத்த இரகசியமாக வருகிறது. சூரியன் வெளிச்சம் மட்டும் தான் கொடுக்கும். மிருகங்களும் நமக்கு ஒரு பாடம். ஒரு நாய் கடைசி வரைக்கும் நாயாகத்தான் இருக்கும். மற்ற எல்லா மிருகங்களும் அப்படித்தான். வகுப்பறையிலும் அப்படித்தான். ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும். அதையும் மிகச் சிறப்பாகச் செய்து விட வேண்டும். ஆசிரியர்கள் செய்யும் மற்ற வேலைகளை நான் இங்கு பட்டியலிட வரவில்லை. இரகசியத்தை மட்டும் சொல்ல வந்தேன். சொல்லப்பட்ட அனைத்து அரகசியமும் ஆசீர்வதிக்கப்பட்டவை. சிறந்த ஆசிரியத்தை உருவாக்குபவை. நிறைந்தப் போட்டித்தன்மைக்கு ஈடு கொடுப்பவை.