எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

பார்க்கத் தெரிந்தால் எல்லா மாணவர்களும் சிறந்த மாணவர்களே...


                   ஓர் ஆசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் எல்லா மாணவர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். ஆசிரியரும் வணக்கம் சொல்லிவிட்டு மாசவர்களை அமரச் செய்வார். ஒவ்வொரு முறையும் அவர்கள் வெறும் உடல் ரீதியாக மட்டும் எழவில்லை. மனரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் அவர்கள் எழுகிறார்கள் என்பதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருப்பார்கள்? விழுவது எழுவதற்கே என்கிற         தத்துவத்தை எவ்வளவு அழகாக நமக்கு போதிக்கிறார்கள். சுவாமி விவேகானந்தா அவர்கள் எழுமின் விழிமின் என்று உரைத்தது ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும்.

                   ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருப்பின் அங்கு 30 X 9 வகையான நுண்ணறிவு இருக்கிறது. ஒரு மாணவனுக்கு வீதம் 30 X 100,000,000 நுண்ணுயிர் இருக்கிறது. 30 மாணவர்களின் திறமைகளும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? ஐந்து விரல்களும் வெவ்வேறாக இருப்பினும் ஒவ்வொன்றும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு விரலின் தாக்கமும் கடைசி வரை நம்மை ஆட்கொள்கிறது. அன்மையில் வெளியான பசங்க-2 படம் எல்லாருக்கும் மிகப் பெரிய பாடம். இப்படம் 10 நூல் படித்ததற்குச் சமம். அதீத சுறுசுறுப்பு உள்ள பிள்ளைகள் எப்படி பிறக்கிறார்கள், எப்படி வளர்கிறார்கள், அவர்களின் தாக்கம் என்ன, எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பது தான் கதை. படம் பார்த்தவர்கள் நிச்சயம் வீட்டில் பாடம் நடத்த முடியும்.

                   படம் பார்த்த ஆசிரியர்கள் நிச்சயம் தடம் புரள மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பயன்படுத்தினார்கள், எப்படி பயன்படுத்தினார்கள் என்பது தான் முக்கியம். ஆசிரியர்களின் மனமாற்றமே மாணவர்களின் குண மாற்றம். இராமாயணத்தில், ‘ஈரேழு உலகிலும் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று பிரம்மதேவன் வாயுபுத்திரனுக்கு எடுத்துரைக்கின்றார். இதைத்தான் காரண காரிய உலகம் என்பார்கள். நமக்கு கொடுக்கப்பட்ட மாணவர்கள் நிச்சயம் ஒரு காரணத்திற்காக அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களை எழச் செய்வதும் விழச் செய்வதும் நம் கையில் தான் உள்ளது.

                   ஓர் ஆலமரத்தின் விதை மிகவும் சிறியது. ஆனால், எப்படி அவ்வளவு பெரிய மரம் அங்கு ஒளித்து வைக்கப்பட்டது? விதை என்பது பார்க்கக் கூடியது. மரம் என்பது பார்க்க முடியாதது. ஒன்று கண்ணிற்குத் தெரிந்தது. மற்றொன்று, கண்ணிற்குத் தெரியாதது. ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணிற்குத் தெரிந்தது தேங்காய். கண்ணிற்குத் தெரியாதது அதில் உள்ள தேங்காய் மரம். இந்த தெரிந்ததும் தெரியாததும் ஆங்கிலத்தில் ‘quantum’ தத்துவம் என்பார்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு வகையான குவாந்தோம் அல்லது சக்திநிலை உடையது. நம் வாழ்வும் ஒரு வகை சக்திநிலை தான். இந்த குவாந்தோம் நிலையை வகுப்பறைக்கு கொண்டு வருமாயின் நிறைய உண்மைக்கு நாம் வந்துவிட முடியும். நம் கண்ணிற்கு மாணவர்கள் தெரிகிறார்கள். ஆனால், அவர்களின் தனித்திறமை,ஆற்றல்,அதீதமனம், புத்தாக்கம் மற்றும் புனையாக்கச் சிந்தனை, மனோநிலை யாவும் நம் கண்ணிற்குத் தெரியாதவை. இவற்றைப் பயிற்சியின் மூலம் தான் வெளிக்கொணர முடியும்.

                   கடலில் எந்தத் துளி முதல் துளி என்று யாரால் கூற முடியுமா? வானில் இருக்கும் எந்த நட்சத்திரம் முதல் நட்சத்திரம் என்று யாராவது உறுதியாகக் சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில், வகுப்பில் இருக்கும் மாணவர்களின் விதிகளை மட்டும் எப்படி அறுதியிட்டு கூற முடிகிறது? உங்கள் பார்வையை மாற்றுங்கள் உங்கள் வாழ்க்கை மாறி விடும் என்பார்கள். பார்வைகள் புதிதானால் பாதைகள் பதிவாகும். ஒரு முறை ‘Nasional geographic’ ஆய்வாளர்கள் ஆப்பிரிக்கக் காட்டில் எறும்புகளைப் பற்றி ஆய்வு ஒன்றினை மேற் கொண்டனர். அவர்கள் ஆய்வு செய்யும் இடம் ஒரு காட்டு வாசிகளின் கிராம அருகில் ஆகும். திடீரென்று அவர்கள் எல்லோரும் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டு உள் நோக்கி ஓடினர். இது ஆய்வாளர்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

                   கிராமத்துத் தலைவரை விசாரித்ததில் திடுக்கிடும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இன்னும் அரை மணி நேரத்தில் மழை வரப் போகிறது என்று அந்தத் தலைவர் கூறினார். அவர் கூறும் பொழுது வானம் தெளிவாக   இருந்தது. எப்படி உறுதியாகச் சொல்லுகிறீர்கள் என்று ஆய்வாளர்கள் கேட்டுள்ளார்கள். உடனே, அந்த கிராமத்து தலைவர் எல்லா ஆய்வாளர்களையும்  அழைத்துக் கொண்டு ஒர் எறும்புப் புற்று அருகே செல்கிறார். அங்கு எல்லா எறும்புகளும் எதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறார். இப்படி எல்லா எறும்புகளும் வேகமாக நகர்ந்தால் நிச்சயமாக அரை மணி நேரத்தில் மழை வரும் என்று உறுதியாகக் கூறினார். இதை ஆய்வாளர்கள் நம்ப மறுத்தாலும் அரை மணி நேரத்தில் மழைத் தூரியது. எப்படி படிக்காத அந்தக் காட்டு வாசிகளுக்கு இந்த அறிவு கிட்டியது? பார்க்கத் தெரிந்தால் இயற்கையே நமக்கு உதவி செய்யும்.


                   கல்வி அமைச்சு கொடுக்கும் பாடத்திட்டத்திற்கு அப்பால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எல்லா மாணவர்களும் நமக்கு வைரங்களாகத் தெரிவார்கள். நீங்கள் தோண்டத் தேவையில்லை. கொஞ்சம் பார்வையை மாற்றினால் போதும். வாழ்க்கை என்பது நிகழ்காலத் தொடர். உடனே தொடங்குங்கள். ஏங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு நாம் மட்டும் தான் துணை.