எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 9 ஜூலை, 2016

திறமையே தாரக மந்திரம்


             உலக மின்னல் ஓட்டக்காரர் உசேன் போல்டின் சாதனைதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அனுபவித்த சோதனையைய் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

            ஒரு தட்டு கோழி இறைச்சிக்காக ஆரம்பப்பள்ளியில் ஓடியவர் தான் இந்த உசேன் போல்டு. ஓட்டத்தில் ஆர்வமில்லாத உசேன் போல்டின் உண்மையான திறமையை அடையாளம் கண்ட அந்த ஆசிரியர் இல்லையென்றால் இன்று உசேன் போல்டும் இல்லை. கிபள்ளியில் எத்தனை உசேன் போல்டுகள் இருக்கிறார்கள் என்று யாருக்ககுத் தெரியும்? கடலில் எந்த துளி முதல் துளி என்று யாராவது சொல்ல முடியுமா?

             பார்க்கத் தெரிந்தால் பார்க்கும் மாணவர்களெல்லாம் திறமைசாளிகள் தான். உன் நண்பன் யாரென்று காட்டு நீ யாரென்று சொல்கிறேன். அதையே நானும் சொல்கிறேன். உன் ஆசிரியர் யாரென்று காட்டு, நீ யாரென்று நான் சொல்கிறேன். ஒரு குழந்தை பிறக்கும் போதே 9 வகையான அறிவுத்திறன்களைக் கொண்டே பிறக்கிறது. அந்த 9 வகையான அறிவுத்திறன்கள் என்ன என்று ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்திருத்தல் வேண்டும். இவ்விடயம் தெரிந்த ஆசிரியர்கள்தான் மாணவர்களின் தடயங்களைத் தேட முடியும். எல்லாத் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளங்கள் மாணவர்களின் தனித் திறமைகளிலிருந்தே தொடங்குகின்றது. காரணம் ஒரு சிறந்த மாணவன் பறக்கவில்லை, உருவாக்கப்படுகிறான். அந்த உருவாக்கத்திற்கு முக்கியக் காரணங்களில் ஒருவர்தான் ஆசிரியன்.

           ஒரு மீனின் திறமை நீந்துவது. ஒரு பறவையின் திறமை பறப்பது. ஒரு சிறுத்தையின் திறமை ஓடுவது. ஒரு யானையின் திறமை அதன் பலமே. இப்படி ஒவ்வொரு இனத்திற்கும் இறைவன் திறமையைப் படைத்தது உண்மையென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் நிச்சயம் திறமை உண்டு என்பது சத்தியம்.  கற்பூர புத்தியோ, கரி புத்தியோ அல்லது மெழுகு புத்தியோ, புத்தி என்பது ஒன்று தான். நிலை மாறலாம். ஆனால், நிஜம் மாறக்கூடாது.

           ஆறு ஆண்டுகள் முடிந்தபின் அவன் கையில் கிடைப்பது யு.பி.எஸ்.ஆர் முடிவுச் சான்றிதழ். வெற்றியோ தோல்வியோ சான்றிதழைப் பெற்றுக் கொண்டு அந்த மாணவன் அடுத்தக் கட்டதிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ஆறு ஆண்டுகள் முடிந்தப்பின் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக வெளியாடும் சான்றிதழ் அது. அதே ஆறு ஆண்டுகள் அந்த மாணவனை உருவாக்கிய ஒவ்வொரு ஆசிரியருக்கும் அந்த மாணவனின் மற்றத் தனித் தாறமைகள் என்பது தெரியாதா? ஒன்பது வகையான திறமைகளில் ஒன்று கூடவா அந்த மாணவனிடம் தென்படவில்லை? ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் தனித்தன்மையை அடையாளங் கண்டு தனியாக ஒரு சான்றிதழை வழங்கினால் அஃது எவ்வளவு உதவியாக இருக்கும்.

              இதனைப் பள்ளித் தலைமைத்துவம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது அறிவுரை அல்ல; அடுத்தத் தலைமுறையின் அடையாளம். ஒரு சிற்பி சிலையைச் செதுக்க எடுக்கும் சிறத்தை அல்லது பக்தி அதன் சிலையில் தென்படும். ஆறு ஆண்டுகள் உருவாக்கிய மாணவனின் வெளிப்பாடு அவனின் யு.பி.எஸ்.ஆர் முடிவு மட்டும் அல்ல என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும். தனித் திறமை என்ற அந்த நற்சான்றிதழில் எழுதப்பட்ட எழுத்துகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட விண்ணெழுத்துகள். அவை ஆசீர்வதிக்கப்பட்டவை.

             திறமைகள் திடீரென்று முளைத்தவை அல்ல. அவை விதைக்கப்பட்டவை. வைரத்தில் பொதிக்கப்பட்டவை. தோண்டித்தான் எடுக்க வேண்டும். வைரத்தை அறுப்பது போல், மாணவர்களின் திறமையை நுண்ணியமாக வரையறுக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும் இதற்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். நாம் கொடுக்கப்போகும் அந்த எழுத்துப்பூர்வமான வாக்குறுதி அந்த மாணவனின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக்கூடும். முதல் மாணவனாக இருந்தாலும் சரி கடை மாணவனாக இருந்தாலும் சரி ஆசிரியப் பெரு மக்கள் மாணவர்களின் திறமையை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை மாணவர்களின் ஆழ்மனதிலே விதைத்தல் வேண்டும்.

               எதிர்காலக் கல்வி தனி மாணவனின் திறமையைப் பொறுத்தே அமைய விருக்கின்றது. அதன் தான் சீற்றம் இன்றைய கல்வி நிலை மாற்றம். தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை என்பது திருமூலரின் அமுத வாக்கு. மாணவர்கள் தத்தம் தனித் திறமையை அறியும் பொழுது தமிழ்ப்பள்ளிகள் தனித்துவம் பெருகின்றன. எதை விதைக்கின்றோமோ அதுதான் முளையும். மாணவர் பிஞ்சு மனதிலே நம்பிக்கையை விதைக்கும் பொழுது நிச்சயமாக எதிர்காலத் தலைமுறை நம்மை வாழ்த்தும். தமிழ்ப்பள்ளிகள் தலை நிமிர தனித் திறமைகள் வாய்ந்த தலைமுறை மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் அடையாளங் காண வேண்டும். அடையாளங் கண்ட மாணவர்களை மிளிரச் செய்தல் வேண்டும்.


            நம்மைத் தேடி வந்த மாணவச் செல்வங்களை நாம் ஓடிச் சென்று அரவணைக்கும் வாய்ப்பு வரபிரசாதம் இறைவன் நமக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றான். மாணவர்களின் திறமையே தாரக மந்திரம் என்று ஆசிரியர்கள் உயிர்த்தெழுவோம்...தமிழுக்கும்..தமிழ்ப்பள்ளிக்கும் முரசொலிப்போம்.