எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

உலகத் தரத்தை நோக்கி நம் உத்தமத் தமிழ்ப்பள்ளிகள்...


                   தமிழனின் பெருமை தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் உள்ளது. அன்று தொன்மையில் இருந்தது இன்று சரித்திரம். இன்று தொடர்ச்சியில் நாளை நிரந்தரம். தொன்மை என்பது ஆரம்பம், தொடர்ச்சி என்பது நிஜ பிம்பம். தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் அப்படித்தான். 200 ஆண்டுகளைக் கடந்து இந்நிலையில் தொடர்ச்சி என்ற வளர்ச்சி மிகவும் அவசியமாகிறது. உலகத் தரம் என்பது வெகுதூரமில்லை. உத்தமத் தமிழ்ப்பள்ளிகள் எத்தனை தயாராக இருக்கின்றன என்பது தான் இப்பொழுது கேள்வி?

                   கூகல் என்கிற மிகப்பெரிய சாதனையை உருவாக்கிய லாரி பேஜ் தன் சிறு வயதில் நிக்கோலா டேஸ்லோ என்ற விஞ்ஞானியைப் பற்றிப் படித்து விட்டு கண்ணீர் விட்டிருக்கிறார். நிக்கோலா டேஸ்லோ தோமஸ் ஆல்வா எடிசனிடம் துணை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். எடிசனின் பெரும்பாலான கண்டுபிடிப்பிற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம். ஆனால், கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து இறந்தவர். லாரி பேஜ் அழுததைப் பார்த்த அவர் அப்பா என்ன விடயம் என்று விசாரித்திருக்கிறார். அதற்கு லாரி பேஜ், ‘எப்படி வாழ்ந்தோம், என்னவெல்லாம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, அதனை எப்படி வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தோம் என்பது தான் முக்கியம் என்று அந்தச் சிறு வயதிலேயே லாரி பேஜ் கூறியிருக்கிறார்.

                   லாரி பேஜ் கூறிய அந்தச் செய்தியே நம் தமிழ்ப்பள்ளிக்கும் ஒத்து வரும். இனியும் நம் பெருமையை நாமே கூறிக் கொண்டிருக்காமல், உலகம் நம் தமிழ்பள்ளியைப் பற்றிப் பேச வேண்டும். பேச வைக்க வேண்டும். அதற்கு உலகத் தரம் மிக முக்கியம். உலகம் முழுதும் தமிழ்ப் பேசுகிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும் தான் தமிழ் வாழ்கிறது என்று அன்று அறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதுபோல, உலகத்தில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கலாம், ஆனால் மலேசியாவில் மட்டும் தான் என்று தயங்காமல் சொல்ல வைத்தால் அதுவே தமிழின் தொடர்ச்சி.

                   நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் 10 ஆயிரம் தமிழாசிரியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பத்தாயிரம் தமிழாசிரியர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழ்ப்பள்ளியை ஒரு தமிழாசிரியராவது வாழ வைக்க வேண்டாமா?         உலக அளவில் நமக்கென்று ஒர் உன்னத அடையாளத்தை ஏற்படுத்த வேண்டாமா? உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தமிழ்ப்பள்ளிகள் ஒளிர வேண்டாமா? மிளிர வேண்டாமா? அப்படியொரு நம்பிக்கையை ஊட்டத்தான் இச்சிந்தனைக் கட்டுரையை வரைந்தேன்.    
                
                   பினாங்கு மாநிலத்தில் உள்ள இராமகிருக்ஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்காங் சென்று அறிவியல் கண்டுபிடிப்பில் 7 தங்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமைச் சேர்த்ததை மறக்க முடிமா? முதன் முறையாக உலகமே திரும்பிப் பார்த்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் திழைப்பதற்குள் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கிலாடி தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த குமாரி வாணிஸ்ரீ ஓர் ஆசிரியர் 140 நாடுகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருப்பது பற்றி நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜிப் அவர்களே பாரட்டியிருப்பது எவ்வளவுப் பெருமையாக உள்ளது. அடுத்த ஆண்டு (2016) மார்ச் 16-ஆம் நாள் அன்று  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அவர் வெற்றிப் பெற்றால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு என்பது இன்னொரு செய்தி. அவர் வெற்றிப் பெற மலேசியர்கள் அனைவரும் பிரார்த்னைச் செய்வோம்.

                   உலகத் தரத்தைத் தொட்ட இன்னொரு பள்ளியாக காஜாங் தமிழ்ப்பள்ளி தன்னுடைய அடையாளத்தை உலகத்திற்குப் பறை சாற்றியிருக்கிறது. உலகத் தரத்திலான இண்டரெக் போட்டியில் 30 உலக நாடுகளை வீழ்த்தியது எவ்வளவுப் பெரியச் சாதனை? மீண்டும் இன்னொரு முறை உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. உலகத் தரத்தைக் கையிலெடுத்திருக்கும் இவ்வுத்தமத் தமிழ்ப்பள்ளிகளைப் போல் நிறையப் பள்ளிகள் மலர வேண்டும்..மீட்சிப் பெற வேண்டும். தமிழ்ப்பள்ளிகளைத் தலையெடுக்க வைத்த இவர்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.    நாட்டில் இருக்கும் 524 பள்ளிகளில் இது வரை கேமரன் மலையில் உள்ள ரிங்லெட் தமிழ்ப்பள்ளி மற்றும் ஜொகூரில் உள்ள லாடாங் ரிம் தமிழ்ப்பள்ளி மட்டுமே உயர்தரப் பள்ளிகளாக (SBT) அங்கீகாரம் பெற்றுள்ளன. 522 பள்ளிகளுக்கு அவர்கள் முன்னோடியாக அடையாளம் பெற்று விட்டனர்.  


                   வைரமுத்துவிடம் ஒரு இலட்சியம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘படித்து விட்டு ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பது அல்ல இலட்சியம். மாறாக, தேர்ந்தெடுத்த அத்துறையை வாழ வைப்பது தான் இலட்சியம் என்றார். ஆசிரியர் துறையை வாழ வைத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற ஆசிரியர்களுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. பத்தாயிரம் தமிழாசிரியர்களில் தனித்து நின்றவர்கள் தான் உலகத் தரத்தை எட்ட முடியும். சமீபத்தில் வந்த ‘The good dinasour’ என்ற  ஆங்கில எனிமேக்ஷன் படம் பார்க்க வேண்டியவை. அந்த சின்ன டைனசோர் தனக்கென்று ஒர் அடையாளத்தை ஏற்படுத்தப் போராடும் வாழ்க்கை தான் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அது படம் அல்ல,பாடம். 2016-ஆம் ஆண்டில் நிறைய ஆடையாளங்களைப் பார்க்க ஆவலாக உள்ளது. அடித்தளம் உருவாகி விட்டது. இனி, அடுத்தக் கட்டத்திற்கு ஆசிரியர்கள் தயாராகுங்கள்.