எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

மாற்றத்தை நோக்கி நெடுந்தூரப் பயணம்...


                     தமிழ்ப்பள்ளிகள் தரணி ஆள வேண்டுமாயின் தனித்துவம் வேண்டும். அந்தத் தனித்துவத்தைக் கொடுப்பது தான் காலத்திற்கு ஏற்ற மாற்றம். மலேசிய நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமும் அப்படித்தான். ஆகக் கடைசியாக வெளியிடப்பட்ட மலேசியக் கல்வி உருமாற்றத் திட்டம் (2013 – 2025) மலேசியக் கல்வி வளர்ச்சியில் பெரும் அலைகளைக் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இம்மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு அதனோடு ஒட்டிச் செல்வது சாலச் சிறந்தது. இவ்வுருமாற்றுத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 11 படிநிலைகளை ஆய்ந்து அறிந்திருப்பது நம் கடமையாகும். முதல் அலை 2015-ஆம் ஆண்டோடு முடிந்து இப்பொழுது இரண்டாம் அலை தொடங்கி இருக்கிறது.

                   கடலிலிருந்து வருவது சுனாமி அலை. கல்வி அமைச்சில் இருந்து வருவது கல்வி உருமாற்று அலை. அதனை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். நாட்டில் இருக்கும் 524 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இவ்வலை நிச்சயமாக தவழ்ந்து விட்டுத் தான் செல்லும். தத்தளிக்காமல் தாவிக் (மாற்றம்) கொண்டால் நிச்சயமாகத் தரணி ஆள முடியும். மாற்றம் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதனை ஏற்றுக் கொண்டு செயல் ஆற்றா விட்டால் என்னப் பயன்? என்னுடையச் சிந்தனையில் இது தான் சரியான நேரம்.

                     ஒரு வேலையைச் செய்து கொண்டே இன்னொரு வேலையைச் செய்து முடிப்பது ஒரு யானையைக் கொண்டு இன்னொரு யானையைப் பிடிப்பது போலாகும் என்கிறார் திருவள்ளுவர். இதனை வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்,யானையால் யானையாத் தற்று என்று மொழிவதைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்று உலக முழுவதும் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் அவர்கள் மடினாவிலிருந்து மக்காவிற்கு மாற்றலாகிச் சென்றது தான். அன்று அன்னல் அவர்கள் ஏற்றுக் கொண்ட அந்த மாற்றம் தான்  இன்று கோடானக் கோடி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

                   மேலை நாடுகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி விட்ட 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைக் கற்றல் இப்பொழுது நம் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளியில் ஒரு வகுப்பாவது இந்த 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைக் கற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். இதற்கு அடிப்படையாக இருப்பது இணையமும் கணினியின் செயலாக்கமும். இணையத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் சுயமாக கற்க வேண்டும் என்பதே இக்கொள்கையின் நோக்கமாகும். இதற்கு ஏற்கனவே கல்வி இமைச்சு வை.தி.எல்(YTL Corporation) நிறுவனத்தை நியமித்து எல்லாப் பள்ளிகளிலும் ப்ரோக்(Frog) என்கிற கல்வித் தளத்தை நிறுவி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் சுயமாகத் தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் இலவசமாக இத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். பாடம், பொது அறிவு, புத்தாக்கச் சிந்தனை, இணையப் புத்தகம்,மின்னஞ்சல் வசதி போன்ற இன்னும் நிறைய வசதிகளைச் சொல்லலாம்.

                   இம்மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு செயல்படும் பள்ளிகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பின் நம் பிள்ளைகள் பின்தங்கி விடுவர். பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் வாய்ப்புகள் நம்மை விட்டு விலகி விடும். தன் அப்பா தசரதன்  மன்னன் சொன்ன ஒரே காரணத்திற்காக இராம பிரான் 12 ஆண்டுகள் வனவாசம் சென்றார். பிறகு, இதுவே இராமாயணம் பிறப்பதற்குக் காரணமாக இருந்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது இக்காவியத்தின் வழி புலப்படுகிறது. அது போல, நமது கல்வி அமைச்சு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் நன்மைக்கே என்று எல்லாத் தமிழ்ப்பள்ளிகளும் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

                   ஒரு பள்ளியின் வளர்ச்சி அந்தப் பள்ளியின் தலைமைத்துவத்தின் தரத்தைப் பிரதிபலிக்கிறது. தலைமையாசிரியர், துணைத்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெரு மக்களின் ஒட்டு மொத்த ஒத்துழைப்பே ஒரு பள்ளியின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதில் ஒன்று சோடைப் போனாலும் வளர்ச்சி வெகு தூரம் தான். அதனால் தான் மலேசியக் கல்வி உருமாற்றத் திட்டத்தில் பள்ளியின் தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைமையாசிரியர் பதவியானது முன்புபோல் வயதானப் பிறகு கொடுக்கப்படுவதில்லை. மாறாக, திறமை இருப்பின் என்.பி.கியு.இ.எல் என்ற பிரத்தியேகப் பயிற்சியை முடித்தவர்களுக்கு உடனடியாகத் தலைமையாசரியர் பதவி வழங்கப்படுகிறது. வயது கட்டுப்பாடு கிடையாது. இம்மாற்றம் ஆரம்பத்தில் பெரிய சலசலப்பு ஏற்படுத்தினாலும் காலத்தின் கட்டாயத்தால் இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டது.


                   அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் டைனசோர் அழிந்தக் கதைதான் நமக்கு. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனசோர்கள் இப்பொழுது எங்கே? அந்த உயிரினம் அழிந்ததற்கு அறிவியல் பூர்வமாக நிறையக் காரணம் இருந்தாலும் மனோதத்துவ அறிஞர்கள் கூறும் ஒரே கருத்து காலத்திற்கு எற்ப மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதது தான். அழிவிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளாமல் தங்களுக்குள்ளே போராட்டம் நடத்தியதால் ஒட்டு மொத்தமாக எல்லா டைனசோர்களும் அழிந்தன. அந்த நிலைமை நம் பள்ளிகளுக்கு நிச்சயமாக வரக் கூடாது. வருமுன் காக்க ஒன்றினைவோம். மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய வழிக்கு வித்திடுவோம். புத்தாக்கச் சிந்தனையில் புதியத் தளம் அமைத்திடுவோம்.