எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

உரக்கச் சொல்லுங்கள்...விழிக்கச் சொல்லுங்கள்... நான் ஒரு தமிழாசிரியன் என்று...



                             கெடா, சுங்கைப்பட்டாணி மஹா ஜோதி தமிழ்ப்பள்ளியில் சமீபத்தில் ஓர் ஆசிரியைப் பெற்றோரால் அறையப்பட்டச் செய்தி பத்தாயிரம் தமிழாசிரியர்களின் வீட்டு வாசலில் எறியப்பட்ட ஒரு தலைப்புச் செய்தி. இந்தச் செய்தி ஒவ்வொரு தமிழாசிரியனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மாறாக, உணர்ச்சி வயம் அல்ல. போற்ற வேண்டிய ஆசிரியர்கள் இன்று தூற்றப்படுகிறார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சேற்று நீராகி விட்டார்கள் போலும் ஆசிரியர்கள். இந்த தமிழ்ச் சமூதாயத்தின் வளர்ச்சிக்கும், சிந்தனை மாற்றத்திற்கும் ஆணிவேராக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இன்று நாணிக்கோணி இருக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டிருக்கிறது.

                             மலாய் சமூகத்தின் வரலாற்றிலே நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர் சமூகம் ஏற்படுத்திய வரலாற்று சிந்தனைப் புரட்சி. இந்த வரலாற்றுச் சிந்தனைப் புரட்சி 1930-ஆம் மற்றும் 1940-ஆம் ஆண்டுகளில் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பயின்ற ஆசிரியர்களின் கூட்டு முயற்சியாகும். இது வரை பிரிந்தே வாழ்ந்த மலாய்ச் சமூகம் முதன் முதலாக வெள்ளையர்களின் மலாயன் யூனியன் என்ற திட்டத்தை எதிர்க்க புறப்பட்டதற்கு காரணம் ஆசிரியர்களின் சிந்தனைப் புரட்சியும் ஒரு முக்கியக் காரணம். சரித்திரத்தில் பிரிந்தே வாழ்ந்த அந்தச் சமூகத்தையே மாற்ற முடியும் என்றால் வாழ்ந்து பிரிந்த நம் சமூகத்தை மாற்ற முடியாதா என்ன?

                             ஆக, ஆற்ற வேண்டியக் கடமைகள் நம் கண் முன்னே இருப்பதால் நாம் தூற்ற வேண்டும்? திருப்பி அடிக்க நானும் ரௌடிதான் என்று சொல்லப் போகிறோமா அல்லது நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறோமா? உலகத்திற்குத் தான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருக்க வேண்டுமாயின் தன்னுள் இருக்கின்ற புழுவை உருமாற்றம் செய்து தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அஃது சிறக்கும். ஆசிரியர்களும் அப்படித்தான். சிறக்க வேண்டுமாயின் முதலில் துறக்க வேண்டும். இதை உரக்கச் சொல்லுகிறேன்...விழித்துக் கொள்ளுங்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. தனி ஒரு ஆசிரியனுக்கு அவமானம் ஏற்படில் விழித்துக் கொள்வோம் நாம் என்கிறேன் நான்.
                             பனித்துளியாய் இல்லாமல் வழித்துணையாய் இருப்போம். குறைகளை நுரைகளாக்கி விட்டு அணி திரள்வோம் ஆகாயத்தை நோக்கி. நம்மைப் பற்றி நிரூபிக்க இது தான் சரியானத் தருணம். நாம் ஆற்ற வேண்டிய கடமை ஆயிரம் இருக்கிறது. அதில் ஒன்றையாவது நிஜமாக்கிக் காட்டுவோம். அறைந்தவன் யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இனி அறை வாங்குபவன் நாமாக இருக்கக் கூடாது.

                             ஒரு குட்டிக் கதை. இரு கிராமங்களுக்கிடையே ஒரு அடர்ந்தக் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு இராஜ நாகம் வாழ்ந்து வந்தது. இரு கிராமத்து மக்களும் அந்தக் காட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அப்படித் தாண்டிச் செல்லும் பொழுது நிறைய மனிதர்களை அது தீண்டியது. இறப்பும் அதிகரித்தது. மக்கள் பீதியில் வாழ்ந்தார்கள். சில காலம் கழித்து அந்த வழியே ஒரு முனிவர் வந்தார். அவரையும் அந்த இராஜ நாகம் தீண்ட முற்பட்டது. முனிவர் தன்னுடைய சக்தியால் அந்த இராஜ நாகத்தை அடக்கி அடிமைப்படுத்தினார். அந்நாகத்திற்கு சில அறிவுரைகளை எடுத்துக் கூறினார். இராஜ நாகமும் அதன்படி நடந்துக் கொண்டது. காலப் போக்கில் மீண்டும் ஒரு முறை அம்முனிவர் அவ்வழியே சென்றுக் கொண்டிருந்தார்.

                             அப்பொழுது அவர் பார்த்த ஒரு காட்சி அவரைக் கலங்கச் செய்த து. ஊரே பார்த்து பயந்த அந்த இராஜ நாகம் அடிப்பட்டு உடல் மெலிந்து பார்க்கப் பரிதாபமாக இருந்தது. என்ன நடந்தது என்று அம்முனிவர் வினவினார். அதற்கு அந்த நாகம், ‘நீங்கள் சொன்னதிலிருந்து நான் யாரையும் தீண்டுவது இல்லை. யார் என்னை அடித்தாலும் நான் சீறுவது கூட இல்லை.எல்லோரும் என்னை மிதித்தும் அவமதித்தும் நடந்துக் கொண்டனர். இதைக்கேட்ட முனிவருக்கு கோபம் வந்தது. உன்னிடம் என்ன கூறினேன்? நீ யாரையும் தீண்டக் கூடாது. பயமுறுத்தக் கூடாது என்று தானே சொன்னோன்.இப்படி அடி வாங்கி, உண்ண உணவின்றி வாழ வேண்டும் என்று சொல்லவில்லையே. முட்டாள் நாகமே, முதலில் உன்னை நீ காப்பாற்றிக் கொள்! என்றார்.


                             இது வெறும் கதையல்ல; நிஜம். இராஜ நாகத்தின் அடித்தளமே பயம் தான். அது இல்லையென்றால் வாழ்வில் அர்த்தமில்லை. அது போல், ஓர் ஆசிரியருக்கு அடித்தளம் மரியாதை. அதை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அந்த மரியாதையைப் பெற்று விட்டால் எல்லா ஆசிரியர்களும் சிறந்த ஆசிரியர்களே! இழந்து விட்ட அந்த மரியாதையை நாம் மீட்டெடுக்க வேண்டும். மரியாதை சொல்லில் இருப்பதில்லை. செயலில் இருக்கிறது. நம்முடைய செயல் தான் நமக்கு நண்பன் அல்லது எதிரி. 55% சதவிகிதம் பிள்ளைகளை நம்மிடம் அனுப்பிவிட்டு நம்மை நம்பிக்கையோடு ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பெற்றோருக்கு உரக்கச் சொல்லி விடுங்கள் நாங்கள் நான் உங்களின் ஒரே நம்பிக்கை என்று. 

                                     தடம் மாறலாம், தளம் மாறாது. தடை மீறலாம், படை ஒன்று தான். தமிழ் ஆசிரியப் படை. நாங்கள் இருக்கிறோம் என்று உரக்கச் சொல்லுங்கள், உரிமையோடு சொல்லுங்கள், சமூதாயத்தை விழிக்கச் சொல்லுங்கள். தமிழாசிரியர்களின் ஒற்றுமையே தமிழினத்தின் ஒற்றுமைக்கு அடித்தளம். வீறு கொண்டு எழும் ஒவ்வொரு தமிழ் ஆசிரியனுக்கும் இக்கட்டுரைச் சமர்ப்பணம்.